உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அதிரடி முன்னேற்றம்

World Test Championship 2023-2025

44

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 – 2025 பருவகாலத்திற்கான போட்டிகன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதன் ஓர் அங்கமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி விளையாடி வருகிறது. அதேபோல பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியும் விளையாடி வருகிறது 

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று (23) நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 63 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியது 

அதேபோல, சுற்றுலா பங்களாதேஷ்இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகியது. சென்னையில் நடைபெற்ற இப் போட்டியில் இந்திய அணி 280 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது 

இதன்படி, இந்த 2 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. 

இதில் பங்களாதேஷ் அணிக்க்கு எதிரான வெற்றியின் மூலம், இந்திய அணி 12 புள்ளிகளைப் பெற்று உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் 71.67 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. மறுபுறத்தில் இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பங்களாதஷ் அணி 39.29 சதவிகித வெற்றிகளுடன் 6ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் 63 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 – 2025 பருவகாலத்திற்கான தரவரிசைப் பட்டியலில் 3ஆம் இடத்திறகு முன்னேறியுள்ளது. மறுபுறத்தில் இலங்கையுடனான முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி ஒரு இடம் சரிந்து 4ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. 

காலி டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு முன், இலங்கை அணி 42.86 சதவிகித வெற்றிகளுடன் 5ஆவது இடத்தில் இருந்தது. இலங்கை அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 50மூ புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

எனவே நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் மூலம், 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ற நம்பிக்கையை இலங்கை அணி மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளது 

இதேவேளை, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் இங்கிலாந்து 5ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 6ஆவது இடத்திலும் உள்ளன. தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் முறையே 7ஆம், 8ஆம், 9ஆம் இடங்களில் உள்ளன. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<