ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களுக்கு அரைச்சதம், இலங்கை வலுவான நிலையில்

1906
Kaushal Silva
©Getty Images

இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட இன்வெஸ்டெக் டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நேற்று லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பித்தது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் எலஸ்டயர் குக் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 279 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆட்ட நேர முடிவில் பேர்ஸ்டோவ் 107 ஓட்டங்களோடும், வோக்ஸ் 23 ஓட்டங்களோடும்ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வோக்ஸ் அரைசதம் அடித்து 66 ஓட்டங்களோடு  ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்கள் . ஆனால், பேர்ஸ்டோவ் தன்னுடைய அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

பிடியெடுப்பு நழுவவிடப்பட்டமையால் சதம் அடித்தார் பெயார்ஸ்டோ

இருந்தாலும் மறுமுனை விக்கெட்டுக்கள் விழ இங்கிலாந்து முதல் இனிங்ஸில் 128.4 ஓவர்களில் 416 ஓட்டங்களைப் பெற்று  சகல விக்கட்டுகளையும் இழந்தது. அதிஷ்டத்துடன் ஆடிய  பேர்ஸ்டோவ் 167 ஓட்டங்களைப் பெற்று இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில சுழற்பந்து வீச்சாளர் ஹேரத் நான்கு விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களான  லக்மல் 3 விக்கெட்டுகளையும்,  நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலங்கை அணி முதல் இனிங்ஸைத் தொடங்கியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கிய திமுத் கருணாரத்ன மற்றும் கவ்ஷால் சில்வா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எண்டர்சன், ப்ரோட்  ஆகியோரின் பந்துகளை எளிதாக சந்தித்தனர். இந்த ஜோடி முதல் விக்கட்டுக்காக 108 ஓட்டங்களைப் பகிர்ந்தார்கள். இவர்களது இந்த இணைப்பாட்டமே இந்த தொடரில் முதல் விக்கட்டுக்காகப் பெறப் பட்ட சிறந்த இணைப்பாட்டமாகும். திமுத் கருணாரத்ன 101  பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இறுதியில்  2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 1 விக்கட் இழப்பிற்கு 162 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆடுகளத்தில் கவ்ஷால் சில்வா ஆட்டம் இழக்காமல் நிதானமாக விளையாடி 139 பந்துகளில் 10 பவுண்டரிகள் அடங்கலாக  79 ஓட்டங்களையும் இளம் நம்பிக்கை நட்சத்திரம் குசல் மென்டிஸ் அவரது புதிய திட்டத்தின் படி பொறுமையாக விளையாடி 54 பந்துகளில் 24 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்றிருந்தார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Highlights of day two