அவிஷ்க பெர்னாந்துவின் அதிரடி துடுப்பாட்டம் வீண்; வெற்றியை தன்வசமாக்கிய தென்னாபிரிக்கா

3091

நடைபெற்றுக்கொண்டிருக்கும் இலங்கை, தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே கனிஷ்ட அணிகளுக்கு இடையிலான முக்கோண ஒரு நாள் தொடரின், இன்றைய போட்டியில் தனது பந்து வீச்சாளர்களை முழுமையாக பயன்படுத்திய தென்னாபிரிக்க கனிஷ்ட அணி  39 ஓட்டங்களால் வெற்றியை சுவீகரித்துள்ளது.

பார்ல் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் தலைவர் மிச்சேல் வான் புய்ரேன் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இதன்படி களமிறங்கிய, தென்னாபிரிக்காவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இலங்கை கனிஷ்ட அணியின் வலதுகை வேகப்பந்து வீச்சாளர், போட்டியின் முதல் பந்திலேயே அவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த மெத்திவ் ப்ரீட்ஸ்கேவை ஆட்டமிழக்கச் செய்தார். இதனால், சற்று நிதானமாகவே ஓட்டங்களை சேர்க்க ஆரம்பித்த தென்னாபிரிக்க கனிஷ்ட அணி சீரான ஓட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தமது துடுப்பாட்டத்தினை தொடர்ந்தது. தென்னாபிரிக்காவின் முன்வரிசை வீரர்கள் சிறந்த ஆரம்பத்தினை தந்திருந்த போதிலும் அவற்றினை பெரிய இலக்க ஓட்டங்களாக மாற்றுவதில், இலங்கை கனிஷ்ட அணியின் பந்து வீச்சாளர்கள் காரணமாக சிரமத்தை எதிர்நோக்கினர். இருப்பினும், தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் மத்திய வரிசை வீரர்களில் ஒருவரான முஹம்மட் மயேட் அதிரடியாக ஆடி, 93  பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 14 பவுண்டரிகளை விளாசி 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்த சதத்தின் உதவியுடன், தென்னாபிரிக்க கனிஷ்ட அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 260 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை கனிஷ்ட அணியின், பந்து வீச்சில் திறமையினை வெளிக்காட்டியிருந்த நிப்புன் ரன்சிக்க 31 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், புனித செபஸ்தியன் கல்லூரியின் இடது கை சுழல் பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம 2 விக்கெட்டுகளை தன்வசப்படுத்தியிருந்தார்.

பின்னர், 50 ஓவர்களில் நிர்ணயம் செய்யப்பட்ட 261 ஓட்டங்கள் என்கிற வெற்றியிலக்கினை அடைவதற்கு மைதானத்தினை நோக்கி விரைந்த இலங்கை கனிஷ்ட அணி, ஒரு நல்ல ஆரம்பத்தை வெளிக்காட்டியிருந்தது. அதிரடியினை வெளிப்படுத்திய இலங்கை கனிஷ்ட அணியின் தலைவரான அவிஷ்க பெர்னாந்து வெறும் 62 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளை விளாசி 96 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், அக்கோனா நையக்காவின் பந்தில் ரெய்னாட் வான் டொன்டரிடம் பிடிகொடுத்து மைதானத்தினை விட்டு துரதிர்ஷ்டவசமாக சதம் கடக்க முடியாமல் வெளியேறினார். மூன்றாவது விக்கெட்டாக பறிபோன பெர்னாந்துவின் விக்கெட்டின் போது, இலங்கை கனிஷ்ட அணி, 20.4 ஓவர்களில் 157  ஓட்டங்களை பெற்று  வலுவான நிலையிலையே இருந்தது. இதனை அடுத்து அவிஷ்க பெர்னாந்துவுடன் வெற்றியிலக்கை அடைவதற்கு இலங்கை கனிஷ்ட அணியினை வழிநடாத்திக் கொண்டிருந்த கமிந்து மெண்டிசும் 42 ஓட்டங்களில், இலங்கை கனிஷ்ட அணி மேலதிகமாக 10 ஓட்டங்களை குவித்திருந்த வேளையில் ஆட்டமிழந்து சென்றார்.

இதனை அடுத்து, தமது சுழல் பந்து வீச்சாளர்களை நுட்பமாக பயன்படுத்திய தென்னாபிரிக்க கனிஷ்ட அணி இலங்கை அணியின் இறுதி ஆறு விக்கெட்டுகளையும் 54 ஓட்டங்களிற்குள் சுருட்டிக் கொண்டது. இதனால் இலங்கை கனிஷ்ட அணி 41.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மேலதிக 39 ஓட்டங்களை பெற முடியாமல் தென்னாபிரிக்காவிடம் தோல்வியடைந்தது.

இலங்கை கனிஷ்ட அணி சார்பாக, விஷ்வ சத்துரங்க, கமிந்து மெண்டிஸ் ஆகியோரை தவிர ஒரு வீரர் மாத்திரமே 20 ஓட்டங்களை தாண்டியதுடன் தோல்விக்கு வித்திட்ட மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் யாவரும் மிகவும் மோசமான துடுப்பாட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தனர்.

பந்து வீச்சில், இலங்கை கனிஷ்ட அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கிய அக்கோன நையக்கா 43 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், இலங்கை கனிஷ்ட அணியின் இறுதி துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச்செய்வதில் முன்னணி வகித்த ருஆன் டி ஸ்வார்ட் 10 ஓவர்கள் வீசி 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இப்போட்டியில் வெற்றி பெற்றதற்காக தென்னாபிரிக்க கனிஷ்ட அணி 4 புள்ளிகளினை பெற்றுக்கொண்டதுடன் இப்போட்டியின் ஆட்ட நாயகனாக சதம் கடந்த முஹம்மட் மயேட் தெரிவாகினார்.

இத்தொடரில், ஜிம்பாப்வே கனிஷ்ட அணியும் இலங்கை கனிஷ்ட அணியும் மோதும் அடுத்த போட்டி ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்க கனிஷ்ட அணி: 260/8 (50) – முஹம்மட் மயேட் 102(93), மிச்சேல் வான் புய்ரேன் 35(42), நிப்புன் ரன்சிக்க 31/3(7), பிரவீன் ஜயவிக்ரம 42/2(10)

இலங்கை கனிஷ்ட அணி: 221 (41.5) – அவிஷ்க பெர்னாந்து 96(62), கமிந்து மெண்டிஸ் 42(42), ருஆன் டி ஸ்வார்ட் 45/3(10), அகோனா நையக்கா 43/3(6.5)

போட்டி முடிவு – தென்னாபிரிக்க கனிஷ்ட அணி 39 ஓட்டங்களால் வெற்றி