உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட குழாத்தில் தர்ஜினி, எழிலேந்தினி உள்ளடக்கம்

226

இங்கிலாந்தின் லிவர்பூலில் எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கைக் குழாத்தில் வட மாகாணத்தைச் சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் மற்றும் எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

15ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் எதிர்வரும் ஜுலை மாதம் 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை லிவர்பூலில் நடைபெறவுள்ளது. இதில் A குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள அவுஸ்திரேலியா, வட அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

வலைப்பந்தாட்ட உலகையே வென்ற யாழ். மங்கை தர்ஜினி சிவலிங்கம்

சிங்கப்பூரில் கடந்தவாரம் நிறைவுக்கு வந்த 11ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட…..

இம்முறை உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள 12 பேர் கொண்ட இலங்கை அணி நேற்றுமுன்தினம் (15) அறிவிக்கப்பட்டது.

இதில் வலைப்பந்தாட்ட உலகில் அதி சிறந்த சூட்டர் (shooter) வீராங்கனை என்ற பெருமைக்குரியவரும் ஆசியாவிலேயே அதி உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம், மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக களமிறங்கவுள்ளார்.

கடந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் 3 வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணியில் இடம்பிடித்த தர்ஜினி, இலங்கை அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அதுமாத்திரமின்றி, அவுஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற தொழில்சார் கழக வலைப்பந்தாட்டப் போட்டிகளில் அவர் விளையாடி வருகின்றார்.  

இதேவேளை, அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேச மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற வட மாகாணத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனையான எழிலேந்தினி சேதுகாவலர் முதற்தடவையாக உலகக் கிண்ண இலங்கை வலைப்பந்தாட்ட குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

கடந்த வருடம் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற நான்கு அணிகள் பங்குகொண்ட நட்பு ரீதியிலான அழைப்பு வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணிக்ககாக அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட எழிலேந்தினி, அதன்பிறகு நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரிலும், அண்மையில் நிறைவுக்கு வந்த கென்யா, மலேஷியா மற்றும் இலங்கை இளையோர் வலைப்பந்தாட்ட அணிகள் பங்குகொண்ட நட்பு ரீதியிலான அழைப்பு வலைப்பந்தாட்டத் தொடரிலும் அவர் விளையாடியிருந்தார்.

இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியை சதுரங்கி ஜயசூரிய வழிநடத்தவுள்ளார். இவர் கடந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியை வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் இடம்பெற்றிருந்த சுரேகா கமகேவுக்குப் பதிலாக தீபிகா தர்ஷனியை உலகக் கிண்ண அணியில் இணைத்துக்கொள்ள இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேநேரம், இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவி மரீஷா பெர்னாண்டோ, சுரோகா குமாரி மற்றும் காயத்ரி கௌஷல்யா ஆகிய மூவரையும் மேலதிக வீராங்கனைகளாக அறிவிக்க இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆசியாவின் சிறந்த வீராங்கனையாக வரும் கனவுடன் எழில்

இலங்கை தேசிய வலைப்பந்து அணிக்கு தெரிவாகி, அண்மையில் நிறைவடைந்த….

இம்முறை உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் அடுத்த வருடம் ஜுலை மாதம் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையும், இரண்டாவது சுற்றுப் போட்டிகள் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையும், அரையிறுதி மற்றம் இறுதிப் போட்டிகள் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் இலங்கை அணி, ஜுலை 12ஆம் திகதி ஜிம்பாப்வே அணியுடனான முதல் போட்டியில் களமிறங்கவுள்ளதுடன், 13ஆம் திகதி வட அயர்லாந்துடனும், 14ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியுடனும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

1963ஆம் ஆண்டு முதல் உலக வலைப்பந்தாட்டப் போட்டித் தொடரில் விளையாடி வருகின்ற இலங்கை அணி, இறுதியாக 2015ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் விளையாடியிருந்தது. பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய குறித்த தொடரில் இலங்கை கடைசி (16) இடத்தைப் பெற்று ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது.

அறிவிக்கப்பட்டுள்ள உலகக் கிண்ண இலங்கை வலைப்பந்தாட்ட அணி:

சதுரங்கனி ஜயசூரிய (அணித்தலைவி), கயனி திஸாநாயக்க (உப தலைவி), தர்ஜினி சிவலிங்கம், ஹசிதா மெண்டிஸ், எழிலோந்தினி சேதுகாவலர், கயங்ஞலி அமரவங்ச, நவுஜலீ ராஜபக்ஷ, துலங்கா தனஞ்சலி, துலங்கி வன்னிதிலக்க, திலினி வத்தேகெதர, தர்ஷிகா அபேவிக்ரம, தீபிகா ப்ரியதர்ஷனி அபேகோன்

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<