இலங்கையிடம் இருந்த போட்டியின் போக்கு இங்கிலாந்திடம்

1057
Jonny Bairstow was bowled by Nuwan Pradeep as England stumbled, England v Sri Lanka, 3rd Investec Test, Lord's, 3rd day, June 11, 2016
@Getty Image

இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட இன்வெஸ்டெக் டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியின் 3ஆவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி தனது முதல் இனிங்ஸில் 128.4 ஓவர்களில் 416 ஓட்டங்களைப் பெற்று  சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதில் அதிஷ்டத்துடன் ஆடிய பேர்ஸ்டோவ் 167 ஓட்டங்களையும், எலஸ்டயர் குக் 85 ஓட்டங்களையும், க்றிஸ் வோக்ஸ் 66 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ஹேரத் நான்கு விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களான  லக்மல் 3 விக்கெட்டுகளையும்,  நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலங்கை அணி முதல் இனிங்ஸைத் தொடங்கியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கிய திமுத் கருணாரத்ன மற்றும் கௌஷால் சில்வா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எண்டர்சன், ப்ரோட்  ஆகியோரின் பந்துகளை எளிதாக சந்தித்தனர். இந்த ஜோடி முதல் விக்கட்டுக்காக 108 ஓட்டங்களைப் பகிர்ந்தார்கள். இவர்களது இந்த இணைப்பாட்டமே இந்தத் தொடரில் முதல் விக்கட்டுக்காகப் பெறப்பட்ட சிறந்த இணைப்பாட்டமாகும். திமுத் கருணாரத்ன 101  பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இறுதியில் 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 1 விக்கட் இழப்பிற்கு 162 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.  அப்போது ஆடுகளத்தில் கௌஷால் சில்வா ஆட்டம் இழக்காமல் நிதானமாக விளையாடி 139 பந்துகளில் 10 பவுண்டரிகள் அடங்கலாக  79 ஓட்டங்களையும் இளம் நம்பிக்கை நட்சத்திரம் குசல் மென்டிஸ் அவரது புதிய திட்டத்தின் படி பொறுமையாக விளையாடி 54 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களுக்கு அரைச்சதம், இலங்கை வலுவான நிலையில்

பின் போட்டியின் 3ஆவது நாளான நேற்று இலங்கை தமது இனிங்ஸைத் தொடர்ந்தது. ஆனால் நேற்றைய நாளில் வீசப்பட்ட 2ஆவது ஓவரிலேயே குசல் மென்டிஸ் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து லோர்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த 9ஆவது இலங்கையர் என்ற பெருமையைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கௌஷால் சில்வாவும் ஆட்டம் இழந்தார்.  இவர்கள் இருவரும் 3ஆவது நாளில் ஓட்டங்கள் எதுவும் பெறவில்லை. இதன் பின்பு இலங்கையின் விக்கட்டுகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் வீழ்த்தப்பட்டன. 7ஆம் இலக்ததில் களமிறங்கிய சுமார் 6 மாதங்களுக்கு பின் இலங்கை அணியில் இணைந்த குசல் பெரேரா இலங்கை அணியின் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயன்றாலும் ரங்கன ஹேரத்தை தவிர அவருக்கு யாரும் ஜோடியாக அமையவில்லை. இறுதியில் இலங்கை அணி 95.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் கௌஷால் சில்வா 79 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 42 ஓட்டங்களையும் , ரங்கன ஹேரத் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் க்றிஸ் வோக்ஸ் மற்றும் ஸ்டீபன் பின் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட்  ப்ரோட் ஆகியோர் தலா 2  விக்கட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இதன் பின் 2ஆவது இனிங்ஸில் 128 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி தமது 2ஆவது இனிங்ஸை ஆரம்பித்தது. முதல் விக்கட்டுக்காக 45 ஓட்டங்கள் பகிரப்பட்டன. பின் அடுத்தடுத்து விக்கட்டுகள் வீழ்ந்தன. இறுதியில் 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கட் இழப்பிற்கு 109 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆடுகளத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் 41 ஓட்டங்களோடும் ஸ்டீபன் பின் 6 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் பிரதீப் 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். அவர் வீழ்த்திய 3 விக்கட்டுகளும் போல்ட் முறையில் வீழ்த்தப்பட்டன.

நேற்றைய 3ஆவது நாளில் எதிர்பார்க்கப்பட்டளவு இலங்கை அணியின் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை. ஆனால் 2ஆவது இனிங்ஸில் நுவான் பிரதீப் துல்லியமாகப் பந்துவீசி இங்கிலாந்து வீரர்களை திணறடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இது போன்ற பந்துவீச்சுப் பிரதியை தொடர வேண்டும். இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமாயின் இயன்றளவு சீக்கிரமாக இங்கிலாந்து அணியின் மிகுதி 6 விக்கட்டுகளையும் வீழ்த்தவேண்டும். அத்தோடு தமக்கு நிர்ணயிக்கப்படும் வெற்றி இலக்கை அடைய தமது துடுப்பாட்டத்தைப் பலமானதாக ஆக்கிக் கொள்ளவேண்டும். இவ்வாறு இலங்கை அணி போட்டியைத் திட்டமிட்டு நிதானமாக கையாள்வார்களாக இருந்தால் இப்போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றிபெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதற்கு கடின உழைப்பு, மற்றும் நிதானம் அவசியம்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்