சாதனைகளுடன் இலங்கைக்கு பலம் சேர்த்த துடுப்பாட்ட வீரர்கள்

1459
Sri Lanka tour of New Zealand 2023

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட நிறைவில், இலங்கை கிரிக்கெட் அணியானது குசல் மெண்டிஸ் மற்றும் திமுத் கருணாரட்ன ஆகியோரின் அரைச்சதங்களோடு வலுப் பெற்றிருக்கின்றது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (09) காலை நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் அரங்கில் ஆரம்பமாகியது.

>> தீர்மானமிக்க டெஸ்ட்டில் நியூசிலாந்துக்கு இலங்கை என்ன செய்யும்?

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணித்தலைவர் டிம் சௌத்தி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கினார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி மைதானம் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்ததன் காரணமாக மூன்று முதன்மை வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியிருந்தது.

இலங்கை அணி

ஓசத பெர்னாண்டோ, திமுத் கருணாரட்ன (தலைவர்), குசல் மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, பிரபாத் ஜயசூரிய, கசுன் ராஜித, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார

நியூசிலாந்து அணி

டிம் சௌத்தி (தலைவர்), டொம் பிளன்டல், மைக்கல் பிரஸ்வெல், டெவோன் கொன்வெய், மேட் ஹென்ரி, டொம் லேதம், டேரைல் மிச்சல், நெயில் வெக்னர், ஹென்ரி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன், ப்ளைர் டிக்னர்

இதன் பின்னர் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணிக்கு ஆரம்பவீரர்களாக திமுத் கருணாரட்ன மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் களம் வந்தனர்.

எனினும் தொடர்ந்த ஆட்டத்தில் ஓசத பெர்னாண்டோ டிம் சௌத்தியின் பந்துவீச்சில் விக்கெட்காப்பாளரான டொம் பிளன்டலிடம் பிடிகொடுத்து 13 ஓட்டங்களுடன் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். ஓசத பெர்னாண்டோவின் பின்னர் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக பொறுப்பான முறையில் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் திமுத் கருணாரட்ன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் இணைப்பாட்டமாக 137 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இதனையடுத்து இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த குசல் மெண்டிஸ் தன்னுடைய 16ஆவது அரைச்சதத்துடன் 16 பௌண்டரிகள் அடங்கலாக 83 பந்துகளில் 87 ஓட்டங்கள் பெற்றார். குசல் மெண்டிஸ் இப்போட்டியில் 40 பந்துகளுக்கு அரைச்சதம் பெற்று டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து மண்ணில் அதிவேக அரைச்சதம் பெற்ற வெளிநாட்டு வீரராக சாதனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குசல் மெண்டிஸின் பின்னர் அரைச்சதம் பெற்றிருந்த திமுத் கருணாரட்ன தனது விக்கெட்டினைப் பறிகொடுத்தார். திமுத் கருணாரட்ன ஆட்டமிழக்கும் போது தன்னுடைய 32ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 7 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

திமுத் கருணாரட்னவின் பின்னர் இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டுக்காக தினேஷ் சந்திமால் – அஞ்செலோ மெதிவ்ஸ் ஜோடி 82 ஓட்டங்களுடன் பெறுமதிக்க இணைப்பாட்டம் ஒன்றினைப் பகிர்ந்தது.

எனினும் இந்த இணைப்பாட்டத்தின் முடிவாக தினேஷ் சந்திமால் டிம் சௌத்தியின் பந்துவீச்சில் விக்கெட்காப்பாளர் டொம் லேதமிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் சந்திமால் 6 பௌண்டரிகள் உடன் 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த இணைப்பாட்டத்தின் நடுவே போட்டியில் மழையின் குறுக்கீடு ஏற்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மழையின் பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் டிக்வெல்ல என இரண்டு துரித விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த இலங்கை அணி சற்று தடுமாற்றம் காட்டிய போதும் களத்தில் இருந்த தனன்ஞய டி சில்வா தனது ஆட்டம் மூலம் இலங்கை அணிக்கு நம்பிக்கை அளித்தார்.

இதனால் போட்டியின் முதல் நாள் நிறைவில் இலங்கை அணி 75 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் காணப்படுகின்றது. களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் தனன்ஞய டி சில்வா 39 ஓட்டங்களுடனும், கசுன் ராஜித 16 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அஞ்செலோ மெதிவ்ஸ் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 98 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுக்க, நிரோஷன் டிக்வெல்ல 07 ஓட்டங்களுடன் ஏமாற்றியிருந்தார்.

இதில் அஞ்செலோ மெதிவ்ஸ் இன்றைய போட்டி மூலம் டெஸ்ட் போட்டிகளில் 7000 ஓட்டங்கள் என்கிற மைல்கல்லினை கடந்து, இலங்கை சார்பில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற மூன்றாவது துடுப்பாட்ட வீரராக சனத் ஜயசூரியவின் சாதனையை (6,973) முறியடித்திருந்தார்.

நியூசிலாந்து பந்துவீச்சில் டிம் சௌத்தி 3 விக்கெட்டுக்களையும், மேட் ஹென்ரி 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<