தடுமாறும் இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுப்பார்களா ரொஷேன், திக்வெல்ல?

757
Photo - Getty Images

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் பர்படோஸில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்திலும் மழையின் குறுக்கீடு காணப்பட்டிருந்தது. 59 ஓவர்களே வீசப்பட்ட இரண்டாம் நாளுக்கான ஆட்டத்தில் இரண்டு அணிகளினதும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தனர்.

மழை நாளில் மேற்கிந்திய தீவுகளை அச்சுறுத்திய இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள்

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள்..

சனிக்கிழமை (23) பகலிரவு ஆட்டமாக தொடங்கியிருந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலும் ஆட்டத்திற்குரிய சில மணித்தியாலங்கள் மழையினால் இல்லாது போயிருந்தன. மழை இல்லாது போது நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில்  முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சேன் டோவ்ரிச் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரின் பெறுமதியான இணைப்பாட்டத்தோடு 46.3 ஓவர்களுக்கு முதல் இன்னிங்சுக்காக 5 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில் ஆட்டத்தின் முதல் நாள் நிறைவுக்கு வந்தது. களத்தில் அரைச்சதம் தாண்டிய சேன் டோவ்ரிச் 60 ஓட்டங்களுடனும், மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (24) தொடர்ந்த இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையினால் சிறிது நேரம் தாமதித்தே ஆரம்பித்திருந்தது. இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டர்சேன் டோவ்ரிச் ஜோடி ஆறாவது விக்கெட்டுக்கான தமது இணைப்பாட்டத்தினை அதிகரித்து வலுச் சேர்த்தது. இந்த இணைப்பாட்டத்திற்குள் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் தன்னுடைய 7 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை பூர்த்தி செய்திருந்தார். அதோடு அணியின் மொத்த ஓட்டங்களையும் 150 இணை தாண்டியது.

தொடர்ந்து, 115 ஓட்டங்கள் வரை நீடித்த இந்த இணைப்பாட்டம் லஹிரு குமார சேன் டோவ்ரிச்சினை LBW முறையில் ஓய்வறை அனுப்ப நிறைவுக்கு வந்தது. லஹிரு குமாரவின் ஆட்டமிழப்புக்கு சேன் டோவ்ரிச் மூன்றாம் நடுவரிடம் மேன்முறையீடு செய்தும் அது நிராகரிக்கப்பட அவர் 71 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு நடந்தார்.

டோவ்ரிச்சினை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கையின் வேகப்பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி சடுதியான முறையில் விக்கெட்டுக்களை பறிகொடுக்க தொடங்கியது. இதன்படி, 69.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸுக்காக 69.3 ஓவர்களில் 204 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஒரு கட்டத்தில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து மோசமாக இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியினை நல்லதொரு நிலைக்கு கொண்டு வந்த, அவ்வணியின்  தலைவர் ஜேசன் ஹோல்டர் 124 பந்துகளினை முகம் கொடுத்து 13 பெளண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித 3 விக்கெட்டுக்களையும், இப்போட்டியில் இலங்கை அணியின் தலைவராக செயற்படும் சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதன் பின்னர், இலங்கை அணி குசல் பெரேரா மற்றும் மஹேல உடவத்த ஆகியோருடன் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கியது. இலங்கை அணியின் இந்த இன்னிங்ஸில் இரண்டு ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், இரண்டாம் நாளுக்கான தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டிருந்தது. தேநீர் இடைவேளையின் பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் இலங்கையின் ஆரம்ப வீரர்கள் இருவரினையும் கேமர் ரோச் மிகவும் குறைவான ஓட்டங்களுடன் ஓய்வறை அனுப்பினார். இதனால், ஒரு கட்டத்தில் இலங்கை அணி 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் புதிதாக களம் வந்த தனுஷ்க குணத்திலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் மிகவும் பொறுமையாக ஆடி அணியின் ஓட்டங்களை அதிகரித்தனர். இவர்கள் இருவரினதும் செயற்பாட்டோடு இலங்கை அணி  முன்னேறிய போது மழையினால் போட்டி சிறிது நேரம் ஸ்தம்பித்தது.

நிலைமைகள் சீராகிய பின்னர் தொடர்ந்த போட்டியில் இரண்டு வீரர்களினாலும் இலங்கையின் மூன்றாம் விக்கெட்டுக்காக ஐம்பதுக்கு மேலான இணைப்பாட்டம் பகிரப்பட்ட நிலையில் இரண்டாம் நாளின் இராப் போசனம் அடையப்பட்டது. இராப் போசனத்தின் பின்னர், ஷன்னோன் கேப்ரியல் குசல் மெண்டிஸை 22 ஓட்டங்களுடன் ஓய்வறைக்கு அனுப்பினார். இந்த விக்கெட்டினால் குணத்திலக்க, மெண்டிஸ் ஆகியோருக்கு இடையிலான இணைப்பாட்டம் 59 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

மேற்கிந்திய தீவுகளிலிருந்து நாடு திரும்பும் ஜெப்ரி வன்டர்செய்

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள…

மெண்டிஸுக்கு அடுத்ததாக களத்தில் இருந்த தனுஷ்க குணத்திலக்கவும், 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். குணத்திலக்கவின் விக்கெட்டுக்குப் பின்னர் ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு மீண்டும் உருவானது. காலநிலை சரியாகிய பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், புதிய வீரராக வந்த வந்த தனஞ்சய டி சில்வாவின் விக்கெட்டினை 8 ஓட்டங்களுடன் இலங்கை அணி பறிகொடுத்தது. இப்படியாக சடுதியான விக்கெட்டுக்களினால் தடுமாற ஆரம்பித்த நிலையில் இன்னுமொரு தடவை மழையின்  குறுக்கீடு போட்டிக்கு ஏற்பட, இரண்டாம் நாளுக்கான ஆட்டம் முடிவடைந்தாக போட்டி நடுவர்கள் அறித்தனர்.

இதன்படி, இரண்டாம் நாளுக்கான போட்டி நிறைவின் போது இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக 36 ஓவர்களுக்கு 99 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. மேற்கிந்திய தீவுகளை விட 105 ஓட்டங்களால் பின்தங்கியுள்ள இலங்கை அணியினை மீட்டெடுக்கும் பொறுப்பு களத்தில் ஆட்டமிழக்காது இருக்கும் ரொஷேன் சில்வாவுக்கும்(3), நிரோஷன் திக்வெல்லவுக்கும் (16) வந்திருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்களான ஷன்னோன் கேப்ரியல் மற்றும் கேமர் ரோச் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

ஸ்கோர் சுருக்கம்

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் (இலங்கை நேரப்படி நாளை நள்ளிரவு) தொடரும்.