மில்லியன் பவுண்ட்களை கேள்விக்குறியாக்கிய ஜொப்ரா ஆர்ச்சர்

262

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர், உயிரியல் பாதுகாப்பு விதிமுறையை மீறியமை, இங்கிலாந்து கிரிக்கெட்டின் இந்த பருவகாலத்துக்கு பாதிப்பாக அமைந்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் அஷ்லி கில்ஸ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு விதிகளை மீறிய ஆர்ச்சர் மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடத்தடை

இங்கிலாந்து கிரிக்கெட்டின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, தன்னுடைய வீட்டுக்கு சென்றுவந்த காரணத்தால், அர்ச்சர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்.

இங்கிலாந்து அணியின் இந்த பருவகாலத்துக்கான போட்டிகள், கொவிட்-19 வைரஸ் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்று வருகின்றது.  இந்தநிலையில், ஆர்ச்சரின் இந்த செயற்பாடானது இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் மில்லியன் கணக்கான பவுண்ட்களை கேள்விக்குறியாக்கியுள்ளது என அஷ்லி கில்ஸ் குறிப்பிட்டுள்ளார். 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர், பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடர்கள் பாதுகாப்பு கருதி ஏஜெஸ் போவ்ல் மற்றும் ஓல்ட் ட்ரெபோர்ட் மைதானங்களில் மாத்திரம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில், ஏதாவது தவறுகள் இடம்பெறுமாயின் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் ஒளிபரப்பு வருமானத்தை கேள்விக்குறியாக்கும்.

இங்கிலாந்து தொடருக்கான உத்தேச குழாத்தை அறிவித்த ஆஸி.!

“தொடருக்காக கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் தொடர்பில் நாம் தெளிவாக அறிவித்திருந்தோம். ஆனால், ஆர்ச்சர் அதனை புரிந்துக்கொள்ளவில்லை என்பதுடன், இதற்கு பின்னால் உள்ள விளைவுகள் தொடர்பிலும் சிந்திக்கவில்லை” என அஷ்லி கில்ஸ் தெரிவித்தார்.

முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பின்னர், ஆர்ச்சர் பிரைட்டனில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்றுள்ளார். எனினும், இவர் அதிக நேரங்கள் வீட்டில் இருக்கவில்லை எனவும், உடனடியாக திரும்பியிருந்தார் எனவும் கில்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட இவர்,

“ஆர்ச்சர் விதிமுறையை மீறியமை நன்னடத்தை தொடர்பான விடயமாகும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது அவருடைய தொழில் சம்பந்தமான விடயம் என்பதால், அதுதொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.

ஆர்ச்சர் மன்னிப்பு கோரியிருந்த போதும், அவரின் இந்த செயற்பாடு அணியின் ஒட்டுமொத்த வீரர்களுக்கும் ஏமாற்றத்தை வழங்கியுள்ளது. இளம் வீரர் என்பதால், தவறுகள் செய்வது வழக்கம். அவர் அதிலிருந்து கற்றுக்கொள்வார்” என மேலும் சுட்டிக்காட்டினார். 

எவ்வாறாயினும், தற்போது ஜொப்ரா ஆர்ச்சர் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்தப் போட்டியில் இவர் விளையாடுவதற்கு குறைந்த வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் குறிப்பிட்ட பயிற்றுவிப்பாளர் க்ரிஸ் சில்வர்வூட், “அஷ்லி கில்ஸூடன் ஆர்ச்சரை மூன்றாவது போட்டியில் இணைப்பது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்.

அதேநேரம், ஆர்ச்சருடனும் அதிக கலந்துரையாடல்களில் ஈடுபட்டோம். அவரது மனநிலையை சரிசெய்வதற்கான வேலைகளில் நாம் ஈடுபட்டு வருவதுடன், அவருக்கான உணவுகளை வழங்கவும், தொலைபேசி அழைப்புகளையும் மேற்கொண்டும் வருகின்றோம்.

அத்துடன், ஆர்ச்சருக்காக நான் வருத்தப்படுவதுடன், கடந்த 23 மணிநேரத்தில் அவர் அதிகமாக கற்றுக்கொண்டுள்ளார். அதிலிருந்து அவர் மீண்டுவருவார்” என குறிப்பிட்டார்.

இங்கிலாந்து அணி நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 207 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க