இந்தியாவின் பெங்களூருவில் நேற்றுமுன்தினம் (18) ஆரம்பமாகிய 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் A குழுவில் இடம்பெற்றுள்ள நடப்பு சம்பியன் இலங்கை அணி, தனது முதலாவது போட்டியில் பிலிப்பைன்ஸ் அணியையும், நேற்று நடைபெற்ற 2ஆவது போட்டியில் அறிமுக அணியான சவூதி அரேபியாவையும், இன்று (20) நடைபெற்ற 3ஆவது போட்டியில் வரவேற்பு நாடான இந்தியாவையும் வீழ்த்தி தொடர்ச்சியாக 3 வெற்றிகளைப் பெற்று அசத்தியுள்ளது.
இதில் சவூதி அரேபியாவுடனான போட்டியில் இலங்கை அணி 100 கோல்களைக் கடந்து அமோக வெற்றியைப் பதிவு செய்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
14 நாடுகள் பங்குபற்றுகின்ற 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் இந்தியாவின் பெங்களூரு, கோரமங்கலா உள்ளக அரங்கில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகியது. A, B என 2 குழுக்களாக நடைபெறுகின்ற இம்முறை போட்டியில் A குழுவில் இடம்பெற்றுள்ள நடப்புச் சம்பியனான இலங்கை அணி, பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா, இந்தியா, முன்னாள் சம்பியன் மலேசியா, ஜப்பான் மற்றும் மாலைதீவுகள் ஆகிய அணிகளை லீக் சுற்றில் எதிர்த்தாடும்.
இதன்படி, இலங்கை அணி தனது முதல் போட்டியில் பிலிப்பைன்ஸை 71 – 42 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதில் முதலாவது கால் மணி நேர ஆட்டத்தை 24 – 8 என்ற புள்ளிகள் கணக்கிலும், இரண்டாவது கால் மணி நேர ஆட்டத்தை 19 – 9 என்ற புள்ளிகள் கணக்கிலும் தனதாக்கிய இலங்கை அணி, இடைவேளைக்குப் பின்னர் நடைபெற்ற 3ஆவது கால் மணி நேர ஆட்டத்தை 17 – 13 எனவும், 4ஆவது கால் மணி நேர ஆட்டத்தை 17 – 10 எனவும் கைப்பற்றி, ஒட்டுமொத்த நிலையில் 73 – 44 புள்ளிகளை எடுத்து இலங்கை அணி வெற்றியீட்டியது.
இறுதியாக 2022இல் நடைபெற்ற ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில், பிலிப்பைன்ஸை 99-37 புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.
- ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு மூன்றாவது இடம்
- டயலொக் வலைப்பந்து சம்பியானகியது HNB
- ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் இன்று இந்தியாவில் ஆரம்பம்
இலங்கை அணி சார்பில் திசலா அல்கம 48 முயற்சிகளில் 47 கோல்களையும், ரஷ்மி பெரேரா 22 முயற்சிகளில் 20 கோல்களையும், ஹசித்தா மெண்டிஸ் 9 முயற்சிகளில் 6 கோல்களையும் போட்டனர்.
இந்த நிலையில், நேற்று (19) இரவு நடைபெற்ற சவூதி அரேபியாவுக்கு இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 118 – 5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தப் போட்டியின் முதல் காலிறுதியில் இருந்தே இலங்கை அணி வீராங்கனைகள் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டனர். முதல் காலிறுதியில் இலங்கை அணி 27 புள்ளிகளை பெற, சவூதி அரேபியாவிற்கு 02 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. இரண்டாவது காலிறுதிப் போட்டியில் சவூதி அரேபிய வீராங்கனைகள் ஒரு புள்ளியைக்கூட பெற இடமளிக்காமல் இலங்கை அணி 32 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது
இடைவேளையைத் தொடர்ந்;து நடைபெற்ற போட்டியின் மூன்றாவது காலிறுதியில் இலங்கை மேலும் 32 புள்ளிகளைப் பெற்ற நிலையில், சவூதி அரேபியா அணி ஒரு புள்ளியை மாத்திரமே பெற்றிருந்தது. ஆட்டத்தின் நான்காவது மற்றும் கடைசி காலிறுதியில் இலங்கை வீரர்கள் சவூதி அரேபியாவுக்கு 2 புள்ளிகளை மட்டுமே விட்டுக்கொடுக்க, மறுபுறத்தில் இலங்கை அணியால் மேலும் 27 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் ஒட்டுமொத்தமாக 118 – 5 எனற் புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை அணி மிக இலகுவாக வெற்றிபெற்றது.
இலங்கை சார்பில் அபாரமாக விளையாடிய ஹசித்தா மெண்டிஸ் 16 கோல்களையும், ரஷ்மி பெரேரா 24 கோல்களையும் போட்டனர்.
இதனிடையே, இலங்கை தனது 3ஆவது போட்டியில் வரவேற்பு நாடான இந்தியாவை இன்று (20) எதிர்த்தாடியதுடன், 81-31 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றியீட்டியதுடன், இம்முறை ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் ஹெட்ரிக் வெற்றியை ஈட்டிக் கொண்டது.
இதில் முதலாவது கால் மணி நேர ஆட்டத்தை 17 – 9 என்ற புள்ளிகள் கணக்கிலும், இரண்டாவது கால் மணி நேர ஆட்டத்தை 21 – 3 என்ற புள்ளிகள் கணக்கிலும் தனதாக்கிய இலங்கை அணி, தொடர்ந்து நடைபெற்ற 3ஆவது கால் மணி நேர ஆட்டத்தை 21 – 9 எனவும், 4ஆவது கால் மணி நேர ஆட்டத்தை 21 – 10 எனவும் கைப்பற்றிய இந்தியாவை வீழ்த்தியது.
இலங்கை சார்பில் திசலா அல்கம, ரஸ்மி பெரேரா மற்றும் ஷஹசித்தா மெண்டிஸ் கோல்களைப் போட்டு அசத்தியிருந்தனர்.
இதேவேளை, இலங்கை அணி, தனது 4ஆவது லீக் போட்டியில் ஜப்பான் அணியை நாளை மறுதினம் (22) சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<