கொரோனாவினால் இடைநிறுத்தப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது பகுதியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்த இலங்கை கிரிக்கெட் சபை முன்வந்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற 14ஆவது IPL தொடர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நடுவில் இடைநிறுத்தப்பட்டது. இதன்படி, எஞ்சியுள்ள போட்டிகளை T20 உலகக் கிண்ணத்துக்கு முன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு BCCI திட்டமிட்டு வருகின்றது.
IPL ஐ நடத்த இங்கிலாந்து கவுண்டி அணிகள் ஆர்வம்
இதனிடையே, IPL தொடரை நடத்த இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் தமது விருப்பத்தை தெரிவித்திருந்தன. இந்த நிலையில், நான்காவது நாடாக இலங்கையும் IPL கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமைத்துவக் குழுவின் தலைவர் அர்ஜுன டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,
”எதிர்வரும் செப்டம்பர் மாதம் IPL கிரிக்கெட் போட்டிகளை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். ஐக்கிய அரபு இராச்சியத்தில் IPL தொடரை நடத்த முதல் வாய்ப்பாக பிசிசிஐ கருதுவதாக தெரியவந்தது.
அப்படியிருக்கையில் இலங்கை கிரிக்கெட் சபையும் இதற்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ளது. குறிப்பாக, எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை நடத்த நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். அப்படியிருக்கையில் அடுத்ததாக IPL கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக எங்களால் நடத்த முடியும்” என தெரிவித்தார்.
மாலைதீவுகளில் தனிமைப்படுத்தப்பட்ட மஹேல ஜயவர்தன
முன்னதாக, இலங்கையில் IPL போட்டிகள் சிலவற்றை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
அது மட்டுமல்லாமல் இந்தியாவில் வருட பிற்பகுதியல் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் சிலவற்றை இணைந்து நடத்துவதற்கு இலங்கை தயாராக இருப்பதாகவும் இது குறித்து ICCயுடனும் BCCIயுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் இலங்கையில் தற்போது கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதால் IPL போட்டிகளை இங்கு நடத்த முடியுமா என்ற கேள்வி நிலவுகின்றது.
சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் மைக் ஹஸிக்கு கொரோனா
அதுமாத்திரமின்றி, IPL தொடரை நடத்துவது தொடர்பில் இதுவரை இலங்கை கிரிக்கெட் சபையிடம் இருந்து BCCIஇற்கு எழுத்துப்பூர்வமான கோரிக்கை முன்வைக்கப்படவில்லை.
கடந்த ஆண்டும் போட்டியை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்தது. ஆனால், இந்திய கிரிக்கெட் சபை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு முன்னுரிமை கொடுத்தது.
இதுஇவ்வாறிருக்க, BCCIஐ பொறுத்தவரையில் இன்னும் IPL தொடரின் எஞ்சிய போட்டிகளை எங்கு நடத்துவது தொடர்பாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…