கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 329 ஓட்டங்களை பெற்றதுடன், இலங்கை அணியை விட 278 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை அணியுடன் 46 ஓட்டங்கள் பின்னடைவில் இருந்த இங்கிலாந்து அணி, இன்று தங்களுடைய தற்காப்பு துடுப்பாட்ட வீரர் ஜெக் லீச்சின் விக்கெட்டினை முதல் இரண்டு ஓவர்களுக்குள் இழந்தது. எனினும், ரோரி பேர்ன்ஸ் சிறந்த ஓட்ட வேகத்துடன் அணியின் ஓட்ட எண்ணிக்கையை நகர்த்த, கீட்டன் ஜென்னிங்ஸ் அவருக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.

இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 73 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற நிலையில், அகில தனன்ஜய ஜென்னிங்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் ஓட்டமேதுமின்றி வந்த வேகத்தில் ஆட்டமிழக்க, ஜோ ரூட்டுடன் இணைந்து ரோரி பேர்னஸ் ஓட்டங்களை குவித்தார். இவர் தனது கன்னி டெஸ்ட் அரைச்சதத்தை பூர்த்தி செய்து 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர், ஜொஸ் பட்லர் களம் நுழைய இங்கிலாந்து அணி மதிய போசண இடைவேளையின் போது, 131 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
மூன்று அரைச்சதங்களுடன் இங்கிலாந்தின் ஓட்ட எண்ணிக்கையை முந்திய இலங்கை
மதிய போசண இடைவேளையை தொடர்ந்து, ஜொஸ் பட்லர் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் இணைப்பாட்டம் இலங்கை அணியை சோர்வடையச் செய்தது. சுழல் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட இருவரும் 87 பந்துகளுக்கு 74 ஓட்டங்களை பகிர்ந்தனர். வேகமாக துடுப்பாடிய ஜொஸ் பட்லரின் விக்கெட்டினை, அகில தனன்ஜய வீழ்த்திய போதும் இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையானது இலங்கை அணிக்கு சவாலாக விளங்கியது.
ஜோ ரூட் அரைச்சதம் கடந்து வேகமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கிய நிலையில், மொயீன் அலி சிக்ஸருடன் தனது ஓட்டத்தை ஆரம்பித்தார். எனினும் 10 ஓட்டங்களுடன் அவர் ஆட்டமிழந்து வெளியேற, பென் போக்ஸ் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் இணைந்து தேநீர் இடைவேளையின் போது அணியின் ஓட்ட எண்ணிக்கையை 259 ஆக உயர்த்தினர்.
தேநீர் இடைவேளைக்கு பின்னரும் சிறந்த இணைப்பாட்டம் பெறப்பட்ட நிலையில், ஜோ ரூட் தனது 15ஆவது டெஸ்ட் சதத்தை கடந்ததுடன், ஆசிய மண்ணில் அவர் பெற்ற இரண்டாவது சதமாகவும் இந்த சதம் பதிவானது. இதன் பின்னர், தனது சுழல் திறமையை வெளிப்படுத்திய அகில தனன்ஜய, ஜோ ரூட் (124) மற்றும் செம் கரன் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து டெஸ்ட் போட்டிகளில் தனது மூன்றாவது 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Photos: Sri Lanka Vs England | 2nd Test – (Day 03)
இதனையடுத்து ஆதில் ரஷீட்டையும் 2 ஓட்டங்களுடன் வெளியேற்றி, அகில தனன்ஜய தனது ஆறாவது விக்கெட்டை கைப்பற்றினார். இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 324 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டியானது துரதிஷ்டவசமாக போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர், மழையும் குறுக்கிட மூன்றாவது நாள் ஆட்டநேரம் நிறைவுபெறுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில், தனது முதலாவது டெஸ்ட் அரைச்சதத்தை பெற்றுள்ள பென் போக்ஸ் 51 ஓட்டங்களுடனும், ஜேம்ஸ் எண்டர்சன் 4 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளதுடன், இங்கிலாந்து அணி 278 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய அகில தனன்ஜய 6 விக்கெட்டுகளையும், டில்ருவான் பெரேரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
ஸ்கோர் விபரம்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க




















