இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் கோமாவில் இருந்து திரும்பினார் அஜக்ஸ் வீரர் நூரி

126

நெதர்லாந்து முன்னணி கால்பந்து கழகமான அஜக்ஸ் அணியின் மத்தியகள வீரர் அப்தல்ஹக் நூரி இரண்டு ஆண்டுகள், எட்டு மாதங்கள் மற்றும் 19 நாட்களின் பின் கோமாவில் இருந்து எழுந்துள்ளார்.

22 வயதான தனது சகோதரர் எழுந்திருப்பதாகவும் சுயநினைவு பெற்றதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தி இருப்பதாகவும் நூரியின் சகோதரர் நெதர்லாந்தின் ‘டி டெலிகிராப்’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.   

கழிப்பறை சுத்தம் செய்யும் நட்சத்திர வீரர்: சாடியோ மானேயின் மறுபக்கம்

கால்பந்து மைதானத்தில் சாடியோ……

“அப்பி (அப்தல்ஹக்) நல்ல நிலைக்கு திரும்பி வருகிறார். ஆம், அவர் விழித்துவிட்டார், உறங்குகிறார், உண்கிறார், உளறுகிறார். ஆனால் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை” என்று அவரது சகோதரர் அப்தர்ரஹிம் தெரிவித்தார்.

“நல்ல நேரங்களில் ஒருவகையில் தொடர்பாடுகிறார், பின்னர் புருவங்களை அசைக்கிறார். நீண்ட நேரத்திற்கு அவரால் அதனைத் தொடர முடியவில்லை. அவருக்கு அது சிறந்த பயிற்சியாகத் தெரிகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார். நூரி தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருப்பதாகவும் தாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறிந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

நூரியை வீட்டில் இருந்தே கவனித்துக் கொள்வதற்கு தேவையான வசதிகளை அவரது குடும்பத்தினர் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     

மொரோக்கோவைப் பூர்வீகமாகக் கொண்டவரும் நெதர்லாந்து மத்தியகள வீரருமான நூரி, ஆஸ்திரியாவில் 2017, ஜூலை 8 ஆம் திகதி நடைபெற்ற அஜக்ஸ் மற்றும் ஜெர்மனியின் வெர்டர் பெர்மன் (Werder Bremen) அணிகளுக்கு இடையிலான நட்புறவுப் போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் விழுந்தார். இதனால் அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டது.     

அப்போது களத்தில் வழங்கப்பட்ட சிகிச்சை போதுமானதாக இல்லை என்பதை ஆம்ஸ்டர்டாமை தளமாகக் கொண்ட அஜக்ஸ் அணி பின்னர் ஒப்புக்கொண்டது. அந்த அணியின் மருத்துவர் டொன் டி வின்டர் உடன் நீக்கப்பட்டார். 

வின்டர் UEFA இன் வழிகாட்டலை பின்பற்ற தவறியிருப்பதோடு அவரை உயிர்த்தெழச் செய்யும் முயற்சியை தாமதித்தே மேற்கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அந்த நேரத்தில் இதயத்துடிப்பை இயக்கச் செய்யும் கருவியை விரைவாக பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று அஜக்ஸ் தலைமை நிர்வாகி எட்வின் வான் டர் சார் தெரிவித்துள்ளார்.

“இது நடந்திருந்தால் அப்தல்ஹக் நல்ல நிலைக்கு வந்திருக்க சாத்தியம் இருந்தது” என்று வான் டர் சார் அப்போது வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. 

அப்பி என்று பெரிதும் அறியப்படும் நூரி ஆம்ஸ்டர்டாமில் பிறந்தவராவார். அஜக்ஸ் அகடமி மூலம் அந்த அணிக்கு தேர்வான அவர் விபத்து நிகழும் முன் அஜக்ஸ் அணிக்காக ஒன்பது போட்டிகளில் விளையாடி இருந்தார். 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<