சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் நிறைவின் போது, இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை அணி தினேஷ் சந்திமால் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரது இணைப்பாட்டத்தோடும், நிரோஷன் திக்வெல்ல மற்றும் ரொஷென் சில்வா ஆகியோரது இணைப்பாட்டத்தோடும் மேற்கிந்திய தீவுகளை விட கிட்டத்தட்ட முன்னூறு ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருக்கின்றது.
இந்த முன்னிலையின் காரணமாக போட்டியின் இன்றைய ஐந்தாம் நாளில் மேற்கிந்திய தீவுகளுக்கு இலங்கை அணி, கடின வெற்றி இலக்கு ஒன்றை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்து சேதப்படுத்தல் சர்ச்சையைத் தாண்டி மூன்றாம் நாள் ஆதிக்கம் இலங்கை வசம்
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள்…
கடந்த வியாழக்கிழமை சென். லூசியா நகரில் ஆரம்பித்திருந்த இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை (253) மற்றும் மேற்கிந்திய தீவுகள் (300) ஆகிய அணிகளின் முதல் இன்னிங்சுகளை அடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸில் மீண்டும் துடுப்பாடிய இலங்கை அணி, ஆட்டத்தின் மூன்றாம் நாளான சனிக்கிழமை முடிவில் 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் மஹேல உடவத்த 13 ஓட்டங்களுடனும், கசுன் ராஜித ஓட்டமேதுமின்றியும் நின்றிருந்தனர்.
நேற்று போட்டியின் நான்காம் நாளுக்கான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளை விட 13 ஓட்டங்கள் மாத்திரமே பின்தங்கியவாறு இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்தது.
நான்காம் நாளுக்கான ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷன்னோன் கேப்ரியல் மற்றும் கேமர் ரோச் ஆகியோர் சிறப்பான முறையில் செயற்பட்டிருந்தனர். இதனால், இலங்கை அணி மிகவும் குறுகிய இடைவெளிகளில் கசுன் ராஜித (0), தனஞ்சய டி சில்வா (3), மஹேல உடவத்த ஆகியோரின் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்தது.
இலங்கை அணி துரித கதியில் தமது மூன்று துடுப்பாட்ட வீரர்களை பறிகொடுத்த காரணத்தினால் ஒரு கட்டத்தில் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்குச் சென்றது. இந்நிலையில் புதிய துடுப்பாட்ட வீரர்களாக களத்திற்கு வந்திருந்த குசல் மெண்டிஸ் மற்றும் இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் தமது தரப்பின் சரிவு நிலை அறிந்து பொறுமையாக துடுப்பாடி ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினர்.
இவர்களின் இருவரினதும் சிறப்பான ஆட்டத்தினால் போட்டியின் மதிய போசன இடைவேளை வரை 88 ஓட்டங்கள் இலங்கையின் ஐந்தாம் விக்கெட் இணைப்பாட்டமாக சேர்க்கப்பட்டிருந்தது. இந்த இணைப்பாட்டத்திற்கு பெரும் பங்காற்றிய குசல் மெண்டிஸ் மதிய போசனத்திற்கு சற்று முன்னர் தனது ஆறாவது டெஸ்ட் அரைச்சதத்தை பூர்த்தி செய்திருந்தார். இதேவேளை, மதிய போசனத்திற்கு சில நிமிடங்களின் முன்னர் சந்திமால் 21 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்த நிலையில், ஷன்னோன் கேப்ரியலின் பந்துவீச்சுக்கு ஆட்டமிழந்திருந்த போதும் மைதான நடுவர் இந்த ஆட்டமிழப்புக்காக வீசப்பட்ட பந்து நோ போல் (No Ball) என அறிவித்திருந்தார். இதனால், அதிர்ஷ்டவசமாக சந்திமாலின் விக்கெட் பாதுகாக்கப்பட்டது.
பந்தை சேதப்படுத்திய விடயத்தில் தினேஷ் சந்திமால் மீது குற்றத்தை நிரூபித்துள்ள ஐ.சி.சி.
மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட்….
மதிய போசனத்தை அடுத்து தொடர்ந்த போட்டியில் மெண்டிஸும், சந்திமாலும் தமது இணைப்பாட்டத்தை இன்னும் அதிகரித்தனர். 119 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டம் தினேஷ் சந்திமாலின் விக்கெட்டை கேமர் ரோச் கைப்பற்றியவுடன் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால் இந்த முறை ஆட்டமிழக்கும் போது 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
சந்திமாலின் விக்கெட்டுக்குப் பின்னர் குசல் மெண்டிஸ் புதிதாக ஆடுகளம் நுழைந்த ரொஷேன் சில்வாவோடு இணைந்து அணியின் ஓட்டங்களை சிறிது நேரம் அதிகரித்திருந்தார். இவர்கள் இருவரும் துடுப்பாடிக் கொண்டிருந்த வேளையில் போட்டியில் மழை குறுக்கிட ஆட்டம் கொஞ்ச நேரம் தடைப்பட்டது. நான்காம் நாளுக்கான தேநீர் இடைவேளையும் போட்டி நிறுத்தப்பட்ட இந்த சிறு இடைவெளிக்குள் எடுக்கப்பட்டிருந்தது.
தேநீர் இடைவேளையை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் ஷன்னோன் கேப்ரியலின் பந்துவீச்சுக்கு குசல் மெண்டிஸ் போல்ட் செய்யப்பட்டு தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். மெண்டிஸ் ஆட்டமிழக்கும் போது 2 சிக்ஸர்கள் 8 பெளண்டரிகள் அடங்கலாக 117 பந்துகளுக்கு 87 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர், ஏழாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த நிரோஷன் திக்வெல்ல மற்றும் ரொஷென் சில்வா ஆகியோர் 99 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டம் இலங்கை அணிக்கு மேற்கிந்திய தீவுகளை விட இரண்டாம் இன்னிங்ஸில் 250 இற்கு கூடவான ஓட்ட முன்னிலையை வழங்க காரணமாக அமைந்திருந்தது. இலங்கை அணியின் 8 ஆவது விக்கெட்டாக ரொஷென் சில்வா அரைச்சதம் ஒன்றை கடக்கத் தவறிய நிலையில் 48 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். எனினும், ரொஷெனுக்கு துடுப்பாட்ட ஜோடியாக இருந்த நிரோஷன் திக்வெல்ல தனது 9 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.
தொடர்ந்து நிரோஷன் திக்வெல்லவின் விக்கெட்டும் சிறிது நேரத்தில் ஷன்னோன் கேப்ரியலின் பந்துவீச்சில் கைப்பற்றப்பட்டிருந்தது. திக்வெல்ல ஆட்டமிழக்கும் போது 7 பெளண்டரிகள் அடங்கலாக 70 பந்துகளை மாத்திரம் சந்தித்து 62 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கையை சங்கா, அரவிந்த நிராகரிப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகராக..
இந்த இரண்டு வீரர்களதும் இணைப்பாட்டத்தோடு இலங்கை அணி, போட்டியின் நான்காம் நாள் நிறைவில் இரண்டாம் இன்னிங்சுக்காக 89 ஓவர்களுக்கு 334 ஓட்டங்களைப் பெற்று காணப்படுகின்றது. களத்தில் அகில தனஞ்சய 16 ஓட்டங்களுடனும், சுரங்க லக்மால் 7 ஓட்டங்களுடனும் நிற்கின்றனர். இந்த மொத்த ஓட்டங்களின் அடிப்படையில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளை விட இரண்டாம் இன்னிங்ஸில் 287 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஷன்னோன் கேப்ரியல் 57 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும், கேமர் ரோச் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முதலாம் இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த கேப்ரியல் இப்போது இரண்டாம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் கேப்ரியல் இலங்கை அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியொன்றில் 10 விக்கெட்டுக்களுக்கு மேல் கைப்பற்றிய முதல் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் என்ற புதிய பதிவை நிலைநாட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விபரம்




















