சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (22) நிறைவுக்கு வந்திருக்கின்றது.
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் சற்று தடுமாற்றம் காண்பித்த போதிலும் மிகத் திறமையான பந்துவீச்சினை வெளிப்படுத்தி வரலாற்று வெற்றி ஒன்றை சுவைப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கின்றது.
முதல் நாளில் பந்துவீச்சில் ஜொலித்த இலங்கை அணிக்கு துடுப்பாட்டத்தில் நெருக்கடி
போர்ட் எலிசபெத் நகரில் இன்று (21) ஆரம்பமான இலங்கை மற்றும் தென்னாபிரிக்க…
நேற்று (21) போர்ட் எலிசபெத் நகரில் ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி தமது முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் குயின்டன் டி கொக் 86 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, கசுன் ராஜித மற்றும் விஷ்வ பெர்னாந்து ஆகியோர் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
இதன் பின்னர் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த இலங்கை அணி போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமது முதல் இன்னிங்ஸிற்காக 3 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை குவித்திருந்தது. களத்தில் லஹிரு திரிமான்ன 25 ஓட்டங்களுடனும், கசுன் ராஜித ஓட்டங்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்காது இருந்தனர்.
>>Photos : Sri Lanka vs South Africa 2nd Test 2019 | Day 2<<
இன்று போட்டியின் இரண்டாம் நாளில் தென்னாபிரிக்க அணியை விட 162 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றம் காட்ட தொடங்கியது. இன்றைய நாளில் இலங்கையின் முதல் விக்கெட்டாக லஹிரு திரிமான்ன வேகப்பந்து வீச்சாளர் டூஆன்னே ஒலிவியரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து 29 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு நடந்தார்.
திரிமான்னவை அடுத்து இரவு நேர காவலராக (Night-watchman) இருந்த துடுப்பாட்ட வீரர் கசுன் ராஜிதவின் விக்கெட்டையும் இலங்கை அணி சிறிது நேரத்தில் பறிகொடுத்தது. ககிஸோ றபாடாவினால் போல்ட் செய்யப்பட்ட கசுன் ராஜித ஒரு ஓட்டத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
பின்னர் புதிய துடுப்பாட்ட வீரர்களாக வந்திருந்த தனன்ஞய டி சில்வா மற்றும் குசல் பெரேரா ஆகியோரும் ஜொலிக்கத் தவறினர். இதில் குசல் ஜனித் பெரேரா 20 ஓட்டங்களைப் பெற, தனன்ஞய டி சில்வா 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இப்படியாக முக்கிய துடுப்பாட்ட வீரர்களை இழந்த இலங்கை அணி ஒரு கட்டத்தில் 97 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும், மத்திய வரிசையில் துடுப்பாடிய நிரோஷன் திக்வெல்ல சற்று பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 42 ஓட்டங்களைப் பெற்றுத்தந்தார்.
நிரோஷன் திக்வெல்லவின் இந்த துடுப்பாட்ட உதவியோடு இலங்கை அணி 37.4 ஓவர்களில் தமது அனைத்து துடுப்பாட்ட வீரர்களையும் இழந்து 154 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸினை நிறைவு செய்து கொண்டது.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இளம் வீரரான லசித் எம்புல்தெனிய விரல் உபாதை ஒன்றுக்கு ஆளாகிய காரணத்தினால், இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பாட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வீரர் எம்புல்தெனியவை இழந்தது இலங்கை அணி
தென்னாபிரிக்காவுக்கு எதிராக போர்ட் எலிசபெத் விளையாட்டரங்கில்…
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளரான ககிஸோ றபாடா 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், டூஆன்னே ஒலிவியர் 61 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.
இதன் பின்னர் 68 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற தென்னாபிரிக்க அணி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை டீன் எல்கார் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோருடன் ஆரம்பித்தது.
தென்னாபிரிக்க அணி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தில் அவ்வணியின் முதல் விக்கெட்டினை இலங்கை அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாந்து வீழ்த்தினார். தென்னாபிரிக்க அணியின் முதல் விக்கெட்டான டீன் எல்கார் நிரோஷன் திக்வெல்லவிடம் பிடிகொடுத்து 2 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார்.
எல்காரின் விக்கெட்டை அடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்திற்கான மதிய போசண இடைவேளை எடுக்கப்பட்டிருந்தது. மதிய போசண இடைவேளையை அடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தவாறு தொடர்ந்த தென்னாபிரிக்க அணி, இலங்கை அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சு காரணமாக இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளைக்கு பின்னர் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 128 ஓட்டங்களை மட்டுமே இரண்டாம் இன்னிங்சுக்காக பெற்றது.
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச ஓட்டங்களை அதன் அணித்தலைவர் பாப் டு ப்ளெசிஸ் 50 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் நின்று பெற்றிருந்தார். அதேவேளை, ஹஷிம் அம்லா 32 ஓட்டங்களுடன் தென்னாபிரிக்க அணிக்கு சற்று ஆறுதலாக அமைந்திருந்தார்.
தென்னாபிரிக்காவின் இறுதி 5 விக்கெட்டுக்களையும் வெறும் 28 ஓட்டங்களுக்குள் கைப்பற்றி அதிரடி காட்டிய இலங்கை அணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், தனன்ஞய டி சில்வா 3 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாந்து ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர் தென்னாபிரிக்க அணியின் மோசமான இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினால் போட்டியின் வெற்றி இலக்காக இலங்கை அணிக்கு 197 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்த வெற்றி இலக்கினை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்திருக்கும் இலங்கை அணி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 16 ஓவர்களில் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடையும் பயணத்தில் நல்ல நிலையில் காணப்படுகின்றது.
இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 137 ஓட்டங்கள் தேவையாக இருக்க ஓஷத பெர்னாந்து 17 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 10 ஓட்டங்களுடனும் களத்தில் நின்று நம்பிக்கை தருகின்றனர்.
சகோதரர்கள் சமரில் தர்ஸ்டன் கல்லூரி ஆதிக்கம்
இசிபத்தன கல்லூரிக்கு எதிரான 56வது சகோதரர்களின் பெரும் சமர் போட்டியின்…
இதேநேரம் இலங்கைத் தரப்பின் இரண்டாம் இன்னிங்ஸில் பறிபோயிருந்த விக்கெட்டுக்களில் லஹிரு திரிமான்ன 10 ஓட்டங்களையும், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 19 ஓட்டங்களையும் பெற்று ஏமாற்றம் தந்திருந்தனர்.
இலங்கையின் இரண்டாம் இன்னிங்ஸில் பறிபோயிருந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ககிஸோ றபாடா மற்றும் டூஆன்னே ஒலிவியர் ஆகியோர் ஆளுக்கு ஒவ்வொன்றாக பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக 18 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்ட போட்டியின் இன்றைய இரண்டாம் நாளில் தென்னாபிரிக்க நிர்ணயித்த வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடி வரும் இலங்கை அணி, குறித்த வெற்றி இலக்கினை அடைந்தால் தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றை வெற்றி கொண்ட முதல் ஆசிய அணியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விபரம்
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க




















