சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்திருப்பதோடு, இப்போட்டியின் வெற்றிக் கிண்ணத்தையும் தமதாக்கியுள்ளது.
ஆப்கான் – இலங்கை அணிகள் இடையில் முதல் தடவையாக நடைபெறுகின்ற இந்த டெஸ்ட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (04) போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. இதன் போது ஆப்கான் அணியானது தமது இரண்டாம் இன்னிங்ஸில் 199 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த இப்ராஹிம் சத்ரான் 101 ஓட்டங்களையும், றஹ்மத் சாஹ் 46 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.
இதன் பின்னர் இன்று போட்டியின் நான்காம் நாளில் இலங்கையை விட 42 ஓட்டங்கள் மாத்திரமே பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த ஆப்கான் அணியானது தொடக்கம் முதலே விக்கெட்டுக்களை பறிகொடுக்கத் தொடங்கி தடுமாறியது. அந்தவகையில் நான்காம் நாளில் முதல் விக்கெட்டாக றஹ்மத் சாஹ் அரைச்சதம் கடந்து 54 ஓட்டங்களுடன் காணப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரின் விக்கெட்டினைத் தொடர்ந்து பிரபாத் ஜயசூரியவின் சுழலில் தடம் புரள தொடங்கிய ஆப்கான் அணி தொடர்ச்சியாக குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுக்கத் தொடங்கியது. இதில் ஆப்கான் அணிக்கு சதம் விளாசி நம்பிக்கை அளித்த இப்ராஹிம் சத்ரானும் ஆட்டமிழந்தார். இப்போட்டியில் தன்னுடைய கன்னி சதத்தை பூர்த்தி செய்த இப்ராஹிம் சத்ரான் 12 பெளண்டரிகள் அடங்கலாக 114 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
சத்ரானின் விக்கெட்டின் பின்னரும் தொடர்ந்தும் தடுமாற்றத்தில் இருந்து மீளாத ஆப்கான் அணியானது நான்காம் நாளின் மதிய போசணத்தை அடுத்து தமது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களை இரண்டாம் இன்னிங்ஸிற்காக எடுத்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுக்களைச் சாய்த்ததோடு அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களை சுருட்டினார்.
ஆப்கான் அணியின் இரண்டாம் இன்னிங்ஸின் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக 56 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கான் அணி போட்டியின் வெற்றி இலக்கை விக்கெட் இழப்பின்றி அடைந்தது. இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரட்ன 32 ஓட்டங்கள் எடுக்க, நிஷான் மதுஷ்க 22 ஓட்டங்கள் எடுத்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக பிரபாத் ஜயசூரிய தெரிவாகியிருந்தார்.