பாகிஸ்தானுக்கு துடுப்பாட்ட அனர்த்தம் வழங்கி இறுதிப் போட்டியில் இலங்கை

Sri Lanka tour of Pakistan 2026 

1
Sri Lanka tour of Pakistan 2026 

லாஹூரில் நடைபெற்று முடிந்திருக்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்களால் இலங்கை வீழ்த்தியிருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணியானது முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியிருக்கின்றது.

>>பாகிஸ்தான் டெஸ்ட் அணியிலிருந்து ஷான், சாஜித் மற்றும் நோமன் நீக்கம்

முன்னதாக போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார். இப்போட்டியில் வெற்றி பெறுவது இறுதிப் போட்டி வாய்ப்பினை தீர்மானிக்கும் என்பதால் இலங்கை போட்டியின் தொடக்கத்தில் இருந்தே  சிறப்பாக செயற்பட்டது.

ஆரம்பத்தில் இலங்கையின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அணியில் பாபர் அசாம் மட்டுமே சற்று இலங்கையின் பந்துவீச்சினை தாக்குப் பிடித்து அதிகபட்சமாக 29 ஓட்டங்கள் பெற்றார். மற்ற வீரர்களிடமிருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில் பாகிஸ்தான் வெறும் 25.3 ஓவர்களில் 110 ஓட்டங்களுக்குடன் சுருண்டது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷங்க 8.3 ஓவர்கள் பந்துவீசி 34 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இது அவரின் சிறந்த ஒருநாள் போட்டிப் பந்துவீச்சுப் பெறுதியாகவும் மாறியது. சஹான் ஆராச்சிகே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, அசித பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே மற்றும் எஷான் மலிங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

பின்னர் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் நிலைத்து ஆடிய கமிந்து மெண்டிஸ் பொறுப்பான துடுப்பாட்டத்தோடு இலங்கை அணி 18.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 114 ஓட்டங்களை எட்டியது.

>>மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம்

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 60 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களைக் குவித்தார். அவருக்குத் துணையாக நின்ற பவன் ரத்நாயக்க ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் சஹீன் அப்ரிடி மற்றும் அரபாத் மின்ஹாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அது போதுமானதாக அமையவில்லை. போட்டியின் ஆட்டநாயகனாக டில்ஷான் மதுஷங்க தெரிவு செய்யப்பட்டார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<