தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று (14) நடைபெற்ற ஒரு போட்டி கொண்ட T-20 தொடரை, இலங்கை அணி அபாரமான சுழல் பந்துவீச்சு, தினேஷ் சந்திமால் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோரின் நிதான துடுப்பாட்டம் என்பவற்றின் உதவியுடன் வெற்றியீட்டியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியை 98 ஓட்டங்களுக்கு சுருட்டி சுழல் பந்துவீச்சை மீண்டுமொருமுறை நிரூபித்த இலங்கை அணி, இறுதிவரை போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான வெற்றியை பெற்றுக்கொண்டது.

சாதனை மேல் சாதனை படைத்த இலங்கை

இன்றைய போட்டியில் களமிறங்கிய இரண்டு அணிகளிலும் ஒருநாள் தொடரிலிருந்து சில மாற்றங்கள் மேற்கொண்டிருந்தது. இலங்கை அணி சார்பில், ஐ.சி.சி இன் தடைக்கு உட்பட்டிருந்த சந்திமால் அணிக்கு திரும்பியிருந்ததுடன், கசுன் ராஜித, லக்ஷான் சந்தகன் மற்றும் இவர்களுடன் இசுறு உதானவுக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்திருந்தது.

தென்னாபிரிக்க அணியானது இறுதி ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அணியிலிருந்து இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. கேஷவ் மஹாராஜுக்கு பதிலாக தப்ரைஷ் சம்ஷியும், வியாம் முல்டருக்கு பதிலாக லுங்கி என்கிடியும் களமிறக்கப்பட்டனர்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, கசுன் ராஜித வீசிய முதல் பந்து ஓவருக்கு, மூன்று பௌண்டரிகள் அடங்கலாக 13 ஓட்டங்களை விளாசி, சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. எனினும் உடனடியாக இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் சுழல் பந்துவீச்சினை அறிமுகப்படுத்தி தென்னாபிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்.

இரண்டாவது ஓவரை வீசிய தனஞ்சய டி சில்வா அனுபவ வீரர் ஹஷிம் அம்லாவை ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழக்கச் செய்ய, ரீஸா ஹென்ரிக் மற்றும் குயின்டன் டி கொக் ஆகியோர் சிறிய இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பினர். எனினும் சந்தகனின் சிறந்த களத்தடுப்பின் மூலம் டி கொக் 20 ஓட்டங்களுடன் ரன்-அவுட் முறையில் வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர்களை இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் நெருக்கடிக்குள்ளாக்கி விக்கெட்டுகளை சரித்தனர். தென்னாபிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக ரீஸா ஹென்ரிக்ஸ் 19 ஓட்டங்கள், ஹென்ரிக் கிளாசன் 18 ஓட்டங்கள், டேவிட் மில்லர் 14 ஓட்டங்கள் மற்றும் ஜுனியர் டலா ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்கள் என பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 16.4 ஓவர்களை மாத்திரமே எதிர் கொண்ட தென்னாபிரிக்க அணி 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணிசார்பில் சுழற்பந்து வீச்சில் பிரகாசித்த லக்ஷான் சந்தகன் 3 விக்கெட்டுகளையும், அகில தனஞ்சய மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த ஓட்ட எண்ணிக்கையானது தென்னாபிரிக்க அணி T-20 போட்டியில் பெற்றுக்கொண்ட குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு செஞ்சூரியனில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 100 ஓட்டங்களை பெற்றிருந்தமையே குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியிருந்தது.

பின்னர், இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி ஆரம்பத்திலிருந்து தடுமாற்றத்துக்கு முகங்கொடுத்தது. ரபாடா வீசிய முதல் ஓவரை எதிர்கொண்ட குசல் பெரேரா தப்ரைஷ் சம்ஷியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அதே ஓவரில் குசல் மெண்டிஸும் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தார்.

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியை ‘வைட்வொஷ்’ செய்த இலங்கை

ஆறு ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையில், ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் மற்றும் தனஞ்சய டி சில்வா ஜோடி, வெற்றிக்கான இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தது. இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 53 ஓட்டங்களை பகிர்ந்தனர். எனினும் ஜுனியர் டலாவின் பந்து வீச்சில் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக வெளியேறினர்.

இதில் தசுன் சானக மாத்திரம் அதிகபட்சமாக 16 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அஞ்செலோ மெதிவ்ஸ், திசர பெரேரா ஆகியோர் ஓட்டங்கள் இன்றியும், அகில தனஞ்சய 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை அணி 88 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும் இறுதிவரை களத்தில் இருந்து அணிக்கு நம்பிக்கை கொடுத்த டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல, இசுறு உதான 5 ஓட்டங்களை பெற்று பௌண்டரியுடன் வெற்றியை உறுதி செய்தார். இதன்படி 16 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி வெற்றி இலக்கை அடைந்தது. தென்னாபிரிக்க அணி சார்பாக பந்துவீச்சில் ரபாடா, ஜுனியர் டலா மற்றும் தப்ரைஷ் சம்ஷி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனடிப்படையில் ஒரு போட்டி கொண்ட T-20 தொடரை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்ட இலங்கை அணி, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்திருந்தாலும், டெஸ்ட் மற்றும் T-20 தொடர்களை கைப்பற்றி, முழுத் தொடரினதும் வெற்றியை தக்கவைத்துள்ளது.

ஸ்கோர் விபரம்

போட்டியின் ஆட்டநாயகன் – தனஞ்சய டி சில்வா

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க