இலங்கை மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான போட்டியாக அமைந்த இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில், பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் என்பவற்றில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. எனவே அவ்வணி நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரை 3-0 என தம்வசமாக்கியுள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து அணி, மகளிர் உலக கிண்ணத்தில் விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இப்போட்டி மகளிர் உலக கிண்ணத்திற்கு விளையாட இருக்கும் அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளில் ஒன்று என்ற காரணத்தினாலும், நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததன் காரணமாக  தொடரை சமப்படுத்த உள்ள இறுதி வாய்ப்பு என்கிற  காரணத்தினாலும், இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைக்கு இலங்கை மகளிர் அணி நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணித்தலைவி இனோக்கா ரணவீர முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

அதன்படி, நிபுனி ஹன்சிகா, ஹாசினி பெரேரா ஆகிய தனது வழமையான ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளுடன் இலங்கை மகளிர் அணி தனது துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்தது. ஆரம்பத்திலேயே தடுமாற ஆரம்பித்த இலங்கை மகளிர் அணி, 22 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் தனது முதலாவது விக்கெட்டினை பறிகொடுத்தது. இதனால், ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையாக வந்த ஹாசினி பெரேரா 8 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறி ஏமாற்றினார்.

இவரின் ஆட்டமிழப்பினை தொடர்ந்து, கடந்த போட்டிகள் போன்று இப்போட்டியிலும் குறைந்த ஓட்ட வேகத்தில் இலங்கை அணி ஓட்டங்களை பெறத்தொடங்கியது. இந்நிலையில் சற்று சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திக்கொண்டிருந்த மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனையான நிப்புனி ஹன்சிக்காவும், டேனியல் ஹசேலின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேற, இலங்கை மகளிர் அணி மேலும் தடுமாற தொடங்கியது.

இந்த தருணத்தில் இங்கிலாந்து மகளிர் அணியின் சுழல் பந்து வீச்சாளர்களை தாக்குபிடிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இலங்கை மகளிர் அணி பறிகொடுத்து. எனவே, 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரமே இலங்கை அணி பெற்றது.  இத்தொடரில் இலங்கை அணி பெற்ற குறைந்த மொத்த ஓட்ட எண்ணிக்கை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய வீராங்கனைகள் பெரிதாக பிரகாசிக்காத நிலையில் ஆரம்ப துடுப்பாட்ட  வீராங்கனையாக வந்த நிப்புனி ஹன்சிக்கா மாத்திரம் அதிகபட்சமாக 29 ஓட்டங்களை இலங்கை மகளிர் அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட இங்கிலாந்து மகளிர் அணியின் சுழல் பந்து வீச்சாளர்களான லாரா மார்ஸ், டேனியல் ஹசேல், அலெக்ஸ் ஹார்ட்லி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், நட்டாலி ஸ்கீவர், ஜோர்ஜியா எல்விஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

Highlights - 3rd ODI between Sri Lanka women vs England women

இதனையடுத்து, டேனியல் ஹசேல் தலைமையிலான இன்றைய இங்கிலாந்து அணி வெற்றி இலக்கான 162 ஓட்டங்களை பெறுவதற்காக தனது வழமையான ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளான லாரன் வின்பீல்ட், டம்மி பீமொன்ட் ஆகியோருடன் களமிறங்கியது. அதில் லாரன் வின்பீல்ட் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சொற்ப இணைப்பாட்டங்களிற்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து மகளிர் அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது. எனினும், டம்மி பீமொன்ட் மற்றும் பிரான் வில்சன் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தின் காரணமாக 29.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்று அவ்வணி வெற்றி இலக்கினை அடைந்தது.

இவ்விலக்கினை அடைய பெரிதும் உதவிய ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான டம்மி பீமொன்ட் அரைச்சதம் கடந்து 79 பந்துகளிற்கு 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்ளடங்களாக 78 ஓட்டங்கள் பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பாக ஒசாதி ரணசிங்க  6 ஓவர்களை வீசி 26 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், இனோகா ரணவீர, சாமரி அத்தபத்து, சுகந்திக்க குமாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

தொடரை ஏற்கனவே, இங்கிலாந்து மகளிர் அணி கைப்பற்றியுள்ள நிலையில் இரண்டு அணிகளும் மோதும், நான்காவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

போட்டி முடிவு இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி