சுபர் 4 சுற்றுக்காக கட்டாய வெற்றியினை எதிர்பார்த்துள்ள இலங்கை

419

ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை – ஆப்கான் அணிகள் குழு B இற்காக மோதும் போட்டி செவ்வாய்க்கிழமை (5) லாஹூர் கடாபி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 

இங்கிலாந்து T20 மகளிர் அணிக்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி

கவனிக்க வேண்டிய விடயங்கள் 

ஆசியக் கிண்ணத் தொடரில் குழு நிலை அணிகள் இடையிலான இறுதிப் போட்டியாக இலங்கைஆப்கான் அணிகள் மோதும் போட்டி அமைகின்றது. இதற்கு முன்னர் ஆசியக் கிண்ண குழு B அணிகளுக்கான போட்டிகள் இரண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில் இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இப்போட்டிகள் ஒவ்வொன்றிலும் தலா ஒரு வெற்றி வீதம் பதிவு செய்திருக்கின்றன.   

எனவே ஆப்கான்இலங்கை போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் இலகுவாக சுபர் 4 சுற்றுக்கு தெரிவாக முடியும். எனினும் இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடையும் போதும் இலங்கை அணிக்கு அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதற்கு இலங்கை ஆப்கான் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் பாரிய ஓட்ட வித்தியாச அடிப்படையிலோ அல்லது அதிக ஓவர்கள் எஞ்சிய நிலையிலையோ தோல்வி அடையாமல் இருப்பது அவசியமாக உள்ளது. 

மறுமுனையில் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு ஆப்கான் இலங்கை அணியுடன் வெற்றி பெற்று இலங்கை அணியுடன் நடைபெறும் போட்டியில் 70 ஓட்டங்கள் வித்தியாச அடிப்படையிலோ, அல்லது 36 ஓவர்களுக்குள்ளோ போட்டியின் வெற்றி இலக்கை அடைய வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. இதேநேரம் பங்களாதேஷ் அணி சுபர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவது இடம்பெறாமல் இருக்க மிக மிகக் குறைவான வாய்ப்புக்களே காணப்படுகின்றன. 

உலக சாதனையுடன் ஆசியக் கிண்ணத்தினை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை

இலங்கை அணி  

முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாத போதிலும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான மோதலில் சிறப்பாக பந்துவீச்சாளர்களை இலங்கை அணி உபயோகம் செய்திருந்தது. குறிப்பாக முதல் போட்டியில் இலங்கை அணியினால் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழல்பந்துவீச்சாளர்கள் சிறப்பான முறையில் சுழற்சி செய்யப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டிருந்தனர். இதன் காரணமாக இலங்கை அணி தமது முன்னணி தெரிவு வீரர்களான வனிந்து ஹஸரங்க, துஷ்மன்த சமீர போன்ற வீரர்கள் இல்லாத நிலையிலும் குறைவான ஓட்டங்களுக்குள் பங்களாதேஷ் அணியினை மட்டுப்படுத்தியிருந்தது 

எனவே ஆப்கான் அணியுடனான மோதலில் பங்களாதேஷ் அணியுடன் விளையாடிய அதே குழாம் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் மதீஷ பத்திரன, மகீஷ் தீக்ஷன போன்ற இளம் வீரர்கள் இலங்கை அணியின் நம்பிக்கைகுரிய பந்துவீச்சாளர்களாகக் காணப்படுகின்றனர் 

துடுப்பாட்டத்தினை நோக்கும் போது இலங்கை அணி பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் மோசமான முன்வரிசை ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருந்தது. குறிப்பாக இலங்கை அணியின் ஆரம்பவீரர்கள் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். இது இலங்கை அணியின் மத்திய வரிசை வீரர்களுக்கு சிரமமான நிலையொன்றினை தோற்றுவித்ததோடு, அதிக Dot Balls விளையாடப்படுவதற்கும் காரணமாக அமைந்தது 

இலங்கை அணியின் துடுப்பாட்டவீரர்களில் முன்வரிசை வீரரான குசல் மெண்டிஸ் தொடர்ந்தும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றார். அவருக்கு ஆப்கான் மோதலில் தனது திறமையினை நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலை காணப்படுகின்றது. அதேநேரம் மத்தியவரிசை வீரர்களான சரித் அசலன்க, அணித்தலைவர் தசுன் ஷானக்க மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோரின் ஆட்டத்தினையும் இலங்கை அணி அதிகம் நம்பியிருக்கின்றது. 

ஆப்கான் குழாம் 

ஆப்கான் அணியைப் பொறுத்தவரை இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவர்கள் பங்களாதேஷ் மோதலில்  மேற்கொண்ட தவறுகள் தோல்விக்கு காரணமாக அமைந்திருந்தது. அணியின் வீரர்களை நோக்கும் போது இலங்கை மோதலில் துடுப்பாட்டத்தினைப் பலப்படுத்தும் வீரர்களாக இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், றஹ்மத் சாஹ் மற்றும் அணித் தலைவர் ஹஸ்மத்துல்லா சஹிதி ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர் 

மறுமுனையில் அணியின் பந்துவீச்சுத்துறையானது ரஷீட் கான், முஜிப் ஆகியோரது சுழல் மூலமும் பசால்ஹக் பரூக்கியின் வேகத்தின் மூலமும் பலப்படுத்தப்படுகின்றது. இவர்கள் தவிர மொஹமட் நபி அணியின் நம்பிக்கைகுரிய சகலதுறைவீரராக காணப்படுகின்றார் 

ஒருநாள் போட்டிகளாக ஆசியக் கிண்ணத் தொடரில் இதுவரை நடைபெற்ற தொடர்களில் இதுவரை இரண்டு தடவைகள் இலங்கையை எதிர்கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் அணி அதில் ஒரு வெற்றியினைப் பதிவு செய்திருந்ததோடு 2018ஆம் ஆண்டு தொடரில் தற்போதைய ஆசியக் கிண்ண நடப்புச் சம்பியன்கள் தொடரிலிருந்து வெளியேற காரணமாக அமைந்திருந்தமையும் முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும். எனவே நாளைய மோதலில் விடயங்கள் எவ்வாறு அமைகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<