தொடர் வெற்றிகளுடன் முன்னேறும் இலங்கை A கிரிக்கெட் அணி

39

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்ற முக்கோண ஒருநாள் தொடரில் இன்று (15) இலங்கை A அணியானது ஆப்கான் A அணியினை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

>>முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை A கிரிக்கெட் அணி சிறந்த ஆரம்பம்

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை A அணியானது இந்த முக்கோண ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை, அயர்லாந்து மற்றும் ஆப்கான் ஆகியவற்றின் A கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து A அணியினை வீழ்த்திய இலங்கை A அணியானது அபுதாபியில் வைத்து ஆப்கானிஸ்தானை எதிர் கொண்டது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கான் A வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர். இதன்படி முதலில் துடுப்பாடிய ஆப்கான் A அணியானது 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை எடுத்துக் கொண்டது.

ஆப்கான் A அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் தார்விஷ் ரசூலி அசத்தல் சதத்துடன் 8 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 155 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை A கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் டில்சான் மதுசங்க 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்ற, மொஹமட் சிராஸ் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 249 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை A அணியானது சதீர சமரவிக்ரம, லஹிரு உதார ஆகியோரது சிறப்பாட்டங்களோடு 41.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றி இலக்கினை அடைந்தது.

இலங்கைத்தரப்பின் வெற்றியினை உறுதி செய்த சதீர சமரவிக்ரம 110 பந்துகளை மாத்திரம் எதிர் கொண்டு 2 சிக்ஸர்கள் மற்றும் 16 பௌண்டரிகள் அடங்கலாக 129 ஓட்டங்கள் எடுக்க, லஹிரு உதார 81 ஓட்டங்கள் பெற்றார். ஆப்கான் A அணியின் பந்துவீச்சில் கலீல் அஹ்மட் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை A அணியின் சதீர சமரவிக்ரம தெரிவானார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க<<