இலங்கை மற்றும் இந்திய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மொஹிட் ஜங்ராவின் அபார பந்து வீச்சு மற்றும் அயுஷ் படோனி, அதர்வா டைட் ஆகியோரின் அபார சதங்களின் உதவியுடன் இந்திய இளையோர் அணி இன்னிங்ஸ் மற்றும் 21 ஓட்டங்களால் வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றது.
சதம் கடந்த நிஷான் மதுஷ்க; போராட வேண்டிய நிலையில் இலங்கை கனிஷ்ட அணி
கொழும்பு என்.சி.சி மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி, தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் கொழும்பு றோயல் கல்லூரியின் பசிந்து சூரியபண்டார 69 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் அயுஷ் பட்டோனி, ஹர்ஷ தியாகி ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.
இதனையடுத்து தமது முதல் இன்னிஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி, அயுஷ் படோனி (185), அதர்வா டைட் (117) ஆகியோரின் அபார சதங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 589 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
இந்திய கனிஷ்ட அணியின் துடுப்பாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்ற அயுஸ் படோனி 4 சிக்ஸர்கள் மற்றும் 19 பௌண்டரிகள் அடங்கலாக 185 ஓட்டங்களை குவித்திருந்தார்.
பந்துவீச்சில் கல்ஹார சேனாரத்ன 6 விக்கெட்டுக்களையும், கலன பெரேரா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
இதனையடுத்து, இலங்கை கனிஷ்ட அணி தமது எதிர்தரப்பினை விட 345 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.
முதலாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கமில் மிஷார 13 ஓட்டங்களுடன் ஏமாற்றம் தந்த போதிலும், மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மொரட்டுவ வித்தியாலயத்தின் நிசான் மதுஷ்க திறமையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 104 ஓட்டங்களைப் பெற்றார். மதுஷ்கவின் விக்கெட்டின் பின்னர் இலங்கை இளையோர் அணி மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைய முன்னர் மற்றுமொரு விக்கெட்டினையும் பறிகொடுத்தது.
இதன்படி, இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீள்வதற்கு இலங்கை அணி 168 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இன்றைய நான்காம் நாள் (இறுதி நாள்) ஆட்டத்தை ஆரம்பித்தது.
இதில், 20 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பசிந்து சூரியபண்டார மேலும் 16 ஓட்டங்களை பெற்ற நிலையில் அயுஷ் பட்டோனியின் பந்துவீச்சில் பவன் ஷாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
மறுமுனையில் 19 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மொறட்டுவை புனித செபெஸ்டியன் கல்லூரி மாணவன் நுவனிந்து பெர்னாண்டோ, இந்திய அணியின் அபார பந்துவீச்சு நெருக்கடிக்கு மத்தியிலும் அரைச்சதம் எட்டினார்.
இந்த நிலையில், போட்டியின் மூன்றாவது நாளான நேற்று இலங்கை அணியின் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய வலதுகை மித வேகப்பந்து வீச்சாளரான மொஹிட் ஜங்ரா, நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்த நுவனிந்து பெர்னாண்டோவை வெளியேற்றினார். அவர் 130 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 14 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 78 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
காலி கிரிக்கெட் மைதானம் அகற்றப்படுவது குறித்து முன்னாள் வீரர்கள் கவலை
எனினும், 5ஆவது விக்கெட்டுக்காக நுவனிந்து பெர்னாண்டோவுடன் நிதானமாக துடுப்பாடி வந்த காலி றிச்மண்ட் கல்லூரியின் சகலதுறை வீரரான சந்துன் மெண்டிஸ், 37 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை மொஹிட் ஜங்ராவின் பந்துக்கு தேவ்தட் படிக்கலிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து பின்வரிசையில் களமிறங்கிய கல்ஹார சேனாரத்ன 3 ஓட்டங்களுடனும், ஷஷிக டில்ஷான் 5 ஓட்டங்களுடன் வெளியேறியதோடு, கடைசி விக்கெட்டுக்காக சற்று வேகமாகவும் சிறப்பாகவும் துடுப்பெடுத்தாடிய காலி மஹிந்த கல்லூரி மாணவன் நிபுன் மாலிங்க 23 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், அர்ஜுன் டெண்டுல்கரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன்படி, இலங்கை அணி 45 ஓட்டங்களுக்குள் இறுதி 5 விக்கெட்டுக்களை இழந்தது. அத்துடன், இலங்கையின் எந்தவொரு பின்வரிசை வீரரும் 30 ஓட்டங்களைக் கூட தாண்டாத நிலையில், 324 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து இன்னிங்ஸ் மற்றும் 21 ஓட்டங்களால் இலங்கை தோல்வியைத் தழுவியது.
இதேநேரம், மருதானை புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த 15 வயதுடைய இளம் வீரரான துனித் வெல்லாலகே உபாதை காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட களமிறங்கவில்லை.
வட மாகாண வீரர்களின் சாதனையே தேசிய அணிக்கான தெரிவு
இந்திய இளையோர் அணியின் சார்பில் வேகத்தில் மிரட்டிய மொஹிட் ஜங்ரா தனது முதலாவது 5 விக்கெட்டுக்கள் பந்துவீச்சு பிரதியை பதிவுசெய்தார். இவருக்கு அடுத்தபடியாக அயுஷ் பட்டோனி 2 விக்கெட்டுகளை வீழ்த்த, அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் ஆகாஷ் பாண்டே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கை மற்றும் இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ஸ்கோர் சுருக்கம்



























