இலங்கை பாகிஸ்தான் செல்வது உறுதி : போட்டி அட்டவணை வெளியானது!

1405

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20I  போட்டிகளில் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று (23) அறிவித்துள்ளது. 

அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு பயணிக்கவுள்ள இலங்கை அணி, செப்டம்பர் 27ம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 9ம் திகதி வரையில் போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாக கிரிக்கெட் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சீரற்ற காலநிலையால் கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்…

பாகிஸ்தான் சுற்றுப் பயணம் குறித்து நேற்றைய தினம் நடைபெற்றிருந்த ஊடக சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிடுகையில், பாகிஸ்தானில் மூன்று T20I போட்டிகள் அல்லது மூன்று ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே விளையாடும் என குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், இன்றைய தினம் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இலங்கை அணி மூன்று T20I  போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. எனினும், ஒக்டோபர் மாதம் நடைபெறவிருந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் அட்டவணையின் படி, முதலில் ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 27ம் திகதி ஆரம்பமாவதுடன், T20I  போட்டிகள் ஒக்டோபர் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதில், T20I போட்டிகள் கராச்சியிலும், ஒருநாள் போட்டிகள் லாஹுரிலும் நடைபெறவுள்ளன.

இலங்கை அணியானது கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் வருவதற்கு ஒப்புக்கொண்டமைக்கு தன்னுடைய மகிழ்ச்சியினை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஏஷான் மணி வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், ஒருநாள் மற்றும் T20I போட்டிகள் நடாத்தப்படும் பட்சத்தில், பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை அறிந்துக்கொள்ள முடியும் எனவும், அதனால் டெஸ்ட் தொடரை பாகிஸ்தானில் நடத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புவதாகவும் ஏஷான் மணி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், பாகிஸ்தான் சுற்றுப் பயணம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா குறிப்பிடுகையில், “வீரர்களின் பாதுகாப்புக்கான முழு பொறுப்பினையும் இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றுக்கொள்ளும். அதுமாத்திரமின்றி, அந்நாட்டின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் நிலவும் பட்சத்தில் இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது“ என குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாள் போட்டியில் விளையாட பாகிஸ்தான் செல்கிறது இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு…

இதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி அட்டவணையானது, இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் சம்மி சில்வா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ஏஷான் மணி ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் மூலமாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தகவல் வெளியிட்டுள்ளது.

போட்டி அட்டவணை

ஒருநாள் போட்டிகள்

  • முதல் ஒருநாள் போட்டி – செப்டம்பர் 27 – கராச்சி
  • இரண்டாவது ஒருநாள் போட்டி – செப்டம்பர்  29 – கராச்சி
  • மூன்றாவது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 2 – கராச்சி

T20I போட்டிகள்

  • முதல் T20I போட்டி – ஒக்டோபர் 5 – லாஹுர்
  • இரண்டாவது T20I போட்டி – ஒக்டோபர் 7 – லாஹுர்
  • மூன்றாவது T20I போட்டி – ஒக்டோபர் 9 – லாஹுர்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<