சதமொன்றுடன் இலங்கை அணிக்காக தனித்து போராடிய கருணாரத்ன

1049

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் நிறைவில் முதல் இன்னிங்ஸில் துடுப்பாடியிருக்கும் இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன பெற்றுத்தந்த சதம் சரிவு ஒன்றிலிருந்து மீள்வதற்கு முக்கிய  பங்களிப்பை வழங்கியிருக்கின்றது.

2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை மண்ணுக்கு மீண்டும் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாபிரிக்க அணி இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு T20 போட்டி ஆகியவை கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.

மேற்கிந்திய தீவுகளை அடுத்து இலங்கைக்கு தென்னாபிரிக்காவின் சவால்

இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட முதல் தொடர் இன்று  காலை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தற்காலிக தலைவரான சுரங்க லக்மால் முதலில் தனது தரப்பிற்கு துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருந்தார்.

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியை தாமதித்த குற்றச்சாட்டில், இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, இலங்கை அணியை வழிநடாத்தும் பொறுப்பு சுரங்க லக்மாலுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

அதேநேரம் தனது காயத்தில் இருந்து பூரண சுகத்தினைப் பெற்றிருந்த திமுத் கருணாரத்ன இந்த டெஸ்ட் தொடரின் மூலம் இலங்கை அணிக்கு திரும்பியிருந்தார்.  

காலி மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் ரங்கன ஹேரத், லக்ஷான் சந்தகன், தில்ருவான் பெரேரா ஆகிய மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுடன் இப்போட்டியில் களமிறங்கிய இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை சார்பில் அதிக விக்கெட்டுக்களை சாய்த்த இளம் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவுக்கு வாய்ப்பு தரவில்லை.  குமாரவோடு சேர்த்து போதிய உடற்தகுதியை நிரூபிக்கத் தவறிய காரணத்தினால் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேராவும் அணியில் இணைக்கப்படவில்லை.

இலங்கை அணி  

திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணத்திலக்க, தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், ரொஷேன் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, சுரங்க லக்மால் (அணித்தலைவர்), லக்ஷான் சந்தகன்

 

சந்திமால், ஹதுருசிங்க, குருசிங்கவுக்கு ஐ.சி.சியினால் போட்டித் தடை

இலங்கை டெஸ்ட் அணித்…

மறுமுனையில் ஏபி டி வில்லியர்ஸ், மோர்னே மோர்க்கல் போன்ற நட்சத்திர வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்த பின்னர் முதல் டெஸ்ட் தொடரில் விளையாடும் தென்னாபிரிக்க அணி நீண்ட காலத்திற்குப் பின்னர் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்னை இணைத்திருந்தது.

தென்னாபிரிக்க அணி  

டீன் எல்கார், அய்டன் மார்க்ரம் , ஹஷிம் அம்லா, டெம்பா பவுமா, பாப் டு ப்ளெசிஸ் (அணித்தலைவர்), வெர்னோன் பிலாந்தர், குயின்டன் டி கொக்,  தப்ரைஸ் சம்சி, கேசவ் மகராஜ், ககிஸோ றபாடா, டேல் ஸ்டெய்ன்

போட்டியில் இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தனுஷ்க குணதிலக்க மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோருடன் ஆரம்பித்தது.

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை ஆக்கிரமிப்புச் (Aggressive) செய்து துடுப்பாடிய தனுஷ்க குணதிலக்க சிறப்பான ஆரம்பத்தினை காட்டிய போதிலும் ககிஸோ றபாடாவின் வேகத்தில் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக தென்னாபிரிக்க விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக்கிடம் பிடிகொடுத்து வீழ்ந்தார். குணதிலக்க ஆட்டமிழக்கும் போது 4 பெளண்டரிகளுடன் 26 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் களம் வந்த தனஞ்சய டி சில்வாவும் சிறிது நேரத்தில் தப்ரைஸ் சம்சியின் சுழலில் போல்ட் செய்யப்பட்டார். தான் விளையாடிய இறுதி நான்கு டெஸ்ட் இன்னிங்சுகளிலும் 40 ஓட்டங்களையே பெற்றிருக்கும் சில்வா இம்முறையும் வெறும் 11 ஓட்டங்களைப் பெற்று ஏமாற்றினார்.

தனஞ்சய டி சில்வாவின் விக்கெட்டை அடுத்து புதிய துடுப்பாட்ட வீரராக வந்த குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்னவுடன் சேர்ந்து நல்ல இணைப்பாட்டம் ஒன்றுக்கு அடித்தளம் போட்டிருந்தார்.

முதல் நாளின் மதிய போசணத்தை தாண்டி சிறிது நேரம் நீடித்த இந்த இணைப்பாட்டம் (45) குசல் மெண்டிஸின் விக்கெட்டோடு முடிவுக்கு வந்தது. டேல் ஸ்டெயினின் பந்துவீச்சினை எதிர் கொண்டிருந்த மெண்டிஸ்  மிட் ஒன் திசையில் ககிஸோ றபாடாவிடம் இலகுவான பிடியெடுப்பு ஒன்றைக் கொடுத்து 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும், மெண்டிஸ் இந்த இன்னிங்ஸில் பெற்றுக் கொண்ட 24 ஓட்டங்கள் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் 2,000 ஓட்டங்களை பூர்த்தி செய்ய போதுமாக இருந்தது.

மெண்டிஸை அடுத்து துடுப்பாட வந்த அஞ்செலோ மெதிவ்ஸ், ரோஷேன் சில்வா ஆகியோர் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியிருந்தனர். இருவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களை பெற்ற நிலையில் றபாடாவின் வேகத்துக்கு இரையாகினர்.

மதிய போசணத்தை அடுத்து இலங்கை அணி துரிதகதியில் மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்த காரணத்தினால் ஒரு கட்டத்தில் 119 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இதன்போது புதிய துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல கருணாரத்னவுடன் இணைந்து ஆறாம் விக்கெட்டுக்காக பெறுமதியான (42) இணைப்பாட்டம் ஒன்றை வழங்கி ஆட்டமிழந்தார். நிரோஷன் திக்வெல்லவின் விக்கெட்டை அடுத்து போட்டியில் மழையின் குறுக்கீடு ஏற்பட்டது. மழைக்கு முன்னர் கருணாரத்ன தனது 15 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தை பூர்த்தி செய்திருந்தார்.

மழையினால் 25 நிமிடங்கள் வரை போட்டி தடைப்பட, தடைப்பட்ட இந்த நேரத்திற்குள் முதல் நாளுக்கான தேநீர் இடைவேளையும் எடுக்கப்பட்டிருந்தது. தேநீர் இடைவேளையை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் இலங்கை அணி மேலும் இரண்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்து 176 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து மேலும் இக்கட்டுக்குள்ளானது.

எனினும், திமுத் கருணாரத்னவுடன் சேர்ந்த அணித் தலைவர் சுரங்க லக்மால், லக்ஷான் சந்தகன் ஆகியோர் இலங்கையின் இறுதி இரண்டு விக்கெட்டுக்களுக்காகவும் சிறந்த முறையில் 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். இது சரிவிலிருந்த இலங்கை அணியை நல்ல நிலைக்கு இட்டுச் சென்றது. இந்த இணைப்பாட்டத்திற்கு பெரும் பங்கை வழங்கிய திமுத் கருணாரத்ன தனது 8 ஆவது டெஸ்ட் சதத்தையும், தென்னாபிரிக்காவுக்கு எதிராக பெற்றுக் கொண்ட முதல் டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்தார்.

முடிவில், 78.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை அணி திமுத் கருணாரத்னவின் சதத்தின் உதவியோடு  தமது முதல் இன்னிங்சுக்காக 287 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் 30 ஓட்டங்களையேனும் தாண்டாத நிலையில் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்ற கருணாரத்ன 13 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 158 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தென்னாபிரிக்காவுடனான இந்த டெஸ்ட் கருணாரத்னவின் 50 ஆவது டெஸ்ட் போட்டி என்பதால், அவர் இலங்கை சார்பில் 50 ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் கடந்த மூன்றாவது வீரராகவும் மாறினார்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளரான ககிஸோ றபாடா 4 விக்கெட்டுக்களையும், சைனமன் சுழல் வீரரான தப்ரைஸ் சம்சி 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நிறைவின் போது, 4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 4 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. களத்தில் டீன் எல்கார் 4 ஓட்டங்களுடனும், கேசவ் மகராஜ் ஓட்டமேதுமின்றியும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.

தென்னாபிரிக்க அணியில் பறிபோன விக்கெட்டாக அவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான எய்டன் மார்க்ரம் அமைந்திருந்தார். மார்க்கரமின் விக்கெட்டை அவர் ஓட்டமேதுமின்றிய நிலையில் ரங்கன ஹேரத் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் இலங்கையை விட 283 ஓட்டங்கள் பின்தங்கி காணப்படுகின்றது.

ஸ்கோர் விபரம்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க