பாகிஸ்தான் அணிக்கு எதிராக கராச்சியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தங்களுடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தினேஷ் சந்திமாலின் அரைச் சதத்தின் உதவியுடன் 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
நேற்றைய முதல்நாள் ஆட்டநேர நிறைவில் 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்றைய தினம் களமிறங்கிய இலங்கை அணி, மதிய போசன இடைவேளைக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லசித் எம்புல்தெனிய (13) மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் (13) ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறினர்.
கராச்சியில் இன்று (19) ஆரம்பமாகியுள்ள இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு…
எனினும், இதன் பின்னர் ஜோடி சேர்ந்த தனன்ஜய டி சில்வா மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினர். மதியபோசன இடைவேளை கடந்த பின்னரும் இவர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஒரு கட்டத்தில் இருவரும் அரைச் சதம் கடக்க வாய்ப்புகள் இருந்த போதும், தனன்ஜய டி சில்வா துரதிஷ்டவசமாக 32 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வருகைத்தந்த நிரோஷன் டிக்வெல்லவுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால், டெஸ்ட் வருகையினை நிரூபித்து, அரைச் சதம் விளாசினார்.
இவரின் அரைச் சதத்தின் பின்னர், 21 ஓட்டங்களை பெற்றிருந்த நிரோஷன் டிக்வெல்ல, மொஹமட் அப்பாஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்ட நிலையில், விரைவாக ஓட்டங்களை குவிக்க முற்பட்ட தினேஷ் சந்திமால் 74 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இறுதியாக சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய டில்ருவான் பெரேரா, 9வது விக்கெட்டுக்காக விஷ்வ பெர்னாண்டோவுடன் இணைந்து ஓட்டங்களை குவித்ததுடன், 48 ஓட்டங்களை பெற்று 2 ஓட்டங்களால் அரைச் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் சஹீன் ஷா அப்ரிடி 5 விக்கெட்டுகளையும், மொஹமட் அப்பாஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். இதில், சயீன் ஷா அப்ரிடி டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சினையும் பதிவுசெய்தார்.
போட்டியில் துடுப்பாட்ட வீரர்களின் மதிக்கத்தக்க பங்களிப்புடன் இலங்கை அணி 271 ஓட்டங்களை பெற்று, பாகிஸ்தான் அணியை விட 80 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது. பாகிஸ்தான் அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.
அயர்லாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு…
இதேவேளை, இன்றைய தினம் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி, ஆட்டநேர நிறைவில் விக்கெட்டிழப்பின்றி 57 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷான் மசூட் 21 ஓட்டங்களையும், ஆபித் அலி 32 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணியானது இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு மேலும் 23 ஓட்டங்களை பெறவேண்டும்.