பங்களாதேஷ் இளையோர் அணியை சுழலால் மிரட்டிய அஷான், ரொஹான் ஜோடி

867

சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கட்டுநாயக்கவில் நடைபெற்று வருகின்ற இளையோர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில், திறமையான சுழல்பந்து வீச்சினை வெளிப்படுத்தி பின்னர் தமது இரண்டாவது இன்னிங்ஸிலும் துடுப்பாடி வரும் இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் வீரர்களை விட 219 ஓட்டங்கள் முன்னிலையோடு காணப்படுகின்றது.

கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் அணி 13 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்து இளையோர் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையோடு காணப்பட்டிருந்த நிலையில், இந்த இளையோர் டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான தீர்மானமிக்க போட்டி நேற்று (23) ஆரம்பமானது.

இலங்கை இளையோர் அணிக்கு வலுச்சேர்த்த நவோத் பரணவிதானவின் அரைச்சதம்

ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை இளையோர் அணி நவோத் பராணவிதான, கமில் மிஷார ஆகியோர் பெற்றுக் கொண்ட அரைச்சதங்களின் உதவியோடு போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமது முதல் இன்னிங்ஸில் 219 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் நவீன் பெர்னாந்து 19 ஓட்டங்களுடனும், ரொஹான் சஞ்சய 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது காணப்பட்டிருந்தனர்.

இன்று (24) போட்டியின் இரண்டாம் நாளில் ஒரு விக்கெட் மாத்திரமே எஞ்சிய நிலையில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி 91 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 226 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை இளம் அணியின் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் கடந்த நவோத் பராணவிதான 72 ஓட்டங்களினையும் கமில் மிஷார  52 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.

பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக சஹின் அலாம் வெறும் 37 ஓட்டங்களை விட்டுத்தந்து 5 விக்கெட்டுக்களையும், ரிட்டுன்ஜோய் செளத்ரி 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாட தொடங்கிய பங்களாதேஷ் இளம் அணி நல்ல ஆரம்பத்தினை காட்டிய போதிலும் தொடர்ந்து இலங்கையின் சுழல் ஜோடியான அஷான் டேனியல் – ரொஹான் சஞ்சய ஆகியோரின் பந்துவீச்சுக்கு  முகம் கொடுக்க முடியாமல் வெறும் 109 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

தமது முதல் விக்கெட்டினை 77 ஓட்டங்களுக்கு பறிகொடுத்து ஏனைய அனைத்து விக்கெட்டுக்களையும் மேலதிக 32 ஓட்டங்களுக்குள்ளேயே இழந்து மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய பங்களாதேஷ் இளம் அணி சார்பான துடுப்பாட்டத்தில் பெரும்பாலான வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்ட எண்ணிக்கையை மாத்திரமே பெற, அவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தன்ஷித் ஹசன் அரைச்சதம் (50) ஒன்றுடன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

இதேநேரம் மிகவும் திறமையான பந்துவீச்சை வெளிக்காட்டிய இலங்கை இளம் அணியில் ரொஹான் சஞ்சய மற்றும் அஷான் டேனியல் ஆகியோர் தலா 5 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியை சமநிலையில் நிறைவு செய்த யாழ் பாடசாலைகள்

தொடர்ந்து 117 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி போட்டியின் இரண்டாம் நாள் நிறைவுக்கு வரும் போது 102 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையில் காணப்படுகிறது.

இலங்கை இளையோர் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் நவோத் பராணவிதான 36 ஓட்டங்களை பெற்றதோடு, களத்தில் சொனால் தினுஷ 16 ஓட்டங்களுடனும், மொஹமட் சமாஸ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது காணப்படுகின்றனர்.

பங்களாதேஷ் இளையோர் அணியின் பந்துவீச்சில் ரகிபுல் ஹஸன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<