மாலைதீவுடனான விறுவிறுப்பான ஆட்டத்தை சமப்படுத்திய இலங்கை

431

2018ஆம் ஆண்டிற்கான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்து சம்மேளன தொடருக்காக தற்பொழுது  தஜிகிஸ்தானில் நடைபெற்று வரும் தகுதிகாண் தொடரில் மாலைதீவு அணியுடனான போட்டியை பதில் வீரராக களம் நுழைந்த நெத்ம மல்ஷானின் கோலோடு 2-2 என்கிற கோல்கள் கணக்கில் இலங்கை சமநிலைப்படுத்தியுள்ளது.

குழு B இன் ஆரம்பப் போட்டியாக அமைந்த இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர்கள் தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்று 24 மணித்தியாலங்களுக்குள் பங்கேற்றிருந்ததால் போதிய பயிற்சிகள் இன்றியும், நீண்ட பிரயாணம் என்பதால் களைப்புடனும் மாலைத்தீவு அணியினை எதிர்கொண்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில் ஆரம்பமாகிய போட்டியின் 15ஆவது நிமிடத்தில் றிஷ்வான் இஸ்மாயில் பெற்றுக் கொண்ட கோலோடு மாலைத்தீவு அணியானது சிறந்த தொடக்கத்தினைப் பெற்றுக்கொண்டது.

எனினும் கொழும்பு புனித பேதுரு கல்லூரியின் இளம் வீரர் சபீர் ரஷூனியா போட்டியின் முதற்பாதி நிறைவடைய முன்னர் பெற்ற கோலின் மூலம் இலங்கை வீரர்கள் மாலைதீவின் கோலுக்கு பதிலடி தந்தனர்.

முதற்பாதி: மாலைதீவு  1 – 1 இலங்கை

போட்டியின் இரண்டாம் பாதி ஆரம்பமாகி ஒரு நிமிடத்தின் பின்னர் முசன்னிப் மொஹமட்டின் கோலோடு மாலைதீவு மீண்டும் போட்டியில் முன்னேற்றம் அடைந்து இலங்கை கனிஷ்ட அணிக்கும் அழுத்தம் தரத் தொடங்கியது.

போட்டியின் இறுதியில், கோல்களில் 2-1 என மாலைதீவு முன்னிலை பெற்றிருந்த போது, தமக்கு கிடைத்த வாய்ப்பு ஒன்றின் மூலம் இலங்கை அணி போட்டியினை சமநிலைப்படுத்திக் கொண்டது. இரண்டாம் பாதியில் பதில் வீரராக நுழைந்த நெத்ம மல்ஷான் போட்டியின் மேலதிக நேரத்தில் பெற்ற கோலொன்றின் மூலம் இலங்கை அணிக்கான சமநிலை கோலினைப் பெற்றுத்தந்தார்.

முழு நேரம்: மாலைதீவு 2 – 2 இலங்கை

கோல் பெற்றவர்கள்

  • மாலைதீவு – றிஷ்வான் இஸ்மாயில் 15’, முஷன்னிப் மொஹமட் 46’
  • இலங்கை – சபீர் ரஷூனியா 44’, நெத்ம மல்ஷான் 90+2’ 

மஞ்சள் அட்டைகள் 

  • மாலைதீவு –  அப்துல்லா யாமீன் 84’
  • இலங்கை – பதும் விமுக்தி 40’