இலங்கை மற்றும்  ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று ஆட்ட நேர முடிவின் பொழுது இலங்கை அணி 90 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதலாவது டெஸ்ட் போட்டியை ரங்கன ஹேரத் தலைமையில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணித் தலைவர் கிரேம் கிரீமர் முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார். இதன் படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி 112 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்காட்டன நிலையில் இருந்தது.

இலங்கை அணி சார்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்சய டி சில்வா 197 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதோடு இலங்கை அணியின் ஓட்டங்களை உயர்த்தி களத்தில் இருக்கிறார்.

ஐந்தாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய உபுல் தரங்க முதல் இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகளை விளாசி அதிரடி கட்டினார். அத்துடன் நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய உபுல் தரங்க மற்றும் தனஞ்சய டி சில்வா இணைந்து, ஐந்தாவது விக்கெட்டுக்காக 143 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொடுத்தனர்.

இதற்கு முன்னர் இலங்கை அணிக்காக ஐந்தாவது விக்கெட்டுக்காக 1996இல்அசங்க குருசிங்க மற்றும் ஹஷான் திலக்கரத்ன இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த 114 ஓட்ட சாதனையை முறியடித்து இந்த ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் உபுல் தரங்க துரதிர்ஷ்டமாக 79(155) ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஜிம்பாப்வே அணித்தலைவர் கிரேம் கிரீமர் பந்து வீச்சில் மசகட்ஸாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஜிம்பாப்வே அணி சார்பாகப் பந்து வீச்சில் குறிப்பிடும் வகையில் மசகட்ஸா 8 ஓவர்களுக்கு 18 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதே நேரம் டொனால்ட் திரிபனோ, க்றிஸ் மற்றும் ஜிம்பாப்வே அணித்தலைவர் கிரேம் கிரீமர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றிக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி (முதல் இன்னிங்ஸ்) : 290/5 (90) கௌஷல் சில்வா 37(73), திமுத் கருணாரத்ன 26(43), குசல் மென்டிஸ் 26(39), உபுல் தரங்க 79(155), தனஞ்சய டி சில்வா 100*(197), அசேல குணரத்ன 13*(29), ஹெமில்டன் மசகட்ஸா 18/2(08), க்றிஸ் 65/1(18), டொனால்ட் திரிபனோ 63/1(22), கிரேம் கிரீமர் 57/1(18)

நாளை போட்டியின் 2ஆவது நாளாகும்.

*தொடர்ந்தும் உடனுக்குடன் இப்போட்டியின் ஓட்ட விபரங்களை அறிந்து கொள்ள ThePapare.com உடன் இணைந்திருங்கள்