இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டேன் பெட்டர்சனின் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புகளுடன் தென்னாபிரிக்க அணி 221 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றுள்ளது.
தங்களுடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 242 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்றைய தினம் ஆட்டத்தை தொடர்ந்தது.
சிறந்த நிலையில் இருந்த இலங்கை அணி இன்றைய தினம் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நேற்றைய தினம் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் 44 ஓட்டங்களுடனும், கமிந்து மெண்டிஸ் 48 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய தனன்ஜய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட போதும், டேன் பெட்டர்சனின் ஒரே ஓவரில் ஆட்டமிழக்க இலங்கை அணி 300 ஓட்டங்களை பெற தடுமாறியது.
இறுதியாக பிரபாத் ஜயசூரிய 24 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள இலங்கை அணி 328 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 30 ஓட்டங்களால் பின்னடைவை சந்தித்தது. தென்னாபிரிக்காவின் பந்துவீச்சில் டேன் பெட்டர்சன் 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜென்சன் மற்றும் கேஷவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் 30 ஓட்டங்கள் முன்னிலையுடன் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணிக்கு எய்டன் மர்க்ரம் அரைச்சதத்துடன் சிறந்த ஆரம்பத்தை கொடுத்தார்.
இவரின் ஆட்டமிழப்புடன் தென்னாபிரிக்கா அணி மொத்தமாக 3 விக்கெட்டுகளை இழந்திருந்த போதும், ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் மற்றும் தெம்பா பௌவுமா ஆகியோர் சிறந்த இணைப்பாட்டமொன்றை பகிர்ந்துக்கொண்டனர். பௌவுமா 48 ஓட்டங்களையும், ஸ்டப்ஸ் 36 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற, தென்னாபிரிக்க அணி 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு, 221 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 2 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்னாண்டோ ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியுள்ளனர்.