மலேசியாவில் நடைபெற்றுவரும் மகளிருக்கான 19 வயதின் கீழ் T20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி தங்களுடைய முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி குழுநிலைப் போட்டியில் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை 19 வயதின் மகளிர் அணி தோல்வியை தழுவிக்கொண்டது.
>>ஐ.சி.சி. விதிமுறைகளுக்கு அமைய இந்தியாவின் சம்பியன்ஸ் கிண்ண ஜேர்சி
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியை மிகச்சிறந்த பந்துவீச்சின் மூலம் 118 ஓட்டங்களுக்கு இலங்கை U19 மகளிர் அணி கட்டுப்படுத்தியிருந்தது. இந்திய அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை கொங்காடி திரீஷா 49 ஓட்டங்களை பெற்றார். இலங்கையின் பந்துவீச்சில் பிரமுதி மெத்சரா, லிமன்சா திலகரட்ன மற்றும் அசேனி தலகுனே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்தை காட்டியது. குறிப்பாக வெறும் 12 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின்னர் இலங்கை அணிக்கு எந்தவொரு வாய்ப்பையும் கொடுக்காத இந்திய அணி மிகச்சிறப்பாக பந்துவீசி 58 ஓட்டங்களுக்கு இலங்கை அணியை கட்டுப்படுத்தியது. இந்திய அணியின் பந்துவீச்சில் ஷப்னம் ஷகில், பருனிகா சிசோடியா மற்றும் வி.ஜே. ஜொசிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இலங்கை அணி குழுநிலை போட்டிகளின் முடிவில் 2 வெற்றிகளை பெற்றுக்கொண்டதுடன், 2 புள்ளிகளுடன் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை அணி ஸ்கொட்லாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுருக்கம்
இந்தியா மகளிர் U19 – 118/9 (20) கொங்காடி திரீஷா 49, பிரமுதி மெத்சரா 2/10, லிமன்சா திலகரட்ன 2/14, அசேனி தலகுனே 2/24
இலங்கை மகளிர் U19 – 58/9 (20) ரஷ்மிகா செவ்வந்தி 15, பருனிகா சிசோடியா 2/7, சுப்னம் ஷகில் 2/9, ஜொசிதா 2/17
முடிவு – இந்தியா 19 வயதின் கீழ் மகளிர் அணி 60 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<