பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தில் ஆடுவதை விரும்பாத இந்திய அணி?

366

இந்த ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் இருந்து பாகிஸ்தான் அணியை வெளியேற்ற, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI)  எழுத்து மூல கோரிக்கை ஒன்றை சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ஐ.சி.சி.) சமர்ப்பிக்க காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஐ.சி.சி உலகக் கிண்ணம், சம்பியன்ஸ் கிண்ணம் இந்தியாவிலேயே நடாத்தப்படும் – டேவிட் ரிச்சட்சன்

இந்தியாவில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஐ.சி.சி யின் முக்கியமான இரு தொடர்கள் ….

அதேநேரம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் இந்த கோரிக்கைக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் செவிசாய்க்காத பட்சத்தில் இந்தியா இந்த ஆண்டு இடம்பெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பில் பரிசீலனை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முன்னதாக இம்மாதம் 14ஆம் திகதி காஷ்மீரின் புல்வானா பிரதேசத்தில் இடம்பெற்றிருந்த தீவிரவாத தாக்குதல் ஒன்றில், இந்திய இராணுவப்படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிர் நீத்திருந்தனர்.

இந்த கொடூரமான வன் செயலுக்கு பாகிஸ்தானே காரணம் என இந்தியா முழுவதும் தற்போது எதிர்ப்பலைகள் கிளம்பியிருக்கும் நிலையில், இந்தியா பாகிஸ்தானுடனான அனைத்து வகையான தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என இந்திய நாடு முழுவதும் கோஷங்கள் எழுப்பபட்டு வருகின்றன.

இந்த எதிர்ப்பலைகள் கிரிக்கெட் விளையாட்டையும் விட்டு வைக்காத நிலையிலேயே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, பாகிஸ்தானை கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற கோரிக்கை விடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவராக சர்ப்ராஸ் அஹமட்

இந்த ஆண்டில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில், பாகிஸ்தான் …..

ஏற்கனவே, அரசியல் காரணங்களினால் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் பங்கேற்க விருப்பம் காட்டாமல் இருந்து வரும் இந்திய அணி, புல்வானா தாக்குதலுக்காக உலகக் கிண்ணத்தை புறக்கணிப்புச் செய்தாலோ அல்லது பாகிஸ்தான் அணியை வெளியேறுமாறு வற்புறுத்தினாலோ அது இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம்  இருந்து போட்டித்தடைகளை பெற்றுத்தரும் என கிரிக்கெட் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

எனினும், சர்வதேச கிரிக்கெட் வாரியம் இதுவரையில் இந்த விடயம் பற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தம்மிடையே எதையும் உத்தியோகபூர்வமாகவோ அல்லது உத்தியோகபூர்வமற்ற விதத்திலோ கலந்துரையாடவில்லை எனத் தெரிவித்திருக்கின்றது.

இதேநேரம், பாகிஸ்தானை உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற்ற கோரிக்கைகள் விடுக்கும் அளவிற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவுடமை அற்றதாக இருக்காது என இவ்விடயம் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

“ இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அப்படி எதனையும் செய்ய முடியாது. பூகோள ரீதியான தொடர் ஒன்றில் பங்கேற்கும் நாடு ஒன்றை பங்கேற்காமல் செய்ய கட்டளை விடுப்பது என்பது பேசுவதற்கு வேண்டும் என்றால் இலகுவாக இருக்கலாம். இது பல்நாட்டு தொடர், யாருடைய தனிப்பட்ட முடிவுக்காகவும் இடம்பெறும் தொடர் இல்லை. (இப்படியான முடிவு ஒன்றை எடுத்து) அவர்களே (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை) தங்களை முட்டாள்களாக ஆக்க முயற்சி செய்யக்கூடாது. “

முதல் பயிற்சிப் போட்டியில் தென்னாபிரிக்காவுடன் மோதும் இலங்கை அணி

இந்த ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டிகள்….

அதேவேளை நாடுகள் சில சங்கடமான நிலைமைகளினை எதிர்கொள்ளும் போது,  கிரிக்கெட் உலகக் கிண்ணம் போன்ற பல்நாட்டு தொடர்களில் பங்கேற்காமல் இருப்பதில்லை. இதற்கு பிபா கால்பந்து உலகக் கிண்ணம், ஒலிம்பிக் போட்டிகள் என்பவற்றை உதாரணமாக கொள்ள முடியும்  என இவ்விடயம் தொடர்பில் வெளியிடப்பட்ட மற்றுமொரு கருத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“ இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதற்கு ஆதரவு தரக்கூடாது. ஏற்கனவே பல நாடுகளுக்கு சங்கடம் தரும் நிகழ்வுகள் பல இடம்பெற்ற போதிலும் அவை பிபா தொடர், ஒலிம்பிக் தொடர் என்பவற்றை புறக்கணிக்கவில்லை. இது ஒரு அரசியல் சூழ்ச்சியே தவிர வேறில்லை. “

இந்திய அணி பாகிஸ்தானை வெளியேற்றும் செய்தி ஒரு புறமிருக்க உலகக் கிண்ணத்தில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகரில் நடைபெறுகின்றது. இப்போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்கள் அனைத்தும் நுழைவுச்சீட்டுக்கான விற்பனை  அறிவிக்கப்பட்டு மூன்று நாட்களுக்குள்ளேயே முழுமையாக விற்றுத் தீர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<