மலேசியாவில் நடைபெற்றுவரும் 19 வயதின் கீழ் மகளிர் அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
முதல் போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தியிருந்த இலங்கை 19 வயதின் கீழ் அணி இன்று (21) நடைபெற்று முடிந்த மே.தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.
>>மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சகீப் அல் ஹஸன்
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணிக்காக சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த சஞ்சனா காவிந்தி 39 ஓட்டங்களை பெற, அணித்தலைவி மனுதி நாணயக்கார 41 ஓட்டங்களையும், இறுதி பந்து ஓவர்களில் தஹமி செனத்மா 25 பந்துகளில் 31 ஓட்டங்களை விளாசினர். பந்துவீச்சில் செலீனா ரொஸ் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி ஆரம்பம் முதல் இலங்கையின் சுழல் பந்துவீச்சுக்கு தடுமாறியது. முதல் ஆறு ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்த மே.தீவுகள் அணி தொடர்ந்தும் ஓட்டங்களை குவிக்க தடுமாறியது.
இலங்கையின் பந்துவீச்சில் சமோதி பிரபோத அற்புதமான இடதுகை சுழல் பந்துவீச்சால் எதிரணியை கட்டுப்படுத்த மே.தீவுகள் அணியால் 19.4 ஓவர்களில் 85 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. இலங்கையின் பந்துவீச்சில் சமோதி பிரபோதா 3 விக்கெட்டுகளையும், அசேனி தலகுனே மற்றும் லிமன்சா திலகரட்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சுருக்கம்
இலங்கை மகளிர் U19 – 166/5 (20) சஞ்சனா காவிந்தி 38, மனுதி நாணயக்கார 41, தஹமி செனத்மா 31*, செலீனா ரொஸ் 2/25
மே.தீவுகள் மகளிர் U19 – 85 (19.4) சமரா ரம்னத் 24, சமோதி பிரபோதா 3/16, லிமன்சா திலகரட்ன 2/7, அசேனி தலகுனே 2/16
முடிவு – இலங்கை அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி






















