ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர்கள் பரிந்துரையில் வெல்லாலகே!

ICC Player of the Month

37
ICC Player of the Month

ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர்கள் விருதுக்காக இலங்கை ஆடவர் அணியின் துனித் வெல்லாலகே மற்றும் மகளிர் அணியின் ஹர்சிதா சமரவிக்ரம ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடிய துனித் வெல்லாலகே வெளிப்படுத்திய சகலதுறை பிரகாசிப்பின் அடிப்படையில் இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

>>பெடிங்கமின் அதிரடி ஆட்டத்துடன் வெற்றியீட்டிய தென்னாபிரிக்கா A அணி<<

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 108 ஓட்டங்கள் மற்றும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சகலதுறை பிரகாசிப்பை வெளிப்படுத்தினார். இதில் முதல் ஒருநாள் போட்டியில் தன்னுடைய அதிசிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்திய இவர், ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் 39 ஓட்டங்களை பெற்றதுடன், மூன்றாவது ஒருநாள் போட்டியில் பந்துவீச்சில் தன்னுடைய அதிசிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இவருடன் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜோர்டன் சீல்ஸ் மற்றும் தென்னாபிரிக்க அணியின் கேஷவ் மஹாராஜ் ஆகியோர் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர்கள் விருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் மகளிர் அணியை பொருத்தவரை அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்திய ஹர்சிதா சமரவிக்ரம ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து அணிக்கு எதிரான T20I தொடரில் 86 மற்றும் 65 என ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், ஒருநாள் தொடரில் 19, 105 மற்றும் 48 ஓட்டங்களை பெற்று, தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீராங்கனையாக மாறியிருந்தார்.

ஹர்சிதா சமரவிக்ரமவுடன் அயர்லாந்தின் ஓர்லா பிரெண்டெர்கெஸ்ட் மற்றும் அயர்லாந்தின் கெபி லிவிஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<