விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இன்றி நடைபெற்று முடிந்த வலிகாமம் உதைப்பந்தாட்ட லீக்கின் முன்னாள் தலைவர் அமரர் .நவரட்னராசா அவர்களது ஞாபகார்த்தமானதலைவர் கிண்ணசுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் ஐயனார் விளையாட்டுக் கழகத்தை பெனால்டியில் வென்ற இளலாலை யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகம் தமது கனவுக் கிண்ணத்தை வென்றுள்ளது.  

வலிகாமம் கால்பந்து லீக்கின் ஏற்பாட்டில் கடந்த மாதம் ஆரம்பமாகிய இந்த சுற்றுப் போட்டியில் யாழ் மாவட்டத்தில் உள்ள பலம்மிக்க 10 அணிகள் தெரிவு செய்யப்பட்டு நொக் அவுட் முறையில் மோதல்கள் இடம்பெற்றன.  

தொடரில் பங்குகொண்ட அணிகள்

  • வதிரி டயமன்ஸ் வி.
  • இளவாலை யங்ஹென்றீசியன் வி.  
  • மணற்காடு சென் அன்ரனிஸ் வி.
  • அராலி பாரதி வி.
  • வேலணை ஐயனார் வி.  
  • குருநகர் பாடும்மீன் வி.  
  • பலாலி விண்மீன் வி.  
  • ஊரெளு றோயல் வி.  
  • கம்பர்மலை யங்கம்பன்ஸ் வி.  
  • புங்குடுதீவு சண் ஸ்ரார் வி.

இதில், இடம்பெற்று முடிந்த தீர்மானம் மிக்க அனைத்து ஆட்டங்களினதும் நிறைவில், பலம் மிக்க அணிகளான துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகம் மற்றும் இளம் வீரர்களை அதிகமாகக் கொண்ட இளவாலை யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகம் என்பன இறுதிப் போட்டிக்குத் தெரிவாகின.   

ஐயனார் விளையாட்டுக் கழகம் தமது அரையிறுதியில் டயமன்ஸ் விளையாட்டுக் கழகத்தை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது. அதே போன்று, யங்ஹென்றீசியன் அணி விளையாடிய ஊரெளு றோயல் அணியுடனான விறுவிறுப்பான அரையிறுதியில், 2-2 என போட்டி சமநிலையடைய, பெனால்டி உதையில் 4-2 என யங்ஹென்றீசியன் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.  

அமரர் அருளானந்தம் ஞாபகார்த்த கிண்ணம் வேலணை ஐயனார் அணி வசம்

கடந்த வாரம் இடம்பெற்ற அமரர் அருளானந்தம் ஞாபகார்த்த கிண்ணத் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற சூட்டோடு ஐயனார் அணியும், தேசிய அணி வீரர் ஞானரூபன் வினோத் காயத்திலிருந்து மீண்டு அணியில் இணைந்த தைரியத்துடன் யங்ஹென்றீசியன் அணியினரும் இறுதி மோதலில் களமிறங்கினர். இறுதிப் போட்டியானது, பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களின் வருகையுடன் துரையப்பா விளையாட்டரங்கில் மின்னொளியின் கீழ் ஆரம்பமானது.

ஆரம்பம் முதலே இரு தரப்பினரும் பலமாக மோதி முதல் கோலுக்கான முயற்சியை மேற்கொண்டனர். எனினும் தடுப்பு வீரர்களின் சிறப்பாட்டம் காரணமாக கோலுக்கான வாய்ப்பு இரு தரப்பினருக்கும் கிடைக்காமலேயே போனது.  

இவ்வாறான ஒரு நிலையில் முதல் பாதி, கோல்கள் இன்றி சமநிலையில் நிறைவுறும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். எனினும், அவ்வாறான எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக போட்டியின் 43ஆவது நிமிடத்தில் யங்ஹென்றீசியன் வீரர் டிலுக்ஷன் தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்து, முதல் பாதி நிறைவின்போது அணியை முன்னிலைப்படுத்தினார்.

முதல் பாதி : யங்ஹென்றீசியன் வி.  1 – 0 ஐயனார் வி.

பின்னர் ஆரம்பமாகிய இரண்டாவது பாதியானது, முதல் பாதியை விட முழுமையாக மாற்றமாக அமைந்தது. இரு அணி வீரர்களினதும் வேகமான விளையாட்டு, அபாரமான தடுப்புகள் மற்றும் கோல் முயற்சிகள் அனைத்தும் அவர்களது கிண்ணத்திற்கான கனவை பிரதிபளிக்கும் விதத்தில் இருந்தன.

அந்த வகையில் ஆட்டத்தின் 58ஆவது நிமிடத்தில் சுபராஜ் மூலம் தமக்கான முதல் கோலைப் பெற்ற ஐயனார் அணி, கோல்கள் எண்ணிக்கையை சமப்படுத்தியது.

எனினும் அவர்களது சமநிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த 3 நிமிடங்களில் அல்பரட் தனேஷ் மூலம் யங்ஹென்றீசியன் அணி தமக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக்கொண்டது.

அதன் பின்னர் 20 நிமிடங்களுக்கு எந்த தரப்பினராலும் கோல்கள் பெறப்படவில்லை. இந் நிலையில், 81ஆவது நிமிடத்தில் திலக்ஷனுக்கு ஐயனார் வீரர் விதுஷன் மூலம் பெனால்டி பெட்டி எல்லையில் வைத்து முறையற்ற தடுப்பு மேற்கொள்ளப்பட்டமைக்காக, அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதுடன், யங்ஹென்றீசியன் அணிக்கு பெனால்டி (தண்ட உதை) வாய்ப்பும் வழங்கப்பட்டது.

குறித்த உதையைப் பெற்றுக்கொண்ட தேசிய அணி வீரர் ஞானரூபன் வினோத், தனது வாய்ப்பை கோலாக மாற்றி அணியை 2 கோல்களினால் முன்னிலைப்படுத்தினார்.  

எனினும் அதற்கு அடுத்த நிமிடமே, அதற்கான பதில் கோல் ஐயனார் தரப்பினரால் கொடுக்கப்பட்டது. இந்தியாவில் விளையாடிய அனுபவம் கொண்ட அகீபன் தனது அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார். யங்ஹென்றீசியன் அணியின் பின்கள வீரர்கள் விட்ட தவறை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அவர் சிறந்த முறையில் இப்போட்டியில் தனது முதல் கோலைப் பதிவு செய்தார்.  

இரண்டாவது கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக்கின் சம்பியனாகிய நோர்த் டிராகன்ஸ்

இதன் காரணமாக இறுதிப் போட்டியின் கடைசிப் பத்து நிமிடங்களும் பார்வையாளர்களுக்கு பெரும் விருந்தாகவே அமைந்தது.

இவ்வாறான ஒரு நிலையில் போட்டியின் 89ஆவது நிமிடம் ஆட்டத்தை மாற்றியமைக்கும் ஒரு தருணமாய் இருந்தது. பெனால்டி எல்லையில் வைத்து யங்ஹென்றீசியன் வீரர் அனோஜனின் கையில் பந்து பட, எதிரணிக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்த உதையைப் பெற்ற அகீபன், அந்த வாய்ப்பின்மூலம் தனது அடுத்த கோலையும் பெற்று, கோல்கள் எண்ணிக்கையை சமப்படுத்தவே, மைதானத்தில் இருந்து வெளியே செல்ல எத்தணித்திருந்த அனைவரும் மீண்டும் பெனால்டி உதையைப் பார்ப்பதற்காக அங்கேயே நின்றனர்.

அதனைத் தொடர்ந்து மேலதிக நேரமும் நிறைவடைய, ஆட்டம் சமநிலையடைந்தமையினால், கிண்ணத்திற்கான வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கான பெனால்டி (சமநிலை தவிர்ப்பு உதை) வழங்கப்பட்டது.

முழு நேரம் : யங்ஹென்றீசியன் வி.  3 – 3 ஐயனார் வி.

பெனால்டி உதையின்போது

யங்ஹென்றீசியன் வி.க O O X O X
ஐயனார் வி.க X X O O  O

இரு அணிகளும் தமது முதல் 5 பெனால்டி உதைகளையும் நிறைவு செய்ததன் பின்னர் கோல்களின் எண்ணிக்கை 5-5 என சமநிலையில் இருந்தது. இதன் காரணமாக இறுதி உதையை ஐயனார் வீரர்கள் கோலாக்கினால் அவ்வணி வெற்றி பெறும், மாறாக அதனை மறைக்கும் பட்சத்தில் யங்ஹென்றீசியன் அணி வெற்றி பெறும் என்ற தீர்க்கமான நிலை ஏற்பட்டது.

எனவே, குறித்த உதையை மறைப்பதற்காக, கோல் காப்பாளர் அமல்ராஜனின் பொருப்பை அல்ப்ரட் தனேஷ் பெற்றார். இதற்கு முன்னர் இடம்பெற்ற பல போட்டிகளில் பெனால்டி உதையின்போது, கோல் காப்பாளராக செயற்பட்டு அணியை வெற்றிபெறச் செய்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட

அது போன்றே, அந்த முயற்சிக்கு சிறந்த பயனைக் கொடுக்கும் விதத்தில் இறுதி உதையை மறைத்த தனேஷ், யங்ஹென்றீசியன் அணியை அமரர் .நவரட்னராசா அவர்களது ஞாபகார்த்தமானதலைவர் கிண்ணசம்பியன்களாக மாற்றினார்.

இந்த வெற்றியின்மூலம் அணிக்கு 11 பேர் கொண்ட மாவட்ட மட்டப் போட்டியொன்றில் 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சம்பியன் பட்டத்தை வென்று புதிய பதிவொன்றை யங்ஹென்றீசியன் அணி நிலைநாட்டியது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனான, போட்டி ஆரம்பித்தது முதலே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்து ஐயனார் விளையாட்டுக் கழகத்தின் அகீபன் தெரிவு செய்யப்பட்டார்.

கோல் பெற்றவர்கள்

யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகம்

டிலுக்ஷன் 43’,   அல்ப்ரட் தனேஷ் 61’, ஞானரூபன் வினோத் 82’

ஐயனார் விளையாட்டுக் கழகம்

சுபராஜ் 58’, அகீபன் 83’ & 89’

மஞ்சள் அட்டை

யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகம்

ஜூட் சுபன் 56

ஐயனார் விளையாட்டுக் கழகம்

இதயதீபன் 69’, விதுஷன் 81’