தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வெற்றிகளை ஈட்டும் நட்சத்திர வீரர்களைக் உருவாக்கும் நோக்கில் கராத்தே, டென்னிஸ் மற்றும் கரப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களின் அபிவிருத்திக்காக விளையாட்டுத்துறை அமைச்சினால் நிதி உதவி அளிக்கப்படவுள்ளது.
இலங்கையில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயற்றிட்டங்களை உள்ளடக்கியதாக இந்த மூன்று விளையாட்டுக்களுக்குமான ஒப்பந்தங்கள் அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் கைச்சாத்திடப்பட்டன.
“2022இல் 100 இலங்கை வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி
இதில் சிறப்பம்சம் என்னவெனில் மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டுப் பேரவையினால் முன்மொழியப்பட்ட ஐந்து விளையாட்டுக்களில் மூன்று விளையாட்டுக்களுக்கு இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சு நிதி உதவியளிக்க முன்வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன்படி, கராத்தே தோ விளையாட்டுத்துறையை அபவிருத்தி செய்யும் பொருட்டு இலங்கை கராத்தே தோ சம்மேளனத்துக்கு 20 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு முன்வந்துள்ளது.
இதனை முன்னிட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர்நாயகம் அமல் எதிரிசூரியவும், இலங்கை கராத்தே தோ சம்மேளனத் தலைவர் சென்செய் கீர்த்தி குமாரவும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

டொரிங்டன் உள்ளக அரங்கில் அண்மையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் உதவித் தலைவர் சென்செய் நதித்த சொய்ஸா, கராத்தே தோ தேசிய தேர்வுக் குழு உறுப்பினர் சென்செய் அன்ரோ தினேஷ், தேசிய அணி பயிற்றுநர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், டென்னிஸ் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு 20 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு முன்வந்துள்ளது.

இதேவேளை, இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்யவும், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வீரர்களை உருவாக்கும் நோக்கிலும் 40 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு முன்வந்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் அண்மையில் காலி – தடல்ல விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் காஞ்சன ஜயரட்னவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க…




















