தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான நான்கு நாட்கள் கொண்ட முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (27) நிறைவுக்கு வந்தது.
இரண்டாம் நாள் நிறைவில், துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டு துறைகளிலும் சிறப்பாட்டத்தை காண்பித்த தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி இலங்கை சார்பிலான அணிக்கு நெருக்கடி தந்திருந்தனர்.
இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்காக பந்துவீச்சில் அசத்திய புஷ்பகுமார
தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி …
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி, இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியுடன் இரண்டு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் ஆகியவை கொண்ட தொடர்களில் ஆடுகின்றது.
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக இரண்டு அணிகளுக்குமிடையில் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெறுகின்றது. இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமே இன்று (27) நடைபெற்றிருந்தது.
கட்டுநாயக்க மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆரம்பித்திருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடியிருந்த தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி, 7 விக்கெட்டுக்களை இழந்து முதல் இன்னிங்சுக்காக 318 ஓட்டங்களுடன் இருந்த நிலையில் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. களத்தில் பின்வரிசை வீரர்களாக வந்திருந்த ஈத்தன் போஸ்ச் 15 ஓட்டங்களுடனும், ஜூனைத் தாவூத் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.
இன்று போட்டியின் இரண்டாம் நாளில், பின்வரிசையில் வந்தாலும் மிகவும் சமார்த்தியமாக துடுப்பாடிய ஈத்தன் போஸ்ச் அரைச்சதம் ஒன்றை விளாசினார். அந்த வகையில் போஸ்ச் ஒரு சிக்ஸர் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களை 61 பந்துகளுக்கு பெற்றுத்தந்தார். இதேநேரம், அவரது துடுப்பாட்ட ஜோடியான ஜூனைத் தாவூத்தும் தனது பங்கிற்கு பெறுமதியான 31 ஓட்டங்களை சேர்த்திருந்தார்.
இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்சுக்காக 394 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில் தமது துடுப்பாட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்காக இன்றைய நாளில் ஒரு விக்கெட்டை சாய்த்த இடதுகை சுழல் வீரரான மலிந்த புஷ்பகுமார மொத்தமாக 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
தொடர்ந்து இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி, தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. தொடக்க வீரர்களாக வந்த மாதவ வர்ணபுர மற்றும் அணித்தலைவர் கெளஷால் சில்வா ஆகியோர் சோபிக்கத் தவறினர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஜொலிக்க தவறியது இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக ஆடுகளம் வந்த மத்திய வரிசை வீரர்களும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், ஒரு கட்டத்தில் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 66 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்தை காட்டியது.
எனினும், சாமிக்க கருணாரத்ன, ஷம்மு அஷான் ஆகிய வீரர்கள் பொறுமையான முறையில் அரைச்சதங்களைப் பெற்று அணியை மீட்க உதவினர். இவர்களின் அரைச்சதங்களோடு ஓரளவு சரிவிலிருந்து மீண்ட இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 53.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக பெற்றது.
இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி சார்பில், சாமிக்க கருணாரத்ன 61 ஓட்டங்களையும், சம்மு அஷான் 51 ஓட்டங்களையும் குவித்திருக்க ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரேனும், 20 ஓட்டங்களை தாண்டியிருக்கவில்லை.
தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில், நன்றே பர்கர், லுத்தோ சிபம்லா, ஈத்தன் போஸ்ச், ஜூனைத் தாவூத் மற்றும் ஒன்கே ன்யக்கு ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, தமது இரண்டாம் இன்னிங்ஸை 200 ஓட்டங்கள் என்ற நல்ல முன்னிலையுடன் ஆரம்பித்த தென்னாபிரிக்காவின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஒரு விக்கெட்டை பறிகொடுத்து 10 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. களத்தில் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் தலைவர் டொனி டி சொர்ஸி 4 ஓட்டங்களுடனும், ககிஸோ றபுலனா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.
தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியில் பறிபோயிருந்த விக்கெட்டை இலங்கை அணி சார்பாக மலிந்த புஷ்பகுமார சாய்த்திருந்தார்.
ஸ்கோர் விபரம்
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















