இலங்கை அணிக்கு எதிராக கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பெற்று, தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
மழை காரணமாக அணிக்கு தலா 21 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயித்திருந்த, 151 என்ற ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
குசல் ஜனித் பெரேராவிற்கு பதிலாக இலங்கை அணியில் குசல் மெண்டிஸ்
போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல வேகமாக ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் சதீர சமரவிக்ரம நிதானமாக துடுப்பெடுத்தாடினார்.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி 5 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 55 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், ஆறாவது ஓவரின் மூன்றாவது பந்தில் நிரோஷன் டிக்வெல்ல டொம் கரனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவர் அணிக்காக 20 பந்துகளில் 36 ஓட்டங்களை குவிக்க, அடுத்து வந்த குசல் மெண்டிஸ் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்து, ஏமாற்றினார்.
தொடர்ந்து இலங்கை அணியின் ஓட்டங்களை இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்த, ஆதில் ரஷீட்டின் பந்து வீச்சில் சதீர சமரவிக்ரம (35), மற்றும் திசர பெரேரா (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய வீரர்களில் தினேஷ் சந்திமால் மாத்திரம் இறுதிக் கட்டம் வரை போராடி 34 (42) ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இவரைத் தவிர அதிகபட்சமாக தசுன் சானக 10 பந்துகளில் 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் ஆதில் ரஷீட் 4 விக்கெட்டுகளையும், டொம் கரன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் அடிப்படையில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 21 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பின்னர் தங்களது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, மாலிங்கவின் முதல் பந்து ஓவரில் 17 ஓட்டங்களுடன் சிறப்பான ஆரம்பத்தை பெற்றது.
எனினும் இரண்டாவது ஓவரில் சுழல் பந்து வீச்சாளர் அமில அபோன்சோ அழைக்கப்பட, தன்னுடைய தொடர்ச்சியான இரண்டு ஓவர்களிலும் முறையே ஜொனி பெயார்ஸ்டோவ் மற்றும் ஜோ ரூட் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து ஜேசன் ரோயுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் இயன் மோர்கன் சிறப்பான இணைப்பாட்டத்தை வழங்கினார். இதில் 41 ஓட்டங்களை வேகமாக பெற்றுக்கொடுத்த ஜேசன் ரோய், அகில தனன்ஜயவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 9 ஓவர்கள் நிறைவில் 83 ஓட்டங்களை பெற்றது.
தென்னாபிரிக்க உள்ளூர் T20 தொடரில் விளையாடவுள்ள ஜீவன் மெண்டிஸ்
பின்னர் ஜோடி சேர்ந்த இயன் மோர்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். அணித் தலைவர் இயன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணி சார்பில் அமில அபோன்சோ 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன், பல்லேகலை மைதானத்தில் மூன்று போட்டிகளில் இலங்கையை எதிர்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது வெற்றியை இன்று சுவைத்துள்ளது. இதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையிலான அடுத்த ஒருநாள் போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி இதே மைதானத்தில் (பல்லேகலை) நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<