வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்கிய இலங்கை கிரிக்கெட் சபை

489
 

இலங்கை கிரிக்கெட் அணியினைச் சேர்ந்த வீரர்கள் சிலர் நடைபெற்று முடிந்த தென்னாபிரிக்கா – இலங்கை அணிகள் இடையிலான T20 தொடரில் வேண்டுமென்றே மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்கள் என ஊடகங்களில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) குறிப்பிட்டிருக்கின்றது.

உபாதைகளால் இலங்கையின் T20 உலகக் கிண்ண அணியில் மாற்றங்கள்??

இந்த விடயம் தொடர்பில் இன்று (16) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை, தம்மிடம் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமைத்துவக் குழு (Team Management) மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வீரர்கள் என எந்த வீரர்கள் பற்றியும் முறைப்பாடுகளை வழங்கியிருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

இன்னும் இலங்கை கிரிக்கெட் சபை தமது ஊடக அறிக்கையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரினை 2-1 என வெற்றி பெற்ற அதே அணியே, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20 தொடரிலும் விளையாடியிருந்ததாக தெரிவித்திருந்ததோடு குறித்த அணி சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஒருநாள் சுபர் லீக் புள்ளி அட்டவணையில் இலங்கை முன்னேற காரணமாக இருந்த சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியதாகவும் சுட்டிக் காட்டியிருக்கின்றது.

Video – இலங்கை அணியின் பயிற்சியாளராக இணையும் Lasith Malinga?

அண்மைய நாட்களில், முக்கியமான கிரிக்கெட் தொடர்களில் வெற்றி பெற்று சரியான பாதையொன்றில் பயணிக்க ஆரம்பித்திருக்கும் இலங்கை அணியின் மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவது, இலங்கை அணியின் T20 உலகக் கிண்ண தயார்படுத்தல்களை பாதித்து, வீரர்களின் மனநிலைக்கும் அது பங்கமாக அமையும் என தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபை இவ்வாறான பொய் பிரச்சாரங்களை பரப்பும் செய்தி நிறுவனங்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…