19 வயதுக்கு உட்பட்ட இளையோர் ஆசிய கிண்ணத்தொடரின் குழு நிலை போட்டிகள் யாவும் இன்று நிறைவு பெற்றுள்ளது. இவ்வேளையில், அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக அமைந்த இலங்கை கனிஷ்ட அணி மற்றும் இந்திய கனிஷ்ட அணிகளுக்கு இடையிலான போட்டியில், இலங்கையை 6 விக்கெட்டுகளினால் வீழ்த்தி இந்திய கனிஷ்ட அணி, A குழுவில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தினை தொடர்ந்து தக்க வைத்துள்ளது.

இரண்டு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில், இன்று மொரட்டுவ டிரோன் பெர்னான்டோ மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில், இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டியில் முதன்முறையாக இலங்கை கனிஷ்ட அணி சார்பாக, ஹஸித்த போயகொட, ரெவன் கெல்லி, லசித் குருஸ்புள்ளே, திசரு ரஷ்மிக்க, ரவிந்து செம்புகுட்டிக்கே ஆகிய வீரர்கள் விளையாட தயராகியிருந்தனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இதன்படி, ரெவன் கெல்லி மற்றும் விஷ்வ சத்துரங்க எனும் தனது வழமையான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுடன் இலங்கை கனிஷ்ட அணி தனது துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்தது.

இதனை தொடர்ந்து, விஷ்வ சத்துரங்கவின், அதிரடியுடன் இலங்கை அணி ஒரு சிறந்த ஆரம்பத்தினை பெற்றது. இருப்பினும், இலங்கை அணி 58 ஓட்டங்களினைப் பெற்றிருந்த வேளையில், விஷ்வ சத்துரங்க இந்திய கனிஷ்ட அணியின் சிவா சிங்கின் பந்தில் முதலாவதாக ஆட்டமிழந்தார். இதனால், அதிரடியாக ஆடி வந்த அவருக்கு அரைச்சதத்தினை பூர்த்தி செய்யமுடியாமல் போனது. ஆட்டமிழக்கும்போது அவர்  30 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரிகள் உள்ளடங்களாக 44 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இவரை, தொடர்ந்து ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரெவன் கெல்லி, புதிதாக களத்திற்கு வந்த, கமிந்து மெண்டிசுடன் சேர்ந்து இலங்கை அணிக்காக சிறந்த இணைப்பாட்டம் ஒன்றிற்கு அடித்தளம் இட்டனர். இந்நிலையில் இவர்களின் இணைப்பாட்டம் யாஷ் தாகூரின் மூலம் நிர்மூலமாக்கப்பட்டது. இதனால் புதிதாக இணைப்பாட்டம் ஒன்றினை கட்டியெழுப்ப வந்திருந்த கமிந்து மெண்டிஸ் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றார். இவரை அடுத்து மற்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரெவான் கெல்லியும் ஆட்டமிழந்து சென்றார். Sri Lanka U19 vs India U19இதன்பின்னர் புதிதாக வந்த இலங்கை கனிஷ்ட அணியின் நடுத்தர வீரர்கள் அனைவரும் 10 இற்கும் குறைவான ஓட்டங்களுடன், இந்திய கனிஷ்ட அணியின் சுழல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெளியேறி, ஒரு கட்டத்தில், 97 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை கனிஷ்ட அணி இக்கட்டான நிலையை நோக்கி சென்றது.

இருப்பினும், இந்நிலையை சமாளித்து புனித ஜோசப் கல்லூரி வீரர், ஜெஹான் டேனியல் நிதனமாக ஆடி இலங்கை கனிஷ்ட அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை 200 இற்கு மேல் உயர்த்த கை கொடுத்தார். இவரின் அரைச்சத உதவியுடன் இலங்கை கனிஷ்ட அணி, 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றது.

குறைவான ஓட்டங்களுக்கு வி இருந்த இலங்கை அணியை ஓரளவு நல்ல நிலைக்கு மீட்உதவியிருந்த ஜெஹான் டேனியல், தனது தாயகத்திற்காக 90 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகள் உள்ளடங்களாக 67 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்தார்.

தங்களது பந்து வீச்சு மூலம் ஒரு கட்டத்தில் இலங்கை கனிஷ்ட அணியினை கலங்கடித்த, சிவா சிங், யாஷ் தாகூர் ஆகியோர் இந்திய அணி சார்பாக தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இவர்களோடு சேர்த்து, அபிஷேக் சர்மா, ஹேராம்ப் பரப் ஆகியோரும் அவ்வணிக்காக தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

அடுத்து, வெற்றி இலக்கான 208 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு அபிஷேக் சர்மாவின் தலைமையிலான இந்திய கனிஷ்ட அணி களமிறங்கியது.

இதன் பின்னர், துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதல் விக்கெட்டினை போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே ஜெஹான் டேனியலின் பந்து வீச்சில் பறிகொடுத்தது. இருப்பினும், ஏனைய வீரர்களின் சிறப்பான துடுபாட்டம் காரணமாக, இந்திய அணி நிதனமாக ஆடி வெற்றிலக்கினை, 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 39.5 ஆவது ஓவரில் பெற்றது.

இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்த, சுப்மன் கில் அவ்வணி சார்பாக அரைச்சதம் கடந்து, 78 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில், இலங்கை கனிஷ்ட அணி சார்பாக, பிரவீன் ஜயவிக்ரம இரண்டு விக்கெட்டுக்களையும், ஜெஹான் டேனியல், திலான் பிரசான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கனிஷ்ட அணி: 207/10(48.5) – ஜெகான் டேனியல் 67(90), விஷ்வ சத்துரங்க 44(30), ரெவன் கெல்லி 27(47), சிவா சிங் 32/3(10), யாஷ் தாகூர் 38/3(10), அபிஷேக் சர்மா 32/2(10)

இந்திய கனிஷ்ட அணி: 208/4(39.5) – சுப்மான் கில் 78(79), ப்ரீத்வி சாவ் 36(35), பிரவீன் ஜயவிக்ரம 30/2(10)

போட்டி முடிவு – இந்திய கனிஷ்ட அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி


நேபாளம் எதிர் மலேசியா

ஏற்கனவே இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பினை நழுவ விட்ட நிலையில், குழு A இற்கான மற்றுமொரு போட்டியாக, கொழும்பு NCC மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில், இறுதி வரை போராடிய நேபாள அணி ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்று, இத்தொடரில் இருந்து ஆறுதல் வெற்றியுடன் வெளியேறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

மலேசிய கனிஷ்ட அணி: 153/10(44.4) – வீரன்தீப் சிங் 75(118), முஹம்மது ஹஸீப் 21(19),  ஆதில் கான் 24/3(7)

நேபாள கனிஷ்ட அணி: 154/9(44.4) – அனில் சாஹ் 32(66), பவன் சர்ராப் 29*(67), விரன்தீப் சிங் 29/3(10)

போட்டி முடிவு – நேபாளம் ஒரு விக்கெட்டினால் வெற்றி


பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ்

காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று முடிந்த குழு B இற்கான இப்போட்டியில், இறுதிக்கட்டம் வரை போராடி, போட்டி முடிய 5 பந்துகள் மீதமிருக்க பங்களாதேஷ் கனிஷ்ட அணியினை பாகிஸ்தான் வீழ்த்தியது. இருப்பினும், பாகிஸ்தான்  கனிஷ்ட அணி துரதிர்ஷ்டவசமாக ஏனைய போட்டிகளில் பெற்ற புள்ளிகள் அரையிறுதிக்கு போதாது என்பதால், ஆசிய கிண்ணத்தொடரில் இருந்து வெளியேறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் கனிஷ்ட அணி: 230/10(49.5) – ஆதீப் ஹொஸைன் 80(94), மொஹம்மட் ரகீப் 42(53), உமர் கான் 32/2(9), நஸீர் நவாஸ் 11/2(2)

பாகிஸ்தான் கனிஷ்ட அணி: 233/9(49.1) – முஹம்மட் சயீட் 50(32), நஸீர் நவாஸ் 45(65), பிப் ஹொசைன்  37/2(10)

போட்டி முடிவு – பாகிஸ்தான் ஒரு விக்கெட்டினால் வெற்றி


சிங்கப்பூர் எதிர் ஆப்கானிஸ்தான்

மக்கோன சர்ரேய் மைதானத்தில் நடைபெற்ற குழு B இற்கான மற்றுமொரு போட்டியில், சிங்கப்பூரினை யூசுப் சஸாய் மற்றும் முஜீப் ஆகியோரின் பந்து வீச்சினால் குறைவான ஓட்டங்களுக்கு, மட்டுப்படுத்தி, வெறும் 25 பந்துகளில் வெற்றியிலக்கினை தர்வீஸ் ரசூலின் அபார அரைச்சதத்துடன் ஆப்கானிஸ்தான் கனிஷ்ட அணி பெற்றுக்கொண்டது. இவ்வெற்றியின் மூலம் கிடைக்கப்பெற்ற போனஸ் புள்ளியினால் இத்தொடரில் அரையிறுதிச்சுற்றுக்கு தெரிவாகும் அணிகளில் ஒன்றாகவும் இருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

சிங்கப்பூர் கனிஷ்ட அணி: 73/10(18.2) – யுவராஜ் சிங் 14(27), யூசுப் சஸாய் 11/4(5), முஜீப் 13/4(5)

ஆப்கானிஸ்தான் கனிஷ்ட அணி: 75/1(4.1) – தர்வீஷ் ரசூலி 53(15)*, ஜானாக் பிரகாஷ் 33/1(2)

போட்டி முடிவு – ஆப்கானிஸ்தான் 9 விக்கெட்டுகளால் வெற்றி

குழு நிலை போட்டிகளின் புள்ளிகளின் அடிப்படையில், ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு, குழு A இல் இருந்து இந்திய கனிஷ்ட அணியும், இலங்கை கனிஷ்ட அணியும் தெரிவாகும் இவ்வேளையில், குழு B இல் இருந்து பங்களாதேஷ் கனிஷ்ட அணியும், ஆப்கானிஸ்தான் கனிஷ்ட அணியும் தெரிவாகியுள்ள.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி ஆர்.பிரமேதாச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும் இத்தொடரின் முதலாவது அரையிறுதிப்போட்டியில், இந்திய கனிஷ்ட அணியும் ஆப்கானிஸ்தான் கனிஷ்ட அணியும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளதோடு, டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, இடம்பெற இருக்கும் இரண்டாவது அரையிறுதியில் இலங்கை கனிஷ்ட அணியும் பங்களாதேஷ் கனிஷ்ட அணியும் மோதுகின்றன.

Points Table

GROUP A

TEAMS MAT WON LOST TIED N/R PTS NET RR
India Under-19s 3 3 0 0 0 15 +2.554
Sri Lanka Under-19s 3 2 1 0 0 9 +0.746
Nepal Under-19s 3 1 2 0 0 4 -0.334
Malaysia Under-19s 3 0 3 0 0 0 -2.817


GROUP B

TEAMS MAT WON LOST TIED N/R PTS NET RR
Bangladesh Under-19s 3 2 1 0 0 9 +1.584
Afghanistan Under-19s 3 2 1 0 0 9 +1.425
Pakistan Under-19s 3 2 1 0 0 9 +1.368
Singapore Under-19s 3 0 3 0 0 0 -11.312