இலங்கை கால்பந்து சம்மேளன தேர்தல் திகதியில் மாற்றம்

287

செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவிருந்த இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான பொதுத் தேர்தல் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதிக்கு மாற்றப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.  

இலங்கை கால்பந்தின் பொதுத் தேர்தல் செப்டம்பர் 16ஆம் திகதி

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வழங்கிய அனுமதிக்கு அமைய இலங்கை கால்பந்து சம்மேளத்தின் பொதுத் தேர்தலை நடாத்த செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி முன்னதாக தெரிவு செய்யப்பட்டிருந்தது 

இந்த நிலையில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் (FIFA) இருந்து கிடைத்த கடிதம் ஒன்றின் அடிப்படையில் தேர்தல் நடைபெறும் திகதியில் தற்போது மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 

மறுமுனையில் FIFA இன் அறிவுரைக்கு அமைய தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது வேட்புமனுக்களை சமர்ப்பிக்க இறுதித் திகதியாக இம்மாதம் 19ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருப்பதோடு, தேர்தலில் போட்டியிடும் உத்தியோகபூர்வ வேட்பாளர்கள் குறித்து அறிவிக்க இம்மாதம் 29ஆம் திகதி கால்பந்து சம்மேளனத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கின்றது. 

இதேநேரம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வேட்புமனுக்கள் தொடர்பிலான மேன்முறையீட்டுக்குரிய காலமாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதோடு, விடயங்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டு செப்டம்பர் 4ஆம் திகதி இறுதி பட்டியல் அறிவிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.   

அதேவேளை, மூன்று பேர் கொண்ட தேர்தல் குழுவொன்றும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த தேர்தல் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிபதி ULM. மஜீத், பந்துல அத்தபத்து மற்றும் உபாலி குணசேகர ஆகியோர் குழு உறுப்பினர்களாக உள்ளனர். 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<