முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை A கிரிக்கெட் அணி சிறந்த ஆரம்பம்

Sri Lanka ‘A’ vs Ireland ‘A’ - Tri Series 2025

47

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று (13) ஆரம்பமாகிய முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை A அணியானது அயர்லாந்து A வீரர்களினை 45 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதோடு, தொடரில் சிறந்த ஆரம்பத்தினையும் பெற்றிருக்கின்றது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரருக்கு PSL போட்டிகளில் ஆட தடை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை, அயர்லாந்து மற்றும் ஆப்கான் ஆகியவற்றின் A கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரின் முதல் போட்டி இன்று (13) அபுதாபியில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து A வீரர்கள் முதலில் இலங்கை அணியினை துடுப்பாடப் பணித்தனர். அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை A அணியானது 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 264 ஓட்டங்களை எடுத்துக் கொண்டது.

இலங்கை A அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக சஹான் ஆராச்சிகே அரைச்சதம் விளாசி 96 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்கள் எடுக்க தரிந்து ரத்நாயக்க 35 ஓட்டங்கள் பெற்றார்.

அயர்லாந்து A அணியின் பந்துவீச்சு சார்பில் ஜோர்டன் தோமஸ் மேயஸ் மற்றும் லியம் மெக்கார்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, ஜோர்டன் நெயில் மற்றும் ஸ்கொட் மெக்பேத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 265 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய அயர்லாந்து A அணியானது இலங்கையின் சுழல் வீரர்களினை சமாளிக்க முடியாமல்

44.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 219 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றது.

அயர்லாந்து A அணிக்காக அதிகபட்சமாக சேம் டோப்பிங் 39 ஓட்டங்கள் எடுக்க, தரிந்து ரத்நாயக்க மற்றும் துஷான் ஹேமன்த ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பினை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை A அணியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த தரிந்து ரத்நாயக்க தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

>>மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க<<