மாலைதீவுகளில் தனிமைப்படுத்தப்பட்ட மஹேல ஜயவர்தன

Indian Premier League - 2021

161
BCCI

இந்தியன் பிரீமியர் லீப் (IPL) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்ற மஹேல ஜயவர்தன, மாலைதீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கொரோனா பாதுகாப்பு வலயத்தில் இருந்தும் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து IPL போட்டித் தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைப்பு

இந்த நிலையில், IPL போட்டியில் விளையாட வந்த வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு ஒவ்வொரு அணி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்தது

இதில் கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவுக்கான பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மட்டும் தனது வெளிநாட்டு வீரர்களை தனி விமானம் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்திருந்தது. 

இதன்படி, IPL  போட்டியில் பங்கேற்ற நியூசிலாந்து அணி வீரர்கள் .சி.சி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவிலிருந்து நேராக இங்கிலாந்துக்குச் செல்கிறார்கள்

அத்துடன், IPL போட்டியில் பங்கேற்ற 11 இங்கிலாந்து வீரர்களில் 8 பேர் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்கள்

இந்த நிலையில், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 11 வீரர்களும், மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த வீரர்களும் ஒரே விமானத்தில் சொந்த நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

அத்துடன், IPL போட்டியில் பங்கேற்றிருந்த பங்களாதேஷ் அணி வீரர்களான சகிப் அல் ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தனி விமானம் மூலமாக நேற்று (06)  தங்கள் நாட்டுக்கு சென்றடைந்தனர். 

இதுஇவ்வாறிருக்க, இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா செல்வோருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தற்காலிக தடைவிதித்தது. இதனையடுத்து IPL தொடரில் பங்கேற்ற அவுஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் வர்ணணையாளர்கள் நேரடியாக அவுஸ்திரேலியா செல்வதற்கு தடையேற்பட்டது.

இதன்காரணமாக அவர்கள் மாலைதீவுகள் சென்று அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ததன் பின்னர் அங்கிருந்து வேறு விமானத்தின் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு பயணிப்பதற்கு இந்திய கிரிக்கட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக நேற்று காலை இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 வீரர்கள் உட்பட மொத்தம் 40 பேர் மாலைதீவுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதேவேளை, இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு இலங்கை அரசாங்கமும் தற்காலிக தடை விதித்துள்ளதால் IPL தொடரில் பங்கேற்ற இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் மைக் ஹஸிக்கு கொரோனா

எவ்வாறாயினும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன நேற்றைய தினம் மும்பை அணிக்குச் சொந்தமான தனி விமானம் மூலம் மாலைதீவுகளுக்குப் புறப்பட்டுச் சென்றதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாலைதீவுகளுக்குச் சென்றுள்ள மஹேல ஜயவர்தன, 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனிடையே, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இயக்குனராக செயற்பட்ட குமார் சங்கக்கார மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயற்பட்ட முத்தையா முரளிதரன் ஆகிய வீரர்களும் மாலைதீவுகளுக்குச் சென்று சுய தனிமைப்படுத்தலில் இருந்த பிறகு நாடு திரும்புவார்கள் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…