சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் T20I போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரண்டாவது T20I போட்டி நாளை (03) நடைபெறவுள்ளது.
கொலின் டி கிரெண்டோம் மற்றும் ரொஸ் டெய்லரின் அதிரடியான 79 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி சிறந்த வெற்றியை பெற்றுக்கொண்டது.
T20 சர்வதேச போட்டிகளில் மாலிங்க புதிய உலக சாதனை
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையில் இன்று (1) கண்டி பல்லேகல சர்வதேச…
முதல் போட்டியில் லசித் மாலிங்கவின் தலைமையிலான இலங்கை அணி குசல் மெண்டிஸ், இசுரு உதான, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தசுன் ஷானக ஆகியோரின் பங்களிப்புடன் சிறந்த ஓட்ட எண்ணிக்கையை (174/4) அடைந்திருந்தாலும், பந்துவீச்சாளர்கள் சோபிக்க தவறியிருந்தனர்.
அதிலும் முக்கியமாக கசுன் ராஜித மற்றும் இசுரு உதான ஆகியோரது ஓவர்களுக்கு ஓட்டங்கள் அதிகமாக விட்டுக்கொடுக்கப்பட்டதுடன், களத்தடுப்பில் தசுன் ஷானக மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோர் ரொஸ் டெய்லரின் பிடியெடுப்பை தவறவிட்டதும், இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாகியிருந்தது.
ஆனால், குறித்த இரண்டு பிடியெடுப்புகளை தவிர்த்து, இலங்கை அணியின் களத்தடுப்பை பொருத்தவரை மிகவும், சிறப்பாக அமைந்திருந்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த நிலையில், முதல் போட்டியில் விடப்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு களமிறங்க எதிர்பார்த்திருக்கும் இலங்கை அணி, தொடரை சமப்படுத்தும் எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கிறது.
நியூசிலாந்து அணியை பொருத்தவரை, பந்துவீச்சில் செத் ரென்ஸை தவிர ஏனைய வீரர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். குறிப்பாக நியூசிலாந்தின் சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் அணித் தலைவர் டிம் சௌதி ஆகியோர் சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.
துடுப்பாட்டத்தில், ரொஸ் டெய்லர், கொலின் டி கிரெண்டோம் மற்றும் டேர்லி மிச்சல் ஆகியோர் பிரகாசித்திருக்க, எதிர்பார்க்கப்பட்ட கொலின் டி கிரெண்டோம் மற்றும் மார்டின் கப்டில் ஆகியோர் பிரகாசிக்க தவறியிருந்தனர். எவ்வாறாயினும், நாளைய போட்டியில் இவர்கள் இருவரும் இலங்கை அணிக்கு சவாலான வீரர்கள் தான். எனவே, இந்தப் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photos: Sri Lanka vs New Zealand | 1st T20I
ThePapare.com | Viraj Kothalawala | 01/09/2019 Editing and re-using images without…
இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்கள்
இந்த இரண்டு அணிகளும் மொத்தமாக 17 T20I போட்டிகளில் இதற்கு முன்னர் மோதியுள்ளன. இதில், இந்த தொடரின் முதல் போட்டியின் வெற்றியுடன் நியூசிலாந்து அணி 9 வெற்றிகளையும், இலங்கை 6 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
அதேநேரம், பல்லேகலை மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக தங்களுடைய முதல் வெற்றியினை நியூசிலாந்து அணி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற 3 போட்டிகளில் ஒரு போட்டியில் இலங்கை வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமனிலையிலும் மற்றுமொரு போட்டி வெற்றித் தோல்வியின்றியும் நிறைவுபெற்றுள்ளன.
எதிர்பார்ப்பு வீரர்கள்
லசித் மாலிங்க
இலங்கை அணியில் அனுபவம் மிக்க வீரர் லசித் மாலிங்க. அணியின் தலைவராக செயற்படும் இவர், T20I போட்டிகளில் மிகச்சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தி வருகின்றார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் T20I போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், T20I போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுகளை கைப்பற்றியவர் (99) என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த நிலையில், அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களுடன் அணி களமிறங்கியுள்ள நிலையில், நாளைய போட்டியில் இவரது பந்துவீச்சு அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது.
ரொஸ் டெய்லர்
நியூசிலாந்து அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரரான ரொஸ் டெய்லர், T20I போட்டிகளில் சிறந்த பதிவுகளை வைத்திருக்கவில்லை. எனினும், அவரது துடுப்பாட்டம் தற்போது மிகவும் எதிர்பார்ப்பு மிக்க ஒன்றாக மாறியிருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்கு எதிரான போட்டியிலும் சரி, முதல் T20I போட்டியிலும் சரி இவரது துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு மிகவும் சவாலானதாக அமைந்திருந்தது. இதனால், அடுத்தப் போட்டியில் இவரது அனுபவம் கலந்த துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு சவால் மிக்க ஒன்றாக அமையும்.
உத்தேச பதினொருவர்
இலங்கை உத்தேச பதினொருவர்
இலங்கை அணியை பொருத்தவரை, இளம் வீரர்களை வைத்து இந்த T20I தொடரில் விளையாடுகிறது. அதனால், முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், நாளைய போட்டியில் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
இலங்கை – நிரோஷன் டிக்வெல்ல, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், செஹான் ஜயசூரிய, தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, அகில தனன்ஜய, இசுரு உதான, லசித் மாலிங்க (தலைவர்), கசுன் ராஜித
நியூசிலாந்து உத்தேச பதினொருவர்
நியூசிலாந்து அணியானது முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அதே பதினொருவருடன் நாளைய போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து – மார்டின் கப்டில், கொலின் மன்ரோ, டிம் செய்பர்ட், ரொஸ் டெய்லர், கொலின் டி கிரெண்டோம், டார்லி மிச்சல், மிச்சல் சென்ட்னர், ஸ்கொட் குகலெய்ன், டிம் சௌதி (தலைவர்), லொக்கி பேர்கஸன், இஸ் சோதி
ஆடுகளம் மற்றும் காலநிலை
பல்லேகலை காலநிலையை பொருத்தவரை முதல் போட்டியை போன்று மழை குறுக்கிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனினும், ஆடுகளமானது துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<