சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குணதிலக்கவின் ஆட்டமிழப்பு!

Sri Lanka tour of West Indies 2021

580
Photo by Randy Brooks / AFP

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு வழங்கப்பட்ட ஆட்டமிழப்பு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (10) நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி 19 ஓவர்களில் 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், விக்கெட்டுகள் எதனையும் இழக்கவில்லை.

>>முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்திய மே.தீவுகள்

எனினும், கீரன் பொல்லார்ட் வீசிய ஓவரில், அவரிடமே பிடியெடுப்பொன்றை வழங்கி, திமுத் கருணாரத்ன அரைச்சதம் பெற்று ஆட்டமிழந்தார். இதனையடுத்து பொல்லார்ட் வீசிய ஓவரில் தனுஷ்க குணதிலக்க பந்தொன்றை தடுத்தாடினார்.

குறித்த பந்து தனுஷ்க குணதிலக்கவின் காலின் கீழ் விழுந்த நிலையில், மறுபக்கம் இருந்த பெதும் நிஸ்ஸங்க ஓட்டமொன்றை பெறுவதற்கு முயற்சித்தார். எனினும், ஓட்டத்தை பெறமுடியாது என்பதால், தனுஷ்க குணதிலக்க பின்வாங்கினார்.

இதன்போது, அவரின் காலின் கீழ் இருந்த பந்து தவறுதலாக காலில் பட்டு சென்றது. இதன்போது, ரன்-அவுட் வாய்ப்புக்காக பந்தின் அருகில் சென்றுக்கொண்டிருந்த கீரன் பொல்லார்ட், பந்து தனுஷ்கவின் காலில் பட்டு நகர்வதை அவதானித்து நடுவரிடம் ஆட்டமிழப்பை கோரினார். இந்தநிலையில், கள நடுவர்கள் ஆட்டமிழப்பு என கூறி, மூன்றாவது நடுவருக்கு தீர்ப்பை வழங்குமாறு அறிவித்தனர்.

கள நடுவர்களின் முடிவு மற்றும் தன்னுடைய ஆராய்ந்த முடிவினை வைத்து, தனுஷ்க குணதிலக்க ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், குறித்த காணொளியில் பந்தினை வேண்டுமென தனுஷ்க குணதிலக்க காலில் உதைக்கவில்லை என்பதை தெளிவாக காணமுடிந்தது.

எனினும், துரதிஷ்டவசமாக தனுஷ்க குணதிலக்க ஆட்டமிழந்த நிலையில், இலங்கை அணியின் நம்பிக்கை தளர்வடைந்தது. அதுமாத்திரமின்றி, தொடர்ச்சியாக ரன்-அவுட் மூலமாக விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், சவாலான வெற்றியிலக்கை நிர்ணயிக்க தவறியது. அத்துடன், போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதேவேளை, 47 வருட இலங்கை அணியின் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக களத்தடுப்புக்கு இடையூறு விளைவித்த காரணத்தால் ஆட்டமிழக்கும் முதல் வீரராக தனுஷ்க குணதிலக்க பதிவுசெய்யப்பட்டார். அதுமாத்திரமின்றி, தற்போது இந்த ஆட்டமிழப்பு தொடர்பில் சமுகவலைத்தளங்களில் அதிகமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<