தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான முதலாவது டி-20 போட்டியில் அனைத்து துறைகளிலும் சோபிக்கத் தவறிய நிலையில் 7 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள 2020 மகளிர் T20 உலகக் கிண்ணம்
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி)…
கேப் டவுனில் இன்று (01) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவி சமரி அத்தபத்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். எனினும், 20 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த இலங்கை அணி இடைவிடாது விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஆரம்ப வீராங்கனை ஹாசினி பெரேரா 41 பந்துகளில் பெற்ற 27 ஓட்டங்களுமே இலங்கை மகளிர் அணி சார்பில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும். இவர் தவிர மத்திய வரிசையில் இமல்கா பெரேரா 24 பந்துகளில் ஆட்டமிழக்காது பெற்ற 25 ஓட்டங்களுமே இலங்கை துடுப்பாட்ட வரிசையில் பெற்ற ஒரே இரட்டை இலக்க ஓட்டங்களாகும்.
எனினும், இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களுக்கும் துடுப்பெடுத்தாடி 8 விக்கெட்டுகளை இழந்து 90 ஓட்டங்களையே பெற்றது. தென்னாபிரிக்க மகளிர் சார்பில் அணித்தலைவி வான் நெய்கர்க் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
பதிலெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்கா சார்பாக ஆரம்ப வீராங்கனையாக வந்த நெய்கர்க் இலங்கை அணியின் எதிர்பார்ப்பை சிதறடித்தார். இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் ஒருமுனையில் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தபோதும் நெய்கெர்க் மறுமுனையில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி தனது அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.
முதல் பயிற்சிப் போட்டியில் தென்னாபிரிக்காவுடன் மோதும் இலங்கை அணி
இந்த ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட்…
இதன்மூலம் தென்னாபிரிக்க மகளிர் அணி 14.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. நெய்கெர்க் 55 பந்துகளில் 13 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகியாகவும் தெரிவானார்.
இலங்கை அணி சார்பில் மிதவேகப்பந்து வீராங்கனை அச்சினி குலசூரிய, நிலக்ஷி டி சில்வா மற்றும் இனோகா ரணவீர தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் தென்னாபிரிக்க மகளிர் அணி 1-0 என முன்னிலை பெற்றது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை ஜொஹன்னஸ்பேர்க்கில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
முடிவு – தென்னாபிரிக்க மகளிர் 7 விக்கெட்டுகளால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<