மேற்கிந்திய தீவுகளின் சுழலில் சுருண்ட இலங்கை அணி

665
AFP PHOTO

ட்ரினிடாட் நகரில் சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணியினை 226 ஓட்டங்களால் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றியினை பதிவு செய்துள்ளது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.

வரலாற்றை மாற்றும் சந்தர்ப்பத்தை பெற்றுள்ள இலங்கை அணி

ட்ரினிடாட் நகரில் நடைபெற்று வருகின்ற…

கடந்த புதன்கிழமை (06) போர்ட் ஒப் ஸ்பெயின் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடி முதல் இன்னிங்சினை  414 ஓட்டங்களுடன் முடித்திருந்தது. பதிலுக்கு தமது முதல் இன்னிங்சில் ஆடிய இலங்கை வீரர்கள் 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தனர்.

இதன் பின்னர், தமது இரண்டாம் இன்னிங்சில் மீண்டும் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணியினர் 227 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்தி இலங்கை அணிக்கு போட்டியின் வெற்றி இலக்காக 453 ஓட்டங்களினை நிர்ணயம் செய்திருந்தனர்.  

இந்த கடின வெற்றி இலக்கினை அடைவதற்காக இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை அணி போட்டியின் நான்காம் நாள் (சனிக்கிழமை) முடிவில் 53.4 ஓவர்கள் நிறைவில் 176 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து நல்ல நிலை ஒன்றில் காணப்பட்டிருந்தது. களத்தில் குசல் மெண்டிஸ் 94 ஓட்டங்களுடனும், லஹிரு கமகே ஓட்டங்கள் எதுவுமின்றியும் நின்றிருந்தனர்.

முதல் இன்னிங்சில் தடுமாறிய இலங்கை அணி பெரியதொரு சவாலான இலக்கினை எட்ட நல்லதொரு ஆரம்பத்தினைக் காட்டியிருந்த காரணத்தினாலும், டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் இரண்டாம் இன்னிங்சில் எட்டப்பட்ட அதிகூடிய இலக்கு 418 ஓட்டங்கள் என்பதாலும் இப்போட்டியில் திருப்பு முனையான முடிவு ஒன்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

உபுல் தரங்கவின் அபார சதத்தின் மூலம் சம்பியனான காலி

இதன்படி, போட்டியின் ஐந்தாவது மற்றும் இறுதி நாளில் (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்தில் வெற்றி பெற இன்னும் 277 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 7 விக்கெட்டுக்களை மீதமாக வைத்திருந்த இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்தது.

இறுதி நாள் ஆட்டம் தொடங்கிய சொற்ப வினாடிகளில் குசல் மெண்டிஸ் தனது சதத்தினை பூர்த்தி செய்தார். மெண்டிஸிற்கு இது ஐந்தாவது டெஸ்ட் சதமாகவும், ஆசிய நாடு ஒன்றுக்கு வெளியே அவர் பெற்ற முதலாவது டெஸ்ட் சதமாகவும் இருந்தது. எனினும், சிறிது நேரத்திலேயே இலங்கை அணிக்கு நம்பிக்கை தந்து கொண்டிருந்த குசல் மெண்டிஸின் விக்கெட் சன்னோன் கேப்ரியலின் வேகத்திற்கு இரையாகியது. மெண்டிஸ் ஆட்டமிழக்கும் போது 2 சிக்ஸர்கள் மற்றும் 10 பெளண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

மெண்டிஸின் விக்கெட்டினை அடுத்து இலங்கை அணியின் சரிவும் ஆரம்பமானது. களத்தில் இருந்த லஹிரு கமகேவின் துடுப்பாட்டம் தேவேந்திர பிஸூவின் ஓவரில் வெறும் 3 ஓட்டங்களுடன் முடிக்கப்பட்டது.

பின்னர் போட்டியின் நான்காம் நாளில் சிறு உபாதை ஒன்றின் காரணமாக 15 ஓட்டங்களுடன் ஓய்வு எடுத்து களத்திற்கு திரும்பியிருந்த இலங்கையின் அணித்தலைவர் தினேஷ் சந்திமாலின் விக்கெட்டும், இளம் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவின் விக்கெட்டும் இறுதி நாளின் மதிய போசனத்திற்கு சற்று முன்னர் சுழல் வீரர் ரோஸ்டன் சேஸின் பந்து வீச்சில் வீழ்ந்திருந்தது. இதில் சந்திமால் 27 ஓட்டங்களினையும், திக்வெல்ல 19 ஓட்டங்களினையும் பெற்றிருந்தனர். 

இதனால், முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரினையும் பறிகொடுத்து 222 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலையில் இறுதி நாள் ஆட்டத்தின் மதிய போசனத்தினை இலங்கை அடைந்தது.

மதிய போசனத்தை அடுத்து முன்னேறிய ஆட்டத்தில் இலங்கை அணி எஞ்சிய துடுப்பாட்ட வீரர்கள் மூவரினையும் மேற்கிந்திய தீவுகளின் சுழலில் நான்கு ஓட்டங்களை தாண்டுவதற்குள்ளேயே பறிகொடுத்தது.

இதன்படி, இலங்கை அணி 83.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 226 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று போட்டியில் படுதோல்வி அடைந்தது.

மற்றொரு சதத்தினால் ஒரு நாள் அணிக்கான தகுதியை நிரூபித்த தரங்க

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பாக வலதுகை சுழல் வீரரான ரோஸ்டன் சேஸ் வெறும் 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ஏனைய சுழல் வீரரான தேவேந்திர பிஸூ 3 விக்கெட்டுக்களையும், வேகப்பந்து வீச்சாளர் சன்னோன் கேப்ரியல் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

இந்த வெற்றியோடு ட்ரினாடின் போர்ட் ஒப் ஸ்பெயின் மைதானத்தில் டெஸ்ட் போட்டியொன்றில் ஓட்ட வித்தியாச ரீதியில் பெற்றுக் கொண்ட மிகப் பெரிய வெற்றியினை மேற்கிந்திய தீவுகள் அணி பதிவு செய்து கொள்கின்றது.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதை முதல் இன்னிங்சில் சதம் கடந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் சேன் டோவ்ரிச் பெற்றுக் கொண்டார்.

14 ஆம் திகதி ஆரம்பமாகும் இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இரண்டு அணிகளும் சென். லூசியா நகருக்கு பயணமாகின்றன.

போட்டிச் சுருக்கம்

முடிவு – மேற்கிந்திய தீவுகள் அணி 226 ஓட்டங்களால் வெற்றி