தெற்காசிய மெய்வல்லுனர் அரங்கை கலக்கிய தங்க மகள் டில்ஷி

139

நேபாளத்தில் அண்மையில் நிறைவுக்கு வந்த 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG) இலங்கை சார்பாக அதிக தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்த போட்டி நிகழ்ச்சியாக மெய்வல்லுனர் விளையாட்டு காணப்பட்டது.

இம்முறை போட்டிகளுக்காக பங்கேற்கச் சென்ற ஒருசில முன்னணி மெய்வல்லுனர்கள் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டாலும், இலங்கை மெய்வல்லுனர் அணி ஒட்டுமொத்தமாக 15 தங்கம், 12 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் உள்ளட்டங்கலாக 34 பதக்கங்களை வென்று அசத்தியது.  

இதன்மூலம் தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவை பின்தள்ளி இலங்கை மெய்வல்லுனர் அணி அதிக தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை சிறப்பம்சமாகும்.

SAG போட்டிகளில் 250 பதக்கங்களை வென்று வரலாறு படைத்த இலங்கை

நேபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்கராவில் …….

இதேநேரம், அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற ஒருசில முன்னணி வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களை குவித்தனர்

இதில், மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை சார்பாக 3 தங்கப் பதக்கங்களை வென்ற ஒரேயொரு வீராங்கனையாக 20 வயதுடைய டில்ஷி  குமாரசிங்க இடம்பிடித்தார்

400 மீற்றர்தங்கம்

பெண்களுக்கான 800 மீற்றர் மற்றும் 4x400 மீற்றர் அஞ்சலோட்ட அணியின் ஒரு உறுப்பினராக நேபாளம் நோக்கி புறப்பட்டுச் சென்ற டில்ஷி குமாரசிங்க, டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நதீஷா ராமநாயக்கவுக்குப் பதிலாக பெண்களுக்கான 400 மீற்றரில் களமிறங்கினார்.

எந்தவொரு முன் ஆயத்தமுமின்றி மாற்று வீராங்கனையாக குறித்த போட்டியில் பங்குகொண்ட டில்ஷி, அபாரமாக ஓடி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியில் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதால் அவருக்கு தெற்காசிய போட்டிகளில் 400 மீற்றரில் பங்குபற்றும் வாய்ப்பு கிட்டவில்லை

எனினும், 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்ற வந்த நதீஷா ராமநாயக்க டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட காரணத்தில் போட்டி நடைபெறுவதற்கு ஒருநாள் எஞ்சியிருக்கையில், எந்தவொரு பயிற்சிகளும் இன்றி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி தங்கம் வென்று அசத்தினார் டில்ஷி. போட்டியை அவர் 54.30 செக்கன்களில் நிறைவு செய்தார்.

”நான் 400 மீற்றரில் ஓடுவதற்கு சரியான முறையில் எந்தவொரு பயிற்சிகளையும் எடுக்கவில்லை. இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் 800 மீற்றர் ஓடுவதற்கு ஆயத்தமாகி வந்தேன்

ஆனால், திடீரென நதீஷாவுக்குப் பதிலாக என்னை ஓடச் சொன்னவுடன் சற்று தயங்கினேன். ஆனாலும், எனது பயிற்சியாளர் வழங்கிய தைரியத்தினால் நான் ஓடுவதற்கு தீர்மானித்தேன். இறுதியில் தங்கம் வென்று நதீஷாவுக்கும், இலங்கைக்கும் பெருமையைத் தேடிக் கொடுத்தேன்” என போட்டியின் பிறகு டில்ஷி தெரிவித்தார்

800 மீற்றர் தங்கம்

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீற்றரில் தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை பெண்கள் மெய்வல்லுனர் அணியின் தலைவியான நிமாலி லியனாஆரச்சி, இலங்கை அணி நேபாளத்துக்கு புறப்பட்டுச் செல்ல ஒருநாள் முன்னதாக துரதிஷ்டவசமாக வாகன விபத்தில் சிக்கி காயத்துக்குள்ளானார். இதனால் அவருக்கு இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்ற முடியாமல் போனது

நிமாலியின் தங்கப் பதக்க கனவு கலைந்ததையடுத்து டில்ஷியின் மீது அந்த பொறுப்பு கைமாறியது. இதனையடுத்து பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் களமிறங்கிய  அவர், இலங்கையின் நடப்பு தேசிய சம்பியனான கயன்திகா அபேரத்னவை பின்தள்ளி தங்கம் வென்றார். போட்டியை அவர் 2 நிமிடங்கள் 06.18 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இந்தப் போட்டியில் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 2 தடவைகள் தங்கம் வென்ற இந்தியாவின் பி.யு உஷா மற்றும் 2016 ஆசிய கனிஷ் மெய்வல்லுனரில் தங்கம் வென்ற மற்றுமொரு இந்திய வீராங்கனையான லில்லி தாஸ் ஆகிய பிரபல வீராங்கனைகளை 20 வயதுடைய டில்ஷி குமாரசிங்க வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

குறித்த போட்டியின் பிறகு கருத்து டில்ஷி, ”நான் 2016இல் லில்லி தாஸுடன் ஆசிய கனிஷ் மெய்வல்லுனரில் ஓடியிருந்தேன். அவர் அதில் தங்கப் பதக்கம் வென்றார். எனவே இந்தப் போட்டியிலும் என்னை வீழ்த்தி தங்கம் வெல்வார் என எதிர்பார்த்தேன்” என்றார். 

அஞ்சலோட்டத்தில் அபாரம்

மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதி நாளன்று நடைபெற்ற பெண்களுக்கான 4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் பங்குகொண்ட டில்ஷி, தனது அபரிமிதமான திறமையை வெளிப்படுத்தி இலங்கைக்கான 3ஆவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார்

அதாவது 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று சுமார் ஒரு மணித்தியாலம் செல்வதற்குள் அவர் பெண்களுக்கான 4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் களமிறங்கினார்

இந்தப் போட்டியில் ஓமாயா உதயங்கனி, கயன்திகா அபேரத்ன, கௌஷல்யா லக்மாலி, டில்ஷி குமாசிங்க ஆகியோர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

இதன் முதலாவது 400 மீற்றரை ஓடிய ஒமாயா உதயங்கனி சற்று தாமதமாக போட்டியை நிறைவுசெய்ததால் 2ஆவது கோல் பரிமாற்றத்தை எடுத்த கயன்திகா சற்று பின்னடைவை சந்தித்தார்

எனினும், 3ஆவது கோல் பரிமாற்றத்தை எடுத்த கௌஷல்யா லக்மாலி பலத்த போட்டியைக் கொடுத்து இரண்டாவது வீராங்கனையாக வந்து அதை டில்ஷியிடம் கொடுத்தார்.

800 மீற்றர் இறுதிப் போட்டியை 2 நிமிடங்கள் 06.18 செக்கன்களில் ஓடிமுடித்து ஒரு மணித்தியாலம் செல்வதற்குள் 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் களமிறங்கிய 20 வயதுடைய இளம் வீராங்கனையான டில்ஷி குமாரசிங்க, முதல் 200 மீற்றரில் இரண்டாவது வீராங்கனையாக சற்று இடைவெளியுடன் ஓடி வந்தார்.

ஆனால், இறுதி 200 மீற்றரில் தனது வேகத்தை அதிகரித்த டில்ஷி, முதலிடத்தில் இருந்த இந்திய வீராங்கனையை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார். குறித்த போட்டியை இலங்கை அணி 3 நிமிடங்கள் 44.89 செக்கன்களில் நிறைவு செய்தது.

இதன்படி, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் டில்ஷி குமாரசிங்க பெற்றுக்கொண்ட 3ஆவது தங்கப் பதக்கம் இது பதிவாகியது.

டில்ஷியின் ஆரம்பம்

இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுக்கு அதிகளவு வீரர்களை உருவாக்கிக் கொடுத்த பெருமை வலல்ல ரத்னாயக்க கல்லூரியைச் சாரும். அந்த வரிசையில் மிகவும் குறுகிய காலத்தில் தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்து தேசிய மெய்வல்லுனர் அரங்கில் காலடிவைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் டில்ஷி குமாரசிங்க.

கண்டி மாவட்டம், திகன தேர்தல் தொகுதியில் உள்ள ரஜவெல்ல கனிஷ் வித்தியாலத்தில் தனது ஆரம்ப கல்வியை மேற்கொண்ட அவர், சிறுவயது முதல் மெய்வல்லுனர் போட்டிகளில் ஆர்வமுடையவராக இருந்தார். 

11 வயதுக்குட்பட்ட பிரிவில் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்காக சென்ற போது  அவருடைய திறமையைக் கண்ட வலல்ல ரத்னாயக்க கல்லூரியின் மெய்வல்லுனர் பயிற்சியளார் சுசன்த பெர்னாண்டா டில்ஷியை தனது கல்லூரியில் சேர்த்தார்

அங்கு சென்று 15 வயதுவரை 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் மாத்திரம் பங்கேற்று வந்த அவர், 18 வயதுப் பிரிவில் இருந்து 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளிலும் பங்கேற்றார். அதுமாத்திரமின்றி, கரப்பந்தாட்டம், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிகளையும் பெற்றுக் கொண்டார்

எனவே, அன்று முதல் இன்று வரை மாகாண மட்ட மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் எந்தவொரு 400 மீற்றர், 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவாத ஒரு வீராங்கனை என்றால் அது டில்ஷி தான்.

டில்ஷியின் குடும்பத்தில் அவருடன் அம்மாவும், அப்பாவும் இருக்கின்றனர். திடீரென ஏற்பட்ட விபத்தினால் அவருடைய அப்பாவின் கை உடைந்துவிட்டது. தற்போது அவர் நிரந்தர தொழில் இன்றி இருக்கின்றார். அவருடைய அம்மா தற்போது தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகின்றார்

அம்மாவின் வருமானத்துடன், யாருடைய தயவுமின்றி பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சாதித்த டில்ஷி, இன்று இலங்கையின் நட்சத்திர மெய்வல்லுனர் வீராங்கனையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

விளையாட்டைப் போல கல்வியிலும் ஆர்வம் கொண்ட டில்ஷி, கடந்த வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு முகங்கொடுத்தார். கலைப் பிரிவில் கல்வி கற்ற அவர், சித்தி மற்றும் 2 சி சித்திகளுடன் பரீட்சையிலும் சித்தியடைந்தார்.

அதன்பிறகு இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட அவர், ஒரு மெய்வல்லுனர் வீராங்கனையாக தனது வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றார்.

ஆசியாவில் அசத்திய டில்ஷி

கடந்த வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ் சம்பியன்ஷிப்பில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் மற்றும் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தேசிய சாதனை படைத்து தங்கப் பதக்கங்களை வென்ற டில்ஷி குமாரசிங்க, குறித்த வயதுப் பிரிவில் சிறந்த வீராங்கனைக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

கடந்த வருடம் மே மாதம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஹெட்ரிக் தங்கப் பதக்கங்களை டில்ஷி குமாரசிங்க வெற்றி கொண்டார்

இதில் பெண்களுக்கான 400 மீற்றர், 800 மீற்றர் மற்றும் 4x400 அஞ்சலோட்டம் ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களை அவர் சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, கடந்த வருடம் ஜப்பானின் கிபு நகரில் நடைபெற்ற ஆசிய கனிஷ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை சார்பாக களமிறங்கிய டில்ஷி, பெண்களுக்கான 400 மீற்றரில் தேசிய கனிஷ் சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கத்தையும், பெண்களுக்கான 800 மீற்றரில் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தார்.

அத்துடன், குறித்த தொடரில் பெண்களுக்கான 4x400 அஞ்சலோட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை அணியிலும் இடம்பிடித்தார்

பின்லாந்தில் நடைபெற்ற 17ஆவது உலக கனிஷ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றரின் தகுதிகாண் போட்டியில் கடைசி இடத்தையும், பெண்களுக்கான 4x400 அஞ்சலோட்ட அணியிலும் இடம்பிடித்தார்.

இறுதியாக… 

வீரனாக சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும் நாட்டிற்கு உலக சம்பியன் பட்டமொன்றை, தங்கப் பதக்கமொன்றை ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்பது தான் கனவு

அது டில்ஷிக்கும் விதிவிலக்கல்ல. மிகவும் ஷ்டத்துக்கு மத்தியில் இன்று தேசிய மட்டத்தில் முன்னணி வீராங்கனையாக வலம்வந்து கொண்டிருக்கின்ற டில்ஷி, இலங்கை சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பதக்கமொன்றை வெற்றி கொள்ள வேண்டும் என்ற இலட்சியத்துடன் உள்ளார்

எனவே டில்ஷி போன்ற இளம் மெய்வல்லுனர்களை சரியான முறையில் பராமரிப்பது விளையாட்டுத்துறை அமைச்சின் பாரிய பொறுப்பாகும்

2024 ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கான பதக்கமொன்றை வென்று கொடுக்கின்ற அனைத்து திறமைகளையும் கொண்டுள்ள இந்த இளம் வீராங்கனைக்குத் தேவையான சகல வசதிகளையும் உடனடியாக பெற்றுக் கொடுக்க விளையாட்டுத்துறை அமைச்சு முன்வர வேண்டும்

 >>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<