
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் நாள் நிறைவில் வேகப்பந்துவீச்சாளர்களின் துணையுடன், இலங்கையின் முதல் இன்னிங்சுக்கான அனைத்து விக்கெட்டுக்களையும் மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியிருக்கின்றது.
நேற்று (14) சென். லூசியாவின் டர்ரன் சம்மி சர்வதேச மைதானத்தில் இந்த டெஸ்ட் போட்டி தொடங்கியிருந்தது. மழை காரணமாக சற்று தாமதமாகியிருந்த ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.
மேற்கிந்திய தீவுகளிலிருந்து நாடு திரும்பும் மெதிவ்ஸ், லஹிரு கமகே
மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை …
கரீபியன் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகளுடன் ட்ரினிடாடில் நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த காரணத்தினால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை தக்கவைத்துக்கொள்ள இரண்டாவது போட்டியில் வெற்றியையோ அல்லது சமநிலையையோ கட்டாயம் பெற வேண்டிய நிலையில் நான்கு மாற்றங்களுடன் களமிறங்கியிருந்தது.
இதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு கமகே, தில்ருவான் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோருக்கு இப்போட்டியில் ஓய்வு வழங்கப்பட தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய, கசுன் ராஜித மற்றும் மஹேல உடவத்த ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தனர். இதில், வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித மற்றும் முன்வரிசை துடுப்பாட்ட வீரர் மஹேல உடவத்த ஆகியோருக்கு இந்த ஆட்டம் அறிமுக டெஸ்ட் போட்டியாக அமைந்திருந்தது.
மறுமுனையில் முதல் போட்டி போன்று ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி எந்தவித மாற்றங்களுமின்றி இலங்கை அணியை எதிர்த்தாட தயராகியிருந்தது.
தொடர்ந்து, நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை மஹேல உடவத்த மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் ஆரம்பம் செய்தனர். போட்டி ஆரம்பித்து இரண்டாவது ஓவர் வேகப்பந்துவீச்சாளரான ஷன்னோன் கேப்ரியலினால் வீசப்பட்ட நிலையில் அதனை எதிர்கொண்ட அறிமுக வீரர் மஹேல உடவத்த ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்தார். இதனால், இலங்கை அணிக்கு மோசமான ஆரம்பம் ஒன்று கிடைத்திருந்தது.
உடவத்தவின் விக்கெட்டை அடுத்து புதிதாக களம் வந்த தனஞ்சய டி சில்வாவும் 12 ஓட்டங்களுடன் சோபிக்காது மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார். தனஞ்சய டி சில்வாவின் விக்கெட்டை அடுத்து சிறிது நேரத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் பெரேராவின் விக்கெட்டும் பறிபோனது. கெமர் ரோச்சின் பந்துவீச்சில் வீழ்ந்த குசல் பெரேரா 5 பெளண்டரிகள் உடன் 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மூன்று வீரர்களை குறுகிய ஓட்ட இடைவெளியில் பறிகொடுத்த காரணத்தினால் இலங்கை அணி முதல் நாளின் மதிய போசணத்திற்கு முன்னதாகவே 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலையில் காணப்பட்டிருந்தது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி
இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (14) அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது…
எனினும், மதிய போசணத்திற்கு பின்னர் குசல் மெண்டிஸ் மற்றும் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் இணைந்து இலங்கையின் நான்காம் விக்கெட்டுக்கான இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கினர். 67 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டம் குசல் மெண்டிசின் விக்கெட்டோடு முடிவுக்கு வந்தது. கடந்த டெஸ்ட் போட்டியில் சதம் கடந்த குசல் மெண்டிஸ் இம்முறை ஆட்டமிழக்கும் போது 45 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.
மெண்டிசை அடுத்து புதிதாக வந்த ரொஷேன் சில்வாவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்று வீழ்ந்தார். சில்வாவின் விக்கெட்டை தொடர்ந்து வந்த நிரோஷன் திக்வெல்ல முதல் நாளின் தேநீர் இடைவேளை வரை நின்று அணியின் ஓட்டங்களை அதிகரிக்க பங்களிப்பு செய்திருந்தார். தேநீர் இடைவேளையின் போது, தினேஷ் சந்திமால் அரைச்சதம் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேநீர் இடைவேளைக்குப் பின்னர் சிறிது நேரத்திலேயே நிரோஷன் திக்வெல்லவின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் (16) கேப்ரியலினால் முடிக்கப்பட்டது. தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்களும் குறைவான ஓட்டங்களுடன் மேற்கிந்திய தீவுகளின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓய்வறை நடந்தனர். தொடர்ச்சியான விக்கெட்டுக்களால் தனது தரப்பின் நிலை மோசமடைவதை உணர்ந்த தினேஷ் சந்திமால் சற்று வேகமாக துடுப்பாட தொடங்கினார். இதனால், இலங்கை அணியின் மொத்த ஓட்டங்கள் 250 ஆக எட்டியதுடன், தினேஷ் சந்திமாலுக்கும் அவரது 11 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்ய வாய்ப்பும் கிடைத்தது.
முடிவில் 79 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 253 ஓட்டங்களைப் பெற்றது. இறுதி வரை ஆட்டமிழக்காது அணிக்காக போராடிய தினேஷ் சந்திமால் 10 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 119 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இந்த ஓட்டங்கள் மூலம் சந்திமால் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியொன்றில் சதம் கடந்த இரண்டாவது இலங்கை அணித் தலைவராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட்டுக்கு வேலை செய்ய சங்காவையும், மஹேலவையும் அழைக்கும் பைசர் முஸ்தபா
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சரான மாண்புமிகு பைசர் முஸ்தபா அவர்கள், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களான குமார் …
அபாரமாக செயற்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஷன்னோன் கேப்ரியல் 59 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், கேமர் ரோச் 4 விக்கெட்டுக்களையும் மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
முதல் நாளில் பந்துவீச்சில் அசத்திய பின்னர், தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி போட்டியின் முதல் நாள் நிறைவில் 2 ஓவர்களுக்கு 2 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் காணப்படுகின்றது. களத்தில் கிரைக் ப்ராத்வைட் 2 ஓட்டங்களுடனும், டெவோன் ஸ்மித் ஓட்டமேதுமின்றியும் நிற்கின்றனர்.
ஸ்கோர் விபரம்
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<



















