த்ரில் வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி

140

சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி ஆகியவை இடையே நடைபெற்று முடிந்திருக்கும் இளையோர் ஒருநாள் தொடரின், நான்காவது போட்டியில் இலங்கை ஒரு விக்கெட்டினால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

ஷெவோன், வனுஜவின் அபார துடுப்பாட்டத்துடன் தொடரை வென்றது இலங்கை U19

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பங்களாதேஷின் இளம் கிரிக்கெட் அணி இந்நாட்டுவீரர்களுடன் ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் ஆடுகின்றது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 3-0 என ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், நான்காவது இளையோர் ஒருநாள் போட்டி இன்று (23) தம்புள்ளை நகரில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் இளம் கிரிக்கெட் அணியின் தலைவர் SM மெஹரொப் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அவர்களின் அணிக்காக பெற்றார். அதன்படி, முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்கள் குவித்தது.

இலங்கையை வலுப்படுத்திய மஹேலவின் ஐந்து உபாயங்கள்

பங்களாதேஷ் தரப்பின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் மெஹரொப் மற்றும் ஆரிபுல் இஸ்லாம் ஆகியோர் அரைச்சதம் விளாசினர். இதில், மெஹரொப் 52 ஓட்டங்கள் எடுக்க, ஆரிபுல் இஸ்லாம் 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் துனித் வெலால்கே 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்க்க, வினுஸ ரன்போல், தனல் ஹேமனாந்த மற்றும் சசங்க நிர்மால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 225 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி, போட்டியின் இறுதி ஓவர் வரை போராடி வெற்றி இலக்கினை 49.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்த ரவின் டி சில்வா 100 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்களை பெற்றிருக்க, செவோன் டேனியல் உம் 32 ஓட்டங்கள் பெற்று தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

பங்களாதேஷ் தரப்பின் பந்துவீச்சு சார்பில் முஷ்பிக் ஹஸன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், ஆஹொசன் ஹபிப் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி போராட்டம் காண்பித்த போதும் அவர்கள் இருவரினதும் பந்துவீச்சு வீணாகியிருந்தது.

இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி இளையோர் ஒருநாள் தொடரில் 4-0 என முன்னிலை பெறுகின்றது.

இதேவேளை இலங்கை – பங்களாதேஷ் அணிகள் பங்குபெறும் இளையோர் ஒருநாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை (25) தம்புள்ளை மைதானத்தில் நடைபெறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் (19) – 224/8 (50) SM மெஹ்ரொப் 52, ஆரிபுல் இஸ்லாம் 50, துனித் வெலால்கே 45/4, சசங்க நிர்மல் 32/1

இலங்கை (19) – 225/9 (49.3) ரவீன் டி சில்வா 88, செவோன் டேனியல் 32, முஸ்பிக் ஹஸன் 39/3, ஆஹோசன் ஹபீப் 44/2

முடிவு – இலங்கை 19 வயதின்கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி ஒரு விக்கெட்டினால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<