இலங்கை அணித்தலைவி சமரி அட்டபத்துவின் அபார சதத்தின் உதவியோடு இந்திய மகளிர் அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை கடைசி பந்துவரை போராடி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
ஏற்கனவே முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஒருநாள் தொடரை இழந்த இலங்கை மகளிர் அணி இந்த ஆறுதல் வெற்றியின் மூலம் வைட்வொஷ் தோல்வி ஒன்றை தவிர்த்துக் கொண்டது.
>> இறுதி நேரத்தில் இந்திய அணிக்கு வெற்றியை தாரைவார்த்த இலங்கை மகளிர் அணி
அதேபோன்று இந்த வெற்றியின் மூலம் இலங்கை மகளிர் அணி தேவையான ICC மகளிர் சம்பியன்ஷிப் புள்ளிகளை பெற்றுக்கொண்டது. இந்த புள்ளிகள் ICC மகளிர் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற முக்கியமானது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி இலங்கை மகளிர் அணியால் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுக்க முடிந்தது.
போட்டியின் இரண்டாவது பந்திலேயே ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை ஜமிமா ரொட்ரிகஸை ஓட்டமேதும் பெறாமல் இடதுகை மிதவேகப்பந்து வீராங்கனை உதேஷிக்கா பிரபோதனி வெளியேற்றினார்.
எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்மிரிதி மந்தனா மற்றும் அணித்தலைவி மிதாலி ராஜ் 102 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இந்திய அணியை கட்டி எழுப்பும் துடுப்பாட்டம் ஒன்றை வெளிப்படுத்திய மிதாலி ராஜ் ஒருநாள் போட்டிகளில் தனது அதிகூடிய ஓட்டங்களாக ஆட்டமிழக்காது 125 ஓட்டங்களை பெற்றார். மறுபுறம் மந்தனா பெற்ற 51 ஓட்டங்களும் அந்த அணி சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க உதவியது.
இதன்படி இந்திய மகளிர் அணி 50 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை பெற்றது. இதன்போது இலங்கை சார்பில் 7 பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டதோடு அதில் ஐந்து வீராங்கனைகள் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு ஹசினி பெரேரா மற்றும் சமரி அட்டபத்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 101 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
இதில் சமரி தனது 4 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். 133 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 13 பௌண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 115 ஓட்டங்களை பெற்றார். மறுபுறம் ஹசினி 70 பந்துகளில் 45 ஓட்டங்களை பெற்றார்.
இந்நிலையில் மத்திய வரிசை வீராங்கனைகள் சோபிக்காத நிலையில் இலங்கை மகளிர் அணி கடைசி நேரத்தில் சற்று தடுமாற்றம் கண்டது. எனினும் கடைசி 12 பந்துகளுக்கும் 13 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது பின்வரிசை வீராங்கனை கவிஷா டில்ஹாரி திரில் ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தினார்.
>> கட்டாய வெற்றிக்காக ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை அணி
இதன்போது 49 ஆவது ஓவரில் டில்ஹாரி பௌண்டரி ஒன்றை பெற்றதால் கடைசி ஓவருக்கு இலங்கை அணிக்கு ஆறு ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. அப்போது டில்ஹாரி கடைசி பந்துக்கு பௌண்டரி ஒன்றை விளாசி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் இலங்கை மகளிர் அணி 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. இதன்போது டில்ஹாரி 7 பந்துகளில் ஆட்டமிழக்காது 12 ஓட்டங்களை பெற்றார்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி எட்டிய மிகப் பெரிய வெற்றி இலக்கு இதுவாகும். இதற்கு முன்னர் 2013 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை 239 ஓட்ட இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது.
அதேபோன்று இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் பெற்று தோல்வி அடைந்த போட்டியாகவும் இது சாதனை படைத்தது.
அடுத்து இலங்கை – இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட டி-20 தொடர் எதிர்வரும் புதன்கிழமை (19) இதே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ஸ்கோர் விபரம்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<