போட்டியை சமநிலையில் நிறைவு செய்த யாழ் பாடசாலைகள்

182

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் பிரிவு 3 அணிகளுக்கிடையிலான தொடரில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மாறவில சென். சேவியர் கல்லூரிகளுக்கிடையிலான போட்டி நேற்றைய தினம் (23)  வென்னப்புவ அல்பேர்ட் பீரீஸ் மைதானத்தில் நிறைவிற்கு வந்தது.

நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பற்றிக்ஸ் கல்லூரி 160 ஓட்டங்களை முதலாவது இன்னிங்சுக்காக பதிவுசெய்தது. றோசாந்தன் 56 ஓட்டங்களையும், பொயிட்டர் காஸ்ரோ 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ரொசேன் சவிந்து 4 விக்கெட்டுக்களையும், யோஹண பெரேரா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இறுதிப் போட்டியை சாதனை வெற்றியாக மாற்றிய இலங்கை அணி

பின்னர் தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய சென். சேவியர் கல்லூரி 101 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணி சார்பில் யோஹண பெரேரா 36 ஓட்டங்களையும், பூர்ண யசஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பற்றிக்ஸ் கல்லூரி சார்பில் மொனிக் நிதுசன் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், பொயிட்டர் கஸ்ரோ 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

59 ஓட்டங்கள் முன்னிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியினர் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டனர். பியெட்றிக் 54 ஓட்டங்களையும், டினீசியஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ரமேஷ் நெத்சன் மற்றும் ரொசேன் சவிந்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை தம்வசப்படுத்தியிருந்தனர்.

269 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென். சேவியர் கல்லூரி அணி யோஹண பெரேராவின் அரைச்சதத்தின் துணையுடன் 3 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களினை பெற்றிருந்தவேளையில், இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவிற்கு வர போட்டி சமநிலையில் அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

சென். பற்றிக்ஸ் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 160 (45.2) – இவன் றொசாந்தன் 56, பொயிட்டர் காஸ்ரோ 52, ரொசேன் சவிந்து 4/25, யோஹண பேரேரா 3/60

சென் சேவியர் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 101 (39.1) – யோகண பெரேரா 31, பூர்ண யசஸ் 26, மொனிக் நிதுசன் 4/15, டெஸ்வின் 2/19

சென். பற்றிக்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 209/5d (47) -பியேட்றிக் 54, டனீசியஸ் 30*, காஸ்ரோ 29, ரமேஷ் நெத்சன் 2/21, ரொசேன் சவிந்து 2/59

சென் சேவியர் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 113/3 (30.1) – யோஹண பெரேரா 50

போட்டி முடிவு – சமநிலை (முதலாவது இன்னிங்ஸ் புள்ளிகள் அடிப்படையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி வெற்றி)


பிலியந்தலை மத்திய கல்லூரி எதிர் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி

பிலியந்தலை மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற பிரிவு 2 அணிகளுக்கு இடையிலான போட்டியொன்றில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினை எதிர்த்து பிலியந்தலை  மத்திய கல்லூரி போட்டியிட்டிருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் அணியினர் அணித் தலைவர் அபினாஷின் அரைச்சதம் மற்றும் டினோசனின் 41 ஓட்டங்களின் துணையுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பிலியந்தலை மத்திய கல்லூரி சார்பில் உஷான் டீமந்த 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஹேசான் மதுசங்க 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை இளையோர் அணிக்கு வலுச்சேர்த்த நவோத் பரணவிதானவின் அரைச்சதம்

பின்னர் தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய பிலியந்தலை வீரர்கள் ருச்சிற அதிகாரி அரைச்சதமும், ஜமித் டில்சானின் ஆட்டாமிழக்காது அபார சதமும் பெற்றுக்கொடுக்க சகல விக்கெட்டுகளையும் இழந்து 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். சென். ஜோன்ஸ் கல்லூரி சார்பாக பந்துவீச்சிலும் அணித்தலைவர் அபினாஷ் 77 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

44 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த யாழ் வீரர்கள் வெறுமனே 122 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தனர். துடுப்பாட்டத்தில் எல்சான் டெனுசன் 34 ஓட்டங்களையும், சஜித் 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பிலியந்தலை மத்திய கல்லூரி சார்பாக பந்துவீச்சில் இரண்டாவது இன்னிங்சிலும் அசத்திய உஷான் டீமந்த 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், ஹேசான் மதுசங்க 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

79 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பிலியந்தலை வீரர்கள் 4.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 32 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், இரண்டாவது நாள் நிறைவிற்கு வர போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

சென். ஜோன்ஸ் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 188 (47.4) – அபினாஷ் 50, டினோசன் 41, தனுஜன் 33, உஷான் டீமந்த 3/23, ஹேஷான் மதுசங்க 3/49

பிலியந்தலை மத்திய கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 232 (60.4) – ஜமித் டில்சான் 114*, ருச்சிர அதிகாரி 50, அபினாஷ் 5/77, எல்சான் டெனுசன் 2/26, சரன் 2/58

சென். ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 122 (44.2) – எல்சான் டெனுசன் 34, சஜித் 33, உசான் டீமந்த 5/44, ஹேசான் மதுசங்க 3/35

பிலியந்தலை மத்திய கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 32/2 (4.2) டமித் டில்சான் 21, அபினாஷ் 2/16

போட்டி முடிவு – சமநிலை (முதலாவது இன்னிங்ஸ் புள்ளிகள் அடிப்படையில் பிலியந்தலை மத்திய கல்லூரி வெற்றி)


சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி எதிர் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி

செந்த மைதானத்தில் பற்றிக்ஸ் கல்லூரியை எதிர்கொண்ட ஸ்கந்தவரோதயாக் கல்லூரி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பற்றிக்ஸ் கல்லூரி 122 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. அதிகபட்சமாக மொனிக் நிதுசன் 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஸ்கந்தா சார்பில் வலது கை சுழற்பந்து வீச்சாளர்களான டிலுக்சன் 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், பிரசன் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கைது

பின்னர் தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா வீரர்கள் 2 ஓட்டங்களால் முன்னிலை பெற்றனர். மொத்த ஓட்ட எண்ணிக்கையான 122 ஓட்டங்களில், தனுசன் 66 ஓட்டங்களை சேர்த்தார். பந்துவீச்சில் டனீசியஸ் 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களையும், டெஸ்வின், பியெட்றிக் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்சில் 108 ஓட்டங்களுக்கு பற்றிக்ஸ் கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. காஸ்ரோ அதிகபட்சமாக 33 ஓட்டங்களை பெற்றிருந்த அதேவேளை, பந்துவீச்சில் டான்சன் 4 விக்கெட்டுக்களையும், தனுசன் மற்றும் பிரசன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

107 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணி, 66 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. பின்வரிசை வீரர்களின் துணையுடன் 8 விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை பெற்றிருந்தவேளையில் இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவிற்கு வர போட்டி சமநிலையில் முடிவுற்றது.

போட்டியின் சுருக்கம்

சென். பற்றிக்ஸ் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 120 (49.4) மொனிக் நிதுசன் 38, காஸ்ரொ 21, டிலுக்சன் 5/29, பிரசன் 2/16

ஸ்கந்தவரோதயாக் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 122 (38.2) – தனுசன் 66, டனீசியஸ் 4/33, டெஸ்வின் 2/16, பியேட்றிக் 2/23

சென். பற்றிக்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 108 (41.1) – காஸ்ரோ 33, பியேட்றிக் 28, மொனிக் நிதுசன் 26, டான்சான் 4/33, தனுசன் 2/19, பிரசன் 2/21

ஸ்கந்தவரோதயாக் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 108/8 (55) பியேட்றிக் 2/09, காஸ்ரோ 2/30, டனீசியஸ் 2/30

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<